Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆமை கெ‌ட்ட சகுன‌த்‌தி‌ன் அடையாளமா?

Webdunia
திங்கள், 27 ஜூன் 2011 (20:47 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஆமை வீட்டிற்குள் புகுந்தால் கெட்ட சகுனம் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதன்பிறகு பல்வேறு பரிகாரம் செய்யப்பட்டது என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால், இந்து மதத்தின் சில கோயில்களுக்குப் போனால் விளக்கு ஏற்றி வைத்துள்ள மாடத்திற்கு கீழேயே ஆமையினுடைய உருவம்தான் இருக்கிறது. அரவிந்தரும், அன்னையும் கூட என்ன சொல்கிறார்கள் என்றால், இந்த உலகத்தின் அழியாமையை அது காட்டுகிறது என்று சொல்லிவிட்டு Terrestrial Immortality என்று ஆமையைப் பற்றி சொல்கிறார்கள். ஏன் இதுபோன்ற இரண்டு விதமாகக் கூறப்படுகிறது. கோயிலில் ஆமையினுடைய உருவம் வணங்கப்படக் கூடிய நிலை ஒரு பக்கத்தில் இருக்கிறது. மற்றொரு பக்கத்தில், அது வீட்டிற்குள் வரும் போது கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது ஏன்? நான் சில படங்களில் பார்த்திருக்கிறேன், அயல்நாடுகளில் ஆமைகளை வீடுகளில் கூட வளர்க்கிறார்கள். ஏன் இதுபோன்ற வித்தியாசம், வேறுபாடு?

ஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஆமையை தாராளமாக வளர்க்கலாம். மீன் வளர்ப்பு, வாஸ்து மீன் வளர்ப்பு போன்று, அரசு அனுமதித்தால் நட்சத்திர ஆமையைக் கூட வளர்க்கலாம். தவிர எல்லா ஆமைகளையும் வளர்க்கலாம். ஆனால், அது தானாக வந்து நுழையும் போது அது ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது என்று அர்த்தம். அதுதான் முக்கியம்.

பாம்பை நாம் வளர்க்கலாம். ஆனால் ஒரு விஷயத்திற்காகப் போகும் போது அரவம் குறுக்கிடக்கூடாது. அரவம் குறுக்கிடேல் என்று ஒரு பழமொழி இருக்கிறது. பாம்பு குறுக்கிடக்கூடாது. உங்களுடைய அனுபவத்தில் பார்த்தால் தெரியும். ஒரு முக்கியமாக விஷயத்திற்காகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். பாம்பு குறுக்கே போனால், அந்த விஷயம் சரியாக வராது. அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்ளலாம். எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று. பாம்பு குறுக்கே வந்தால், அதைப் பிடித்து அடிக்கக் கூடாது. அது உங்களுக்கு அறிவுறுத்துகிறது. அதனால், போகும் விஷயம் சாதகமாக இல்லையென்றாலும் அடுத்து என்ன பண்ணலாம் என்று அது நம்மை யோசிக்கத் தூண்டுகிறது. இப்படித்தான் சகுனங்களை நாம் யோசிக்க வேண்டும்.

விஷ்ணு பகவானுடைய தசாவதாரத்தில் 2வது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்பது ஆமையினுடைய வடிவம்தான். ஆமை என்பது என்னவென்றால், யாரையுமே எதிர்பார்க்காமல் தானே தனக்கு என்பது மாதிரி தன்னுடைய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. எல்லா விலங்குகளும் மழை பெய்தால் ஒதுங்கும், பதுங்கும். ஆனால் இதற்கு உடம்பே கூடு. கூடே உடம்பு. திருமூலர் ஆமையை வைத்து நிறைய தத்துவங்கள் சொல்லியிருக்கிறார். ஐம்புலன்களையும் அடக்கி வாழ வேண்டும். ஆமைபோல் அடங்கு என்பது போன்று தேவாரத்தில் எல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கு. அதுபோன்ற அம்சங்களெல்லாம் ஆமைக்கு உண்டு. ஆனால், அப்படிப்பட்ட ஆமை வரும் போது அவருடைய வாழ்க்கை ஒடுங்கப் போகிறது என்று அர்த்தம். ஒடுக்கத்தையும், அடங்கப் போவதையும், அடங்குதல் என்றால் செல்வம் அடங்கப் போகிறது என்று அர்த்தம். அதை உணர்த்ததான் வருகிறது. அந்த இடத்தை விட்டு விலகிப் போய்விடு, உனக்கு ஆபத்து வருகிறது. இந்த இடத்தில் இருந்தால் உனக்கு சிக்கல்கள் அதிகம். அதைத்தான் சொல்ல வருகிறது. ஆமை என்பது என்ன, தன்னைத்தானே ஒடுங்கிக்கொள்கிறது ஒரு வடிவம்.

நந்தி பகவானையும் இ‌ப்படி‌த்தா‌ன் சொல்வார்கள், நாக்கை நீட்டிக்கிட்டு ஏன் எல்லா சிவாலயங்களிலும் நந்திகளை வைக்கிறார்கள். தேடல், அது தேடலுக்குரிய அடையாளம். நாக்கை நீட்டிக்கொண்டு ஒரு 40 டிகிரி கோணத்தில் நந்தி இருப்பார். நேராக இருப்பது போன்று புராதனக் கோயில்களை நந்திகளைப் பார்க்க முடியாது. 40 டிகிரி கோணத்தில் இருக்கும். செவி கேட்கும் திறன், அதன்பிறகு உள்ளுக்குள் தனது சந்தேகங்களையும் கேட்கிறார்கள். சிவன் சொல்லக்கூடிய கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய கருத்துகள், வினாக்கள், சந்தேகங்களையும் கேட்கிறார். அதையெல்லாம் குறுப்பிடித்தான் அதுபோன்று நந்தி சிலையை அங்கு வைத்தது. அதுபோலத்தான் ஆமையும். அது வந்து நுழைந்தால், உனக்கு இடர்பாடு இருக்கிறது, இதற்குமேல் இந்த இடத்தில் நீ இருக்காதே, கிளம்பிவிடு என்று சொல்ல வருவதுதான் அதன் கருத்து.

அதனால், இதையெல்லாமே கெட்ட சகுனம் என்று எடுத்துக் கொள்வதைவிட, கெடுதல் நடக்கப் போகிறது என்பதை உணர்த்துவதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களெல்லாம் சொல்வதையும் தாண்டி இதுபோன்ற ஜீவ ராசிகள் நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லும். மத குரு, குல குரு இவர்களெல்லாம் சொல்ல முடியாத விஷயங்களை ஆமையும், வவ்வாலும், நாயும், பூனையும், பசுவும் நமக்குச் சொல்லும். மற்றவர்கள் காசு கொடுத்தால் சொல்லக்கூடிய விஷயத்தை காசு கொடுக்காமலேயே இயல்பாகவே நமக்கு உணர்த்தக்கூடியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments