சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது புதிய எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்ப உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான இந்த எதிர்நீச்சல் சீரியல் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதில் குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவும் மக்களிடையே பிரபலம் ஆனார்.
டிஆர்பி ரேட்டிங்கிலும் அதிக கவனம் பெற்று நன்றாக போய்க் கொண்டிருந்த எதிர்நீச்சல், மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு சுணக்கம் கண்டது. குணசேகரன் கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக வேலராமமூர்த்தி நடித்தபோதும் எதிர்நீச்சல் மீதான ஆர்வம் மக்களுக்கு குறையத் தொடங்கியதால் ஒரு கட்டத்தில் சீரியல் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
ஆனால் மக்களிடையே அந்த சீரியலில் நடித்த கதாப்பாத்திரங்களுக்கு கிடைத்த ஆதரவை தொடர்ந்து தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற புதிய சீரியலை தயாரித்து வருகின்றனர். இதில் அந்த சீரியலில் நடித்த முக்கிய பெண் கதாப்பாத்திரங்கள் அனைவரும் இடம்பெறுகின்றனர். ஜனனி கதாப்பாத்திரத்திற்கு மட்டும் புதிதாக வேறு நடிகை இடம்பெற்றுள்ளார். இந்த சீரியலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் மக்களிடையே வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K