Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக சினிமா - த பேஸ் ரீடர் (The Face Reader)

உலக சினிமா - த பேஸ் ரீடர் (The Face Reader)
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (12:24 IST)
14 -ம் நூற்றாண்டின் இறுதியில் கொரியாவில் Joseon அரச பரம்பரை ஆட்சிக்கு வந்தது. அதன் ஐந்தாவது மன்னர் Munjong. இளவரசனாக 29 ஆண்டுகளை கழித்த பின் 1450 -ல் தனது 35 -வது வயதில் மன்னராக முடிசூடிக் கொண்டார். எதிர்பாராத விதமாக இரண்டே வருடங்களில் அவரது மரணம் சம்பவிக்கிறது. அவரது மகன் - சிறுவனான Danjong  அரியணை ஏறுகிறான். இந்த காலகட்டத்தை மையமாக வைத்து தென்கொரியாவில் சென்ற வருடம் த ஃபேஸ் ரீடர் படம் வெளியானது. 
எதிர்காலத்தை கணிக்கும் திறமையுள்ளவர்கள் எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறார்கள். முகத்தைப் பார்த்து ஒருவரின் குணத்தை கணித்து, அதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை ஆராய்ந்து சொல்கிறவர்கள் - ஃபேஸ் ரீடர்ஸ் . Munjong  ஆட்சிக் காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனது மகன் மற்றும் மைத்துனனுடன் வாழ்ந்து வந்த திறமைமிக்க ஃபேஸ் ரீடர் Nae-Kyung. இழந்து போன தனது குடும்ப கௌரவத்தை மீட்டெடுத்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கனவு காண்பவன். 
webdunia
அவனது திறமையை கேள்விப்பட்ட குறி சொல்லும் இளம் பெண்ணொருத்தி அவனை Hanyang  (சியோலின் அன்றைய பெயர்) நகரத்துக்கு அழைத்து வருகிறாள். அவனை வைத்து தனது தொழிலை விருத்தி செய்வது அவளது திட்டம்.

ஒருமுறை அரசு சம்பந்தப்பட்ட வழக்கில் கொலைகாரன் யார் என்பதை Nae-Kyung  சரியாக கண்டு பிடிக்கிறான். அதனைத் தொடர்ந்து புதிய பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறவர்கள் விசுவாசமிக்கவர்கள்தானா, வேலைக்கு தகுதியானவர்கள்தானா என்பதை அவர்களின் முகத்தைப் பார்த்து கணித்து சொல்கிறான் Nae-Kyung. விரைவில் அவனது திறமை மன்னரை எட்டுகிறது.
webdunia
தனது சிம்மாசனத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் என மன்னர் கருதும் நபர்களின் முகத்தைப் பார்த்து அவர்களின் உள்ளக்கிடக்கையை அறியும் வேலை Nae-Kyung -க்கு தரப்படுகிறது. முக்கியமாக மன்னரின் சகோதரனான இளவரசன் su-yang. இளவரசனை Nae-Kyung  பார்க்கிற சந்தாப்பம் ஏற்படுகிறது. அவனது முகக்குறிப்பு Nae-Kyung - க்கு சிரிப்பை வரவழைக்கிறது. மன்னரை கண்டு அவன் உள்ளூர நடுங்குவதை Nae-Kyung கண்டு கொள்கிறான். அவன் மன்னரிடம் தகவலை பகிர்ந்துகொள்ள மன்னர் நிம்மதியடைகிறார்.
webdunia
ஆனால் அதுவொரு சதி. தான் முகத்தைப் பார்த்து கணித்தது மன்னரின் சகோதரனை அல்ல, அவனது கீழ் பணியாற்றும் ஒருவனை என்பது Nae-Kyung -க்கு தெரிய வருகையில் காலம் கடந்துவிடுகிறது. மன்னர் இறந்து அவரது மகன் சிறுவனான Danjong அரியணை ஏறுகிறான். 

அவனை கொன்று அரியணையை கைப்பற்ற முயற்சிக்கிறான் இளவரசன் su-yang. இந்த அதிகாரப் போட்டியில் தனது வாழ்வின் ஒரே பிடிப்பான மகனை பறி கொடுக்கிறான் ஃபேஸ் ரீடர். தனது விருப்பங்களும், நம்பிக்கைகளும் கானல் நீராக, அவனுக்கு கிடைப்பதெல்லாம், காலம் பரிசளித்த வயோதிகத்தின் தனிமை மட்டுமே.
webdunia
Han-Jae-Rim இயக்கிய இப்படம் சென்ற வருடம் தென் கொரியாவில் 86 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. படத்தின் இசையும், காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்திய கலை இயக்கமும், காஸ்ட்யூம் தெரிவும் இதனை முக்கியமான படமாக்கியது. கொரியாவிலும் அதற்கு வெளியேயும் பல்வேறு விருதுகளை படம் வென்றது. 
webdunia
படத்தின் ஆரம்பத்தில் வயோதினான su-yang  தனது தலையை கொய்ய யாரோ முயற்சிக்கிறார்கள் என புலம்பிக் கொண்டேயிருக்கிறான். தலை கொய்யப்படுவாய் என்று ஃபேஸ் ரீடர் சொன்னதை அவன் முழுமையாக நம்புகிறான். கடைசிவரை அந்தப் பயம் அவனை நிம்மதியிழக்க செய்கிறது. ஃபேஸ் ரீடரின் மகனை கொன்றுவிட்டு, தனது மகன் இறப்பான் என்பது ஃபேஸ் ரீடருக்கு முன்பே தெரியுமா என்று எகதாளத்துடள் சிரித்த அவனே ஃபேஸ் ரீடரின் கணிப்புக்கு பலியாகிப் போகிறான். இயற்கையான சாவுதான் அவனுக்கு ஏற்படுகிறது. ஆனால் இறந்த பின்பும் ஃபேஸ் ரீடரின் வாக்கு பலித்ததாக படத்தின் இறுதியில் சொல்லப்படுகிறது.

மரணம் நிச்சயம் என்ற பின்பும் எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் ஆவல் மனிதனை எப்போதும் செலுத்தியபடியே இருக்கிறது. ஒருவரின் குணத்தை அறிந்து கொள்வதன் வழியாக எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என மனிதன் நினைக்கிறான். மன்னர் Munjong  அதற்குதான் முயல்கிறார். ஆனால் அவரும் அவருக்கு உதவும் ஃபேஸ் ரீடரும் சூழ்நிலைகள் மனிதனின் குணத்தை மாற்றிவிடுவதை உணர்வதில்லை. 
webdunia
படத்தின் இறுதியில் ஃபேஸ் ரீடர், நான் அலைகளைதான் கவனித்தேன். அதனை இயக்கும் காற்றை கவனிக்க தவறிவிட்டேன் எனும் போது படம் சொல்ல வரும் செய்தி முழுமையாகிறது. 
 
சரித்திர பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் மன்னர், இளவரசன், மன்னரின் மகன் என சில கதாபாத்திரங்கள் மட்டுமே உண்மையானவை. ஃபேஸ் ரீடர் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இயக்குனரின் புனைவு. படத்தில் ஃபேஸ் ரீடரின் கதாபாத்திரம் பல இடங்களில் மிக சாமான்யமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
webdunia

அவர் சீரியஸான மனிதனா, இல்லை விளையாட்டுபிள்ளையா என்ற குழப்பம் - ஃபேஸ் ரீடரின் மகன் சாகும்வரை நீடிக்கிறது. இது அந்த கதாபாத்திரம் மீதான அழுத்தத்தை நீர்க்க செய்கிறது. இயக்குனரே திட்டமிட்டு சாமானியனாக அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கலாம். எனில் அது அவர் செய்த பெரிய தவறு.
 
கதை சொல்லலிலும், காட்சிப்படுத்துதலிலும் கொரிய சினிமாக்கள் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்த ஃபேஸ் ரீடர்.

Share this Story:

Follow Webdunia tamil