நடிகை சாவித்திரி வாழ்க்கை படமாகிறது: நித்யா மேனன் நடிக்கிறார்
நடிகை சாவித்திரி வாழ்க்கை படமாகிறது: நித்யா மேனன் நடிக்கிறார்
பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் நடிக்க நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடிகர்-நடிகைகள் வாழ்க்கையை படமாக்குவதில் திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். ரஜினிகாந்தின் வாழ்க்கையை படமாக்கப்போவதாக அவரது மகள் சவுந்தர்யா அறிவித்து உள்ளார்.
இதுபோல் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையையும் மகாநதி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்கும் முயற்சியில் டைரக்டர் நாக் அஸ்வின் ஈடுபட்டுள்ளார்.
தமிழில் களத்தூர் கண்ணம்மா, திருவிளையாடல், கந்தன் கருணை, பாசமலர், பரிசு, பாவமன்னிப்பு, கைகொடுத்த தெய்வம், படித்தால் மட்டும் போதுமா, நவராத்திரி, மிஸ்சியம்மா உள்ளிட்ட பல படங்கள் சாவித்திரிக்கு பெயர் வாங்கி கொடுத்தன.
1935-ல் ஆந்திராவில் பிறந்த இவர் 1981-ல் தனது 46-வது வயதில் மரணம் அடைந்தார். கதாநாயகியாக இருந்தபோது செல்வ செழிப்பில் வாழ்ந்த அவர் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்து கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி கஷ்டப்பட்டு இறந்தார். இந்த நிகழ்வுகளையெல்லாம் காட்சிப்படுத்தி சாவித்திரி வாழ்க்கை கதை படமாகிறது.
இதில் சாவித்திரி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்தது. நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், வித்யாபாலன் உள்பட பலர் பரிசீலிக்கப்பட்டனர்.
இறுதியாக நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சாவித்திரிக்கு இணையான உயரத்தில் இருப்பதாலும், முக தோற்றம் பொருந்தி இருப்பதாலும் நித்யா மேனனை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. நித்யா மேனனும் சாவித்திரி வேடத்தில் நடிக்க மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.