Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடிவேலு படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

வடிவேலு படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
, புதன், 16 ஏப்ரல் 2014 (19:59 IST)
வடிவேலு நடித்திருக்கும் தெனாலிராமன் படத்துக்கு தடை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 
தெனாலிராமன் படத்தில் வரலாற்றுக்கு புறம்பாக வடிவேலு கிருஷ்ணதேவராயரை சித்தரித்திருக்கிறார் என்று பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் பழந்தமிழர் மக்கள் கட்சி நிர்வாகி வீரகுமார் என்பவர் தெனாலிராமன் படத்துக்கு தடை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விவரம் -
 
நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தின் டிரெய்லர் காண்பிக்கப்படுகிறது. இதில், விஜயநகரப்பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். கிருஷ்ணதேவராயர் சிறந்த போர்வீரர். சிறப்பான ஆட்சி நடத்தியவர். தென்னிந்தியாவில் இசுலாமிய படையெடுப்பை தடுத்தவர் என பள்ளி வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறேன். அவரது வேடத்தை ஏற்றுள்ள வடிவேலு கோமாளி போன்று காட்சி தருகிறார். மேலும் மூடர்கள் பேசுவது போல் அவரது வசனங்கள் உள்ளன.
 
கிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவியர் 52 குழந்தைகள் இருப்பதாகவும் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று தகவல் கிடையாது. ஒரு பேரரசரின் வரலாற்றை திரித்துக்கூறி பணம் சம்பாதிக்க முற்படுவதை ஏற்கக்கூடாது.மேலும் இந்த படத்தை பார்க்கும் குழந்தைகள் கிருஷ்ணதேவராயரை ஒரு கோமாளி போல் கற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனுமீது விசாரணை நடத்திய நீதிபதிகள், வரலாறுகளை ஒவ்வொருவரும் ஒரு விதமாக எழுதியிருக்கின்றனர். எனவே வரலாறு அடிப்படையில் திரைப்படத்துக்கு தடை கோருவதை ஏற்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தனர்.
 
இதனால் வரும் 18 ஆம் தேதி எவ்வித சிக்கலும் இல்லாமல் படம் திரைக்கு வர வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil