Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீகாந்தை என்னால் மறக்க முடியாது - நம்பியார் விழாவில் சூர்யா பேச்சு

ஸ்ரீகாந்தை என்னால் மறக்க முடியாது - நம்பியார் விழாவில் சூர்யா பேச்சு
, வியாழன், 10 ஜூலை 2014 (18:33 IST)
நடிகர் ஸ்ரீகாந்த் இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது 'நம்பியார்' படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் கோல்டன் ப்ரைடே பிலிம்ஸ் சார்பில் வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ள படம்தான் 'நம்பியார்'.
ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான்விஜய், ஆர்யா, பஞ்சு சுப்பு, நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கணேஷா இயக்கியுள்ளார்.
 
'நம்பியார்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை தேவி திரையரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் ஆடியோவை சூர்யா வெளியிட்டார். விழாவில் சூர்யா பேசும்போது."அஞ்சான்' படத்தில் நடிக்கும் போது எப்படி ஒரு படத்திற்கு வெற்றிகரமான கதையை தேர்வு செய்வது என்று பேசிக் கொண்டிருந்தோம்.
 
அப்போது லிங்குசாமிசார் சொன்னார். ஒரு படத்தின் கதையை இரண்டரை மணி நேரம் கேட்டால் ஒரு நாள் கழித்தோ, இரண்டுநாள்கழித்தோ, பத்துநாள் கழித்தோ கேட்டால் கூட ஐந்து காட்சியாவது சொல்ல முடிய வேண்டும். கதை சொல்லும் போது நிறைய காட்சிகள் சொல்வார்கள். ஆனாலும் பளிச்சென்று சிலவற்றை சொல்லத் தோன்ற வேண்டும். அதுபோல ஸ்ரீகாந்த் இந்தப்படத்தில் ரசித்தவை, வியந்தவை, அனுபவித்தவை என்று நிறைய விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் பெரிய பழக்கமில்லை. நெருங்கிய நட்பெல்லாம் இல்லை. அதற்கான பரிச்சயம் இல்லை. ஆனாலும் அவர் அழைத்தார். வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. வந்தேன். இது தயாரிப்பில் அவருக்கு முதல் படம். தனக்கு வேண்டியவர்களை எல்லாம் அழைத்து நடத்தும் குடும்ப விழா. அதில் என்னையும் அழைத்து தன் குடும்பத்தில் இணைத்துக் கொண்டதற்கு நன்றி.
 
ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் வேறு ஒரு தொடர்பு இருக்கிறது. அவர் 2002ல்  பத்திரிகையில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். நானும் அப்போதுதான் பலபடிகளில் ஏறி வந்து கொண்டிருந்தேன். அவர் அப்பா சொன்னதாக கூறியிருந்தார். 'எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அதில் நிறைவாக சிறப்பாகச் செய்ய வேண்டும். செருப்பு தைக்கும் வேலையாக இருந்தாலும் அதில் நீ முழுமையாக, உண்மையாக உன்னை ஒப்படைத்து சிறப்பாக முதல் ஆளாக, நம்பர் ஒன்னாக வரவேண்டும்' என்று கூறியதாக பேட்டியில் சொல்லியிருந்தார்.
 
அது எனக்கு பெரிய ஊக்கமும் தூண்டுதலும் கொடுத்தது. அதை அன்றே மனதில் வைத்துக் கொண்டேன். இதை முன்பு யாராவது  சொல்லியிருக்கலாம். கேட்டிருக்கலாம். ஆனால் நான் ஸ்ரீகாந்த் பேட்டியில்தான் அதைப் படித்தேன். படித்ததும் நான் மறக்கவில்லை. இன்றும் பெரிதும் ஊக்கம் தரும் வார்த்தைகள் அவை. அந்த வகையில் ஸ்ரீகாந்தை என்னால் மறக்க முடியாது. இந்தப்படம் அவருக்கு பிரமாதமான வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகிறேன். "என்று கூறி வாழ்த்தினார்.
 
விழாவில் நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஷாம், விமல், நகுல், கிருஷ்ணா, பஞ்சு சுப்பு, பவர் ஸ்டார், ஜான்விஜய், நடிகைகள் சுனைனா, நமீதா, தேவதர்ஷினி, இயக்குநர்கள் கணேஷா, சமுத்திரக்கனி எம்.ராஜேஷ், ஆர்.கண்ணன், ஆர்.பார்த்திபன், மித்ரன் ஜவஹர், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு, இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி, பாடலாசிரியர்கள் விவேகா, மதன்கார்க்கி, தயாரிப்பாளர்கள் லட்சுமி மூவிமேக்கர்ஸ் முரளிதரன், எச்.முரளி, யூடிவி தனஞ்ஜெயன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.
 
முன்னதாக அனைவரையும் ஸ்ரீகாந்த் வரவேற்றார். நிறைவாக வந்தனா ஸ்ரீகாந்த் நன்றி கூறினார். இவ்விழாவை அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil