Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடிவேலுவை மிரட்டினால்.... தெலுங்கு அமைப்புகளுக்கு சீமான் எச்சரிக்கை

வடிவேலுவை மிரட்டினால்.... தெலுங்கு அமைப்புகளுக்கு சீமான் எச்சரிக்கை
, திங்கள், 7 ஏப்ரல் 2014 (11:50 IST)
வடிவேலு நடித்திருக்கும் தெனாலிராமன் படம் தெனாலிராமனையும், கிருஷ்ணதேவராயரையும் கொச்சைப்படுத்துவதாகக் கூறி தெலுங்கு அமைப்புகள் படத்தை தடை செய்ய போராடி வருகின்றன. கிருஷ்ணதேவராயர் கதாபாத்திரமே படத்தில் இல்லை, தெனாலிராமன் கதைகளை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் புனைவே இந்தப் படம் என படம் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்ததையும் அவர்கள் ஏற்கவில்லை. அத்துடன் வடிவேலு வீட்டை முற்றுகையிடவும் முயன்றனர்.
Vadivelu
போராட்டம் நடத்தும் தெலுங்கு அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கும்வகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை வருமாறு -
 
நடிகர் வடிவேலு நடித்திருக்கும் தெனாலிராமன் படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. 
 
இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்டு ஒரு தமிழ்க் கலைஞனை அவனுடைய மண்ணிலேயே மிரட்டுகிற இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் உண்மையாகவே தவறாகச் சித்தரிக்கப்பட்டிருந்தால் அதனை முறைப்படி சொல்லி தகுந்த விதத்தில் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, படத்தில் என்ன இடம் பெற்றிருக்கிறது என்பதே தெரியாமல் அடிப்போம் உதைப்போம் என ஆவேசம் பாடுவது எந்த விதத்தில் நியாயம்? 
 
webdunia
கிருஷ்ண தேவராயர் பாத்திரம் குறித்து குரல் எழுப்புபவர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். உண்மையிலேயே கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சொல்லப்பட்டிருந்தால் அதை நீக்கச் சொல்லிப் போராடுபவர்களுக்குப் பக்க பலமாக நாங்களும் நிற்போம். எந்த இனத்தவர்களின் மனதையும் புண்படுத்தி ரசிக்கும் கொடூர மனம் தமிழர்களுக்கு ஒரு போதும் கிடையாது.

படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கபடவில்லை என்றும், கற்பனைக் கதையாகவே படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் படத் தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கும் நிலையில், அதைக் காது கொடுத்துக் கேட்காமல் வடிவேலுவுக்கு எதிராக கொந்தளிப்பு கிளப்புவது ஒரு கலைஞனை புண்படுத்தும் செயல். 
 
ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ தமிழர்களுக்கு எதிரான சித்தரிப்பு செயல்கள் நடக்கிறபோது அம்மாநிலக் கலைஞர்கள் எவரையேனும் எதிர்த்து அங்கு பெருமளவில் வாழும் தமிழர்கள் ஒருமித்து திரண்டுவிட முடியுமா?

அங்கிருக்கும் ஒரு கலைஞனுக்கு எதிராக ஒரு வார்த்தை உதிர்த்தாலும், அது எத்தகைய விளைவுகளை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தும்? ஆனால், மண்ணின் மைந்தனாக பல கோடி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் வடிவேலுவை சில அமைப்புகள் இங்கே மிரட்டுவது, தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடுகிற செயல்.

தமிழர்களின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் செயல். தமிழினத்தின் பெருமைமிகுந்த கலைஞன் வடிவேலு. அவரை எவ்வித இக்கட்டும் சூழாதபடி காப்பாற்ற வேண்டியது நம் இனத்தின் கடமை. திரையில் வேண்டுமானால் வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகராக இருக்கலாம்; ஆனால், உண்மையில் எங்கள் இனத்தின் கதாநாயகன் வடிவேலு. பலகோடி தமிழ் மக்களின் பெருமைமிகு கலைஞனாக இருக்கும் வடிவேலுவை அவ்வளவு சீக்கிரத்தில் அச்சுறுத்திவிட முடியும் என யாரும் கனவு காணக்கூடாது. 

தற்போதைய அரசியல் சூழலில் வடிவேலுக்கு ஆதரவாக யாரும் இல்லை என எண்ணி, சிலர் அவரை மிரட்டி உருட்டி பணியவைத்துவிடலாம் என நினைக்கிறார்கள். மொத்த தமிழ்ச் சமூகமும் இந்த விவகாரத்தில் வடிவேலுவின் பின்னால் நிற்கும் என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். 
webdunia
இதையும் தாண்டி வடிவேலுவை மிரட்டுகிற செயல்கள் தொடர்ந்தால் அவருக்கு அரணாகத் திரளவும், சம்பந்தப்பட்ட மிரட்டல் அமைப்புகளுக்கு தக்க பாடம் புகட்டவும் நாம் தமிழர் கட்சி கொஞ்சமும் தயங்காது.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil