லண்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் 2வது ஐ.சி.சி. இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட அணிகள் எல்லாம் மண்ணை கவ்விய நிலையில் அதிகம் எதிர்பார்ப்பு இல்லாத, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய அணிகள் இறுதிக்கு வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
இதில் இலங்கை அணி இத்தொடரில் இதுவரை தோல்வியே கண்டதில்லை. தொடர்ந்து 6 ஆட்டங்களில் வெற்றியை ருசித்து இறுதிக்கு முன்னேறியுள்ளது. பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் தில்ஷன் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். அவர் இதுவரை 317 ரன்கள் குவித்து இருக்கிறார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யாவின் ஆட்டம் ஒரு சில அணிகளிடம் மட்டுமே எடுபட்டுள்ளது. ஆனால் இறுதிப்போட்டியில் சாதிக்கும் முனைப்புடன் அவர் உள்ளார். இன்னும் 10 நாளில் தனது 40வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் ஜெயசூர்யாவுக்கு, இருபது-20 உலகக்கோப்பையை வெல்வதே சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும்.
சங்கக்கரா, ஜெயவர்த்தனே, சமர சில்வா ஆகியோரும் இன்று ஜொலித்தால் இலங்கை நல்ல ஸ்கோரை எட்டி விடும் என்பதில் சந்தேகமில்லை.
பந்து வீச்சு இலங்கை அணியின் உண்மையான பலம் என்பதை மறுக்க முடியாது. அரைஇறுதியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏஞ்சலோ மேத்யூஸ் அணியின் நம்பிக்கை பாத்திரமாகி உள்ளார்.
அவருடன் மலிங்கா, உதானா வேகப்பந்து வீச்சில் மிரட்ட, சுழலில் முரளிதரன், அஜந்தா மென்டிஸ் கலக்க காத்திருக்கிறார்கள். இதுவரை 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள மென்டிஸ் ஓவருக்கு சராசரியாக வெறும் 4.95 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
பாதுகாப்பு உள்ளிட்ட உள்ளூர் பிரச்சனைகளால் நொடிந்து போயிருந்த பாகிஸ்தான் அணி இருபது-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் புத்துணர்ச்சி பெற்று இருக்கிறது.
இலங்கை அணியின் அதிரடியை சமாளிக்க பல்வேறு வியூகங்களை பாகிஸ்தான் அமைத்து வருகிறது. அந்த அணியை பொறுத்தவரை உமர்குல் (12 விக்கெட்), சயீத் அஜ்மல் (12 விக்கெட்), முகமது அமீர் ஆகியோர் பந்து வீச்சில் கலக்கி வருகிறார்கள். ஆல்-ரவுண்டர் அஃப்ரிடி பாகிஸ்தான் அணியின் ஆயுதமாக இருக்கிறார்.
ஆனால் பேட்டிங்தான் திருப்தியாக தெரியவில்லை. கம்ரன் அக்மல், யூனிஸ்கான் ஆகியோர் குறிப்பிடும்படி ஆடியிருக்கிறார்கள். ஆனால், மிஸ்பா உல்-ஹக், சோயப் மாலிக் ஆகியோர் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். என்றாலும் தொடக்கம் மந்தமாக இருப்பது பாகிஸ்தானின் பலவீனங்களில் ஒன்றாக இருக்கிறது.
இன்றைய போட்டியில் வென்று இருபது-20 உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற துடிப்புடனும், ஆக்ரோஷத்துடனும் இரு அணியினரும் காணப்படுகின்றனர். சமபலத்துடன் இருப்பதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிக்க முடியாத நிலை நிலவுகிறது.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே சூப்பர்-8 சுற்றில் சந்தித்து இருந்தன. இதில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் இதுவரை நான்கு 20 ஓவர் சர்வதேச போட்டியில் சந்தித்து உள்ளன. இதில் இரு அணியும் தலா 2ல் வெற்றி கண்டுள்ளது. பரபரப்பான இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
போட்டிக்கான உத்தேச அணி வருமாறு:-
இலங்கை: தில்ஷன், ஜெயசூர்யா, சங்கக்கரா (அணித்தலைவர்), ஜெயவர்த்தனே, சமரசில்வா, முபாரக், ஏஞ்சலோ மேத்யூஸ், உதானா, மலிங்கா, முரளிதரன், மென்டிஸ்.
பாகிஸ்தான்: கம்ரான் அக்மல், ஷேசாயிப் ஹசன், அஃப்ரிடி, சோயிப் மாலிக், யூனிஸ்கான் (அணித்தலைவர்), அப்துல் ரஸாக், மிஸ்பா உல்ஹக், பவாட் ஆலம், உமர்குல், சயீத் அஜ்மல், முகமது அமீர்.