Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தடைகோரி வழக்கு

கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தடைகோரி வழக்கு
, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (15:51 IST)
கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிட தடைகோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் இமானுவேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
அவரது மனுவில் கூறியிருப்பதாவது...
 
வரும் தீபாவளி தினத்தில் ‘கத்தி' மற்றும் ‘புலிப்பார்வை' திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த திரைப்படங்கள் தமிழ் கலாசாரம், இலங்கைப் போர் தொடர்பான தமிழர் உணர்வுகளை மோசமாக சித்தரித்துக் காட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது.
கத்தி திரைப்படத்தை தயாரித்துள்ள அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே மறைமுகமாக நிதியுதவி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் தமிழர் உணர்வுகளை புண்படுத்துவதாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இலங்கையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தபட்ட தமிழ்ப் பெண்கள் அமைதியாக வாழ்வதாகவும், சிங்களர், தமிழர் இனக் கலப்பு மூலம் அங்கு புதிய இனம் தோன்றுவதாகவும், ‘கத்தி' படத்தில் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. 
 
புலிப்பார்வை திரைப்படத்தை வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது. இப்படம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணத்தை மோசமாக சித்தரித்துக் காட்டுவதாக உள்ளது. பாலச்சந்திரனை சீன ராணுவத்தினர் கொன்றதாக ‘புலிப்பார்வை' படத்தில் கூறியுள்ளனர். மேற்கண்ட 2 படங்களும் தமிழர்களை தீவிரவாதிகளாகவும், தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கின்றன. இலங்கை அதிபர் ராஜபக்சே, போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை திசை திருப்புவதற்காக இப்படிப்பட்ட திரைப்படங்களை தயாரிப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியிடப்பட்டால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. 
 
இந்த 2 திரைப்படங்களையும் திரையிட தடை விதிக்கும்படி டிஜிபி-யிடம் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும். 
 
- இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil