Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாரத ரத்னா' நெல்சன் மண்டேலா - சிறப்புக் கட்டுரை

தேமொழி
வெள்ளி, 18 ஜூலை 2014 (13:12 IST)
ஜூலை 18: நெல்சன் மண்டேலா தினம்
 
நிறவெறிக்கு எதிராக வன்முறையற்ற அறப் போர் செய்த நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013) தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பினைப் பெற்றவர்.
 
உரிமைக்காகப் போராடிய இவரது நடவடிக்கைகள் கண்டிக்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு  27 ஆண்டுகள் சிறையில் வாடியவர் இவர். நெல்சன் மண்டேலா, 2013 டிசம்பர் மாதம் தனது 95ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு மறைந்தார்.



அவர் நினைவைப் போற்றும் வண்ணம் இந்த 2014ஆம் ஆண்டு, அவருடைய 96ஆவது பிறந்த நாளுக்குக் கூகுள் நிறுவனம், ஒரு சிறப்பு டூடில் வரைபடம் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது. விடுதலைக்கான அவரது நீண்ட பயணத்தில் அவராற்றிய உரைகளைத் தொகுத்து வழங்கியுள்ளது இந்தப் படம். 
 
"கல்வி என்னும் ஆயுதம் உலகினை மாற்றும் சக்தி வாய்ந்தது", "ஒருவர் தோல்வியே அடையாததால் உலகப் புகழ் பெறுவதில்லை, ஒவ்வொரு தோல்வியிலும் துவளாது மீண்டு எழுவதில்தான் புகழ் பெறுகிறார்" என்பவை அவர் உதிர்த்த சிறந்த பொன்மொழிகளில் சில.  
 
இந்திய அரசு  உலக அமைதிக்காக நெல்சன் மண்டேலா ஆற்றிய அரும்பணியைப் பாராட்டி அவருக்கு "நேரு சமாதான விருது" வழங்கியது. ஆனால் அவர் சிறையில் இருந்த காரணத்தினால் அவரது சார்பில் அவருடைய மனைவி வின்னி மண்டேலா டெல்லிக்கு வந்து அந்த விருதினை ஏற்றுக்கொண்டார்.  அத்துடன் நெல்சன் மண்டேலாவிற்கு  இந்தியாவின் "பாரத ரத்னா" விருதையும் 1990இல் வழங்கி இந்தியா அவரைக் கௌரவித்தது. இந்தியர் அல்லாத ஒருவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்ற சிறப்பைப் பெற்றவர் நெல்சன் மண்டேலா.
 
தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாகிரக அமைப்பு அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான "மகாத்மா காந்தி சர்வதேச விருதை" நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. உலக அமைதிக்கான "நோபல் பரிசும்" 1993ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. 

 
மனித உரிமைகளை மேம்படுத்துதல், ஆண்-பெண் சம உரிமைக்குப் பாடுபடுதல், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலர வேண்டித் தொண்டாற்றுதல் என மக்கள் நலனை முன்னிறுத்தி சேவை செய்த நெல்சன் மண்டேலாவின் உழைப்பைப் போற்றுவதற்காக அவரது பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதியை அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மன்றம் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது.  இவ்வறிவிப்பைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு முதல் "அனைத்துலக நெல்சன் மண்டேலா தினம்" கொண்டாடப்படுகிறது.
 
"யாரும் பிறக்கும் பொழுதே நிறத்திற்காகவும், மதத்திற்காகவும், பிற பின்புலத்திற்காகவும் மற்றவரை வெறுக்கும் எண்ணத்துடன் பிறந்ததில்லை, ஒருவர் அவ்வாறு வெறுக்கக் கற்றுக் கொண்டாரானால் அவரை விரும்புவதற்கும் பழக்கப்படுத்த முடியும், ஏனெனில் அன்பு செலுத்துவது என்பது வெறுப்பதைவிட மக்களுக்கு இயல்பாக வருவது", என்ற அவரது பொன்மொழியை இந்த நாளில் நினைவுகூர்வோம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

Show comments