Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது தென்ஆப்ரிக்கா

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது தென்ஆப்ரிக்கா
லண்டன் , ஞாயிறு, 14 ஜூன் 2009 (11:23 IST)
இங்கிலாந்தில் நடந்து வரும் இருபது-20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று நடந்த சூப்பர்-8 சுற்றுப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றதன் மூலம், இத்தொடரின் அரையிறுதிக்கு வாய்ப்பை தென்ஆப்ரிக்க அணி பிரகாசப்படுத்துக் கொண்டுள்ளது.

இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர்-8 சுற்றில் லண்டன் ஓவல் மைதானத்த்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஈ-பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா-மேற்கிந்திய அணிகள் மோதின. பூவா-தலையா வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் தென்ஆப்ரிக்காவை பேட் செய்ய அழைத்தது.

அணித்தலைவர் ஸ்மித், காலிஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் `பவர்-பிளே`யில் அதிரடியாக விளையாடி அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஸமித் 31 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கிப்ஸ்-ம் ரன்வேட்டை நடத்தியதால் அணியின் ரன் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் சென்றது. காலிஸ் 45 ரன்களும், கிப்ஸ் 55 ரன்களும் விளாசினர்.

ஆனால் நடுக்கள, கடைநிலை வீரர்கள் சொதப்பியதால் 200 ரன்களைக் கூட தென்ஆப்ரிக்க அணியால் எடுக்க முடியவில்லை. டிவில்லியர்ஸ், பவுச்சர் தலா 17 ரன்களும், அல்பி மோர்கல் 10 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்ஆப்ரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. குறிப்பாக கடைசி 4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்களே எடுத்தது.

மேற்கிந்திய பந்துவீச்சாளர்களில் ஜெரோம் டெய்லர் 3 விக்கெட்டுகளும், எட்வர்ட்ஸ், பொல்லார்ட் பென், சிமோன்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

வெற்றி பெற 184 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிளட்சர் (0), அதிரடி மன்னன் கெய்ல் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் 2வது விக்கெட்டுக்கு இறங்கிய லென்டில் சிமோன்ஸ் கடுமையாக போராடினார். சூப்பரான பவுண்டரி ஷாட்கள் மூலம் தென்ஆப்பிரிக்க பீல்டர்களை அலைய விட்டார். ஆனால் மறுமுனையில் அவருக்கு சரியான துணை கிடைக்காததால் அவரால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. பிராவோ மட்டும் 19 ரன் எடுத்து சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். நட்சத்திர வீரர் சந்தர்பாலும் 8 ரன்னில் வெளியேறி ஏமாற்றினார்.

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய குறியாக இருந்த சிமோன்ஸ் இறுதியில் 77 ரன் (50 பந்து) எடுத்த நிலையில் வெளியேறினார். பின்வரிசை ஆட்டக்காரர்களும் கை கொடுக்காததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்றது.

தென்ஆப்ரிக்கா தரப்பில் பார்னல் 4 ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளும், ஸ்டெயின், வான்டெர் மெர்வ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்கள். பார்னல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சூப்பர்-8 சுற்றில் தென்ஆப்ரிக்கா பெறும் 2வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. தென்ஆப்பிரிக்கா தனது கடைசி லீக்கில் இந்தியாவுடன் மோத உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர்-8 சுற்றில் முதல் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இருந்ததால் அரைஇறுதி வாய்ப்பு இன்னும் அந்த அணிக்கு இருக்கிறது. அந்த அணி தனது கடைசி லீக்கில் இங்கிலாந்து அணியை கட்டாயம் வென்றாக வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil