Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' பாடல் பிறந்த கதை - கார்க்கி

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' பாடல் பிறந்த கதை - கார்க்கி
, புதன், 26 நவம்பர் 2014 (17:24 IST)
அட்டகத்தி தினேசும் நகுலும் கதாநாயகர்களாக நடிக்க, பிந்து மாதவியும் புதுமுகம் ஐஸ்வர்யாவும் நாயகிகளாக நடிக்க, ராம் பிரகாஷ் இயக்கி வரும் படம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும். இந்தப் படத்தின் தலைப்புப் பாடலைக் கவிஞர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். அந்தப் பாடல் எப்படி உருவானது என்பதை இங்கே விளக்குகிறார்.
 
இனி கார்க்கி:
 
தன் படத்தின் கதையை என்னிடம் இரண்டு நிமிடங்களில் சொல்லிய ராம் பிரகாஷ், அதன் தலைப்பை முன்னிலைப்படுத்தி ஒரு மூன்று நிமிடப் பாடல் வேண்டும் என்று கேட்டார். ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற தலைப்பைப் பாடலுக்குள் எப்படிக் கொண்டு வருவது என்று தமனின் ஒலிப்பதிவுக் கூடத்தின் வரவேற்பறையில் வீற்றிருக்கும் புத்தர் சிலையோடு பேசிக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். ‘தமிழ்’ ‘எண்’ ‘ஒன்று’ ‘அழுத்து’ என்ற நான்கு சொற்களும் என் விரல்களுக்கும் மடிக்கணினி விசைப்பலகைக்கும் நடுவே நடனமாடிக்கொண்டிருக்க, மொழிகளை மையப்படுத்தலாமா? எண், எழுத்து என்று பட்டியலிடலாமா? ஒன்று, இரண்டு மூன்று என்று எதையாவது வரிசைப் படுத்தலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த என்னை இழுத்தது ‘அழுத்து’. 
 
‘எது கிடைக்க எதை அழுத்த வேண்டும்’ என்பதைச் சூத்திரமாகக் கொண்ட வரிகளை அமைக்க நினைத்தேன். தமனிடமும் ராம் பிரகாஷிடமும்  இந்த எண்ணத்தைச் சொன்னவுடன் இருவருக்கும் பிடித்துப் போனது.  எழுதச் சொன்னார்கள். நான் எழுதிய வரிகள்:
_____________________________
 
அலைவரிசை மாற்றவே
தொலை இயக்கி அழுத்தவும்! 
தலை எழுத்தை மாற்றவே - உன்
மூளையை நீ அழுத்தவும்!
 
வேகத்தை எடுக்க
முடுக்கியை அழுத்து!
நியாயத்தை உரைக்க
சொற்களை அழுத்து!
 
பணம் உடனே வேண்டுமா?
தானியங்கி வங்கி சென்று - உன்
இரகசியத்தை அழுத்தவும்!
காதல் செலுத்த வேண்டுமா?
தானியங்கி இதழ்களின் மேலே
முத்தத்தை அழுத்தவும்!
 
குறுஞ்செய்தி அனுப்பவே
விசைப்பலகை அழுத்தவும்!
பெருஞ்செய்தி எழுதவே - உன்
ஆயுளை நீ அழுத்தவும்!
 
புகழுக்கு உன் இன்றை அழுத்தவும்!
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்!
_____________________________
 
எழுதி முடித்த சில நிமிடங்களில், வரிகளை பொருள் சிதையாத ஒரு மெட்டில் பூட்டினார் தமன். பாடலை பதிவு செய்தோம். ‘ஆரோமலே’ அல்ஃபோன்ஸ் அவர்களின் மந்திரக் குரலுக்கு நடுவில் ஓர் எந்திரக் குரலாக கேட்பது என் குரலே. அழுத்தமான ஒரு பாடலை உருவாக்கியதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி ;)
 
இவ்வாறு மதன் கார்க்கி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil