Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாமனார் ரஜினிகாந்தை பின்பற்றி புகைப்பதை நிறுத்துங்கள் - தனுஷுக்கு அன்புமணி கடிதம்

மாமனார் ரஜினிகாந்தை பின்பற்றி புகைப்பதை நிறுத்துங்கள் - தனுஷுக்கு அன்புமணி கடிதம்
, திங்கள், 20 ஜூலை 2015 (09:17 IST)
மாரி படத்தில் தனுஷ் சிகரெட் புகைக்கும் காட்சி பல்வேறு தரப்பினரின் கண்டனத்துக்கு ஆளானது. மாரி படத்தில் நான் நடித்தது தாதா கதாபாத்திரம். அதற்கேற்ப புகைக்கும் காட்சியில் நடித்தேன். நிஜ வாழ்க்கையில் நான் புகைப்பதும் இல்லை, குடிப்பதும் இல்லை என்றார் தனுஷ்.
 

 
இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, மாமனார் ரஜினிகாந்தை பின்பற்றி புகைப்பதை நிறுத்துங்கள் என தனுஷுக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது - 
 
இன்று தமிழ்நாட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக நீங்கள் திகழ்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். 
 
மாரி திரைப்படத்தின் ஏராளமான காட்சிகளில் நீங்கள் புகைபிடித்தபடி நடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் உங்களுடைய ரசிகர்களாக இருக்கும் நிலையில் இந்த தவறான செயல் உங்கள் ரசிகர்களை புகையிலைக்கு அடிமையாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன். 
 
புகையிலை பொருட்களால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை என பல கேடுகள் நேர்கின்றன. இளைஞர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெறும் புகைபிடிக்கும் காட்சிகள் முக்கிய காரணமாக உள்ளன. 
 
மாரி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புகைபிடிக்கும் காட்சிகள் தற்செயலானவை அல்ல என்றே கருத வேண்டியுள்ளது. பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், கடைகளிலும் புகையிலை விளம்பரம் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதால், சிகரெட் நிறுவனங்களின் சட்டவிரோத விளம்பர களமாக திரைப்படங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். 
 
தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து அதனை உறுதியாக பின்பற்றியும் வருகின்றனர். 
 
அதைவிட முக்கியமாக, உங்களது மாமனாரும், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என புகழப்படுபவருமான நடிகர் ரஜினிகாந்த், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தனது ரசிகர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
தமிழக பண்பாட்டில் மாமனார் என்பவர் தந்தைக்கு சமமானவராக கருதப்படுகிறார். தந்தையின் புகழை காப்பாற்றும் கடமை மகனுக்கு இருப்பது போல மாமனாரின் புகழை காப்பாற்ற வேண்டிய கடமை மருமகனுக்கும் உண்டு. திரைப்படங்களில் புகைபிடிக்கும் உங்களது செயல் உங்களது மாமனார் நடிகர் ரஜினிகாந்தின் புகழுக்கு இழுக்கு செய்வதாக அமைகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
 
எனவே, தமிழ்நாட்டின் பல லட்சம் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும். மேலும், இனி திரைப்படங்களில் புகைபிடிக்க மாட்டேன் என பகிரங்கமாக அறிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். 
 
தமிழக இளைஞர்களின் நலனுக்காக மட்டுமின்றி, உங்களது உடல்நலத்துக்காகவும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும் என்று உங்களது சகோதரனாக ஒரு மருத்துவனாக கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று, தமிழ் திரையுலகில் பலப்பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன். 
 
இவ்வாறு அந்த கடிதத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil