Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேஸ்புக்கில் விமர்சனம் செய்த தம்பிகளை விரைவில் சந்திப்பேன்: நடிகர் சிவக்குமார்

பேஸ்புக்கில் விமர்சனம் செய்த தம்பிகளை விரைவில் சந்திப்பேன்: நடிகர் சிவக்குமார்
, திங்கள், 29 ஜூன் 2015 (20:35 IST)
பேஸ்புக்கில் என் பதிவுகளை விமர்சனம் செய்த தம்பிகளை விரைவில் சந்திப்பேன் என்று நடிகர் சிவக்குமார் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
 

 
நடிகர் சிவகுமார், தனது பேஸ்புக்கில் தந்தை பெரியார், ஜான்சி ராணி, வேலுநாச்சியார், முத்துவடுகநாதன், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா ஆகியோரை பற்றி தொடர்ந்து எழுதி வந்தார். இதை தொடர்ந்து தீரன் சின்னமலை பற்றியும் அவர் சமீபத்தில் எழுதினார்.
 
இந்நிலையில், அவரது பேஸ்புக்கில் சாதி பற்றிய கருத்துக்களை சிலர் பரிமாறியதோடு நிற்காமல், ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையிலான வார்த்தைகளையும் வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து, பேஸ்புக் கணக்கில் இருந்து நடிகர் சிவகுமார் விலகிக்கொள்வதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
 
அதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில், ''என்னை மனிதப் புனிதன் என்றோ, வழிகாட்டும் தலைவன் என்றோ, வாரி வழங்கும் வள்ளல் என்றோ, பேரறிவாளன் என்றோ, நடிப்புக்கலை, ஓவியக் கலையில் கரை கண்டவன் என்றோ, பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் பேஸ்புக்கில் பதிவிடவில்லை. 70 வயதைத் தாண்டி, முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.
 
இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருந்த வன்மத்தை, சாதி வெறியை வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன். தனிப்பட்ட முறையில் என்னை தாக்கவும், குடும்பத்தினரை குறைகூறவும், நானே களம் அமைத்துக்கொடுத்ததாக உணர்கிறேன். என் உலகம் சிறியது. அதில் என் வாழ்க்கை மிகவும் எளிமையானது. இது உங்கள் உலகம், உங்கள் சுதந்திரம். நீங்கள் நினைத்தபடி வாழுங்கள். எல்லாரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் பேஸ்புக் பதிவுகளை நிறைவு செய்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்நிலையில், போர்ப்படைத் தளபதி கருப்பன் சேர்வைத் தேவரை கையாள் என்று தவறுதலாக எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இன்று தனது பேஸ்புக்கில் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக நடிகர் சிவக்குமார் தனது பேஸ்புக்கில், ''வரலாற்று ஆய்வாளர் சகோதரி நிகிலா நிகி அவர்களும் மற்ற சகோதரர்களும் குறிப்பிட்டதுபோல போர்ப்படைத் தளபதி கருப்பன் சேர்வைத் தேவரை கையாள் என்று தவறுதலாக எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் வரலாற்றை இன்னும் தெளிவாக படிக்க வேண்டும்.
 
பேஸ்புக்கில் என் பதிவுகள் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களையும் விமர்சனம் செய்த தம்பிகளையும் விரைவில் சந்திப்பேன். நன்றி!" என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil