Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநாயகர் வழிபாட்டில் ஆரோக்கியமும், ஆனந்தமும்!

விநாயகர் வழிபாட்டில் ஆரோக்கியமும், ஆனந்தமும்!
, வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (13:28 IST)
``ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே''
 
முழுமுதற் கடவுளாம் விநாயகர் ஐந்து கரங்களுடன் அபயம் அளிப்பவர். விநாயகரின் தோற்றமே விசித்திரமானது எனலாம். அதனையே இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.
ஐந்து கரங்களில் வலப்புறக் கையில் ஒன்று, பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது. மற்றொரு வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது. இடப்புறக் கைகளில் ஒன்றில் பாசக் கயிறும், மற்றொரு இடக்கையில் மோதகமும் (கொழுக்கட்டை) வைத்தபடி விநாயகர் காட்சி தருகிறார். ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
 
கொடியவர்களை ஒழிக்கும் ஆயுதமாக அங்குசத்தையும், தம்மை வழிபடும் அடியவர்களுக்குத் துன்பம் தருவோரை தமது பாசக்கயிற்றால் அழிக்கவே அதனைக் கையில் ஏந்தியுள்ளார். மற்றொரு கையில் அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டையை வைத்துள்ளார். துதிக்கையில் வைத்திருப்பது அமுதக் கலசம்.
 
அதாவது விநாயகரை மனமுருக வேண்டி வழிபடுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.
 

`ஆனை முகத்தனை ...' யானை போன்ற முகத்தைக் கொண்டிருப்பவர். இளம்பிறை (முழு நிலவின் ஒரு பகுதி - அரைவட்டம்) போன்ற வயிற்றைக் கொண்டிருப்பவர். நந்தி தேவரின் மகனாகப் பட்டவரை, ஞானமாகிய மிகச் சிறந்த அறிவு படைத்தவரை, புந்தியில் - நம் மனத்தில் என்றும் நினைத்து வணங்குவோமாக! - என்பதே அந்தப் பாடலின் பொருளாகும்.
webdunia
விநாயகரை வழிபடுவோருக்கு வினைகள் ஏதும் வராது. ஐந்து கரத்தானை வணங்குவோருக்கு ஞானம் பெருகி, நலம் பல பெருகும்.
 
முகத்தில் ஒரு கையை (துதிக்கை) கொண்டிருப்பதால், விநாயகரை ஒருகை முகன் என்றும் கூறுவர்.
 
விநாயகர் தத்துவம்
 
யானைத் தலையின் தத்துவம் யாதெனில் யானை சிறந்த அறிவு படைத்தது. யானையின் காதுகள் பெரியதாக இருப்பதால் நுண்ணிய சப்தத்தைக் கூட அதனால் கேட்க முடியும். புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் யானை ஒருங்கே எடுத்துக் கொள்வது போல, நாமும் எப்போதும் ஒரே மாதிரி இருத்தல் அவசியம் என்பதையே விநாயகரின் யானை முகம் உணர்த்துகிறது.
 
விநாயகரின் வாகனம் மூஞ்சுறு. இது இருளில் தான் சஞ்சரிக்கும். உணவுப் பொருட்களின் வாசனையைப் பிடித்துக்கொண்டே அவை எங்கிருக்கிறது எனக் கண்டு கொள்ளும். 
webdunia
ஆன்மீகத்தில் இருள் என்பது அஞ்ஞானத்தையும் வாசனை என்பது ஆசைகனையும் குறிக்கிறது. எனவே தான் அஞ்ஞானத்தையும் ஆசைகளையும் கட்டுப்பாட்டில் வைப்பவர் விநாயகர் என்பதை விளக்கவே அவற்றின் உருவமாக விளங்கும் மூஷிகத்தை (மூஞ்சுறு) வாகனமாகக் கொண்டுள்ளார்.
 
ஒருமுறை, கைலாயத்தில் சிவபெருமானும், பார்வதியும் தாயம் ஆடிக் கொண்டிருந்தார்களாம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவரை தீர்மானிக்கும் பொறுப்பு நந்திதேவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இதில் உண்மையில் ஈஸ்வரன் தோற்ற போதிலும், அவர் மீது நந்திக்கு இருந்த பெரும் அபிமானம் காரணமாக, ஈஸ்வரனே வென்றதாக தீர்ப்பு கூறினார்.
 
இதனால் சினம் கொண்ட பார்வதி தேவி, நந்தியை சபித்தாராம். பின்னர் பார்வதியின் பாதம் பணிந்து பாவ விமேசனம் கோரினார் நந்திதேவர். 
பார்வதியும் மனமிரங்கி, ``ஆவணி மாத சதுர்த்தியில் விநாயகரின் பிறந்த தினத்தன்று, உனக்குப் பிரியமான அறுகம்புல்லினால் அர்ச்சனை செய்தால் உன் சாபம் நீங்கும்'' என அருளினார்.
 
இதன்மூலம் சுயநலத்தை விடுத்து, பொதுநலம் வேண்டி, நமக்குப் பிடித்த பொருளைக் கொண்டு கடவுளைப் பூஜிக்க வேண்டும் என்பது தெரிகிறது. இதுவே உண்மையான விநாயக தத்துவமாகும்.
 
நைவேத்யப் பின்னணி
 
விநாயகருக்குப் படைக்கப்படும் நைவேத்யங்களில் முக்கியமானவை சுண்டல், கொழுக்கட்டை, எள் உருண்டை மற்றும் பழங்கள்.
 
பொதுவாக உடலுக்கு ஏற்ற ஆற்றலைத் தருபவை பழங்கள் எனலாம். எள்ளானது சுவாச சம்பந்தமான நோய்களையும், கண் நோய்களையும் தீர்க்கவல்லது. தவிர, நீராவியில் வேக வைக்கப்படும் கொழுக்கட்டை, சுண்டல் போன்றவை அஜீரணம் ஏற்படாமல் எளிதில் ஜீரணிக்கக் கூடிய பதார்த்தங்களாகும். 
 
எனவே ஆரோக்கியமும், ஆனந்தமும் ஒருசேர நம் முன்னோர்கள் விநாயகரை வழிபட்டு வந்துள்ளார்கள் என்பது புலனாகிறது. நாமும் முன்னோர்களைப் பின்பற்றி, அவர்கள் வழியில் விநாயகர் வழிபாடு செய்து ஆரோக்கியத்துடன் ஆனந்தத்தையும் பெறுவோம்!

Share this Story:

Follow Webdunia tamil