Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உமர்குல் அபாரம்: நியூஸீ.யை வீழ்த்தியது பாகிஸ்தான்

உமர்குல் அபாரம்: நியூஸீ.யை வீழ்த்தியது பாகிஸ்தான்
லண்டன் , ஞாயிறு, 14 ஜூன் 2009 (11:04 IST)
இங்கிலாந்தில் நடந்து வரும் இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸீலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இருபது-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-8 சுற்றில், லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் (எஃப் பிரிவு) மோதின.

நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அணித்தலைவர் வெட்டோர் நேற்று முதன் முறையாக களமிறங்கினார். பாகிஸ்தான் அணியில் ஐ.சி.எல். போட்டிக்கு சென்றதால் தடைவிதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பினார்.

பூவா-தலையா ஜெயித்து முதலில் பேட் செய்த நியூஸீலாந்து அணி பாகிஸ்தானின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. என்றாலும் முதல் 12 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் என்று ஓரளவு நல்ல நிலைமையில் இருந்தது. ஆனால் அதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர் உமர்குல் பந்து வீச தொடங்கியதும் நியூஸீலாந்தின் பேட்டிங் தடம் புரண்டது.

அவர் தனது முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளும், 2-வது ஓவரில் ஒரு விக்கெட்டும், 3-வது ஓவரில் 2 விக்கெட்டுகளும் சாய்க்க, நியூஸீலாந்து அணி 18.3 ஓவரில் 99 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

அந்த அணியின் ஸ்டைரிஸ் அதிகபட்சமாக 22 ரன்களும், ரெட்மான்ட் 15 ரன்களும், பிரென்டன் மெக்குல்லம் 12 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கில் வெளியேறினர். இருபது-20 போட்டிகளில் நியூஸீலாந்தின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்ததே மோசமான ஸ்கோராக இருந்தது.

பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் 6 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளி சாதனை படைத்தார். இதில் இரண்டு முறை அவருக்கு `ஹாட்ரிக்` வாய்ப்பு நழுவி போனதும் குறிப்பிடத்தக்கது. இருபது-20 கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையும் உமர் குல்லுக்கு கிடைத்துள்ளது.

இருபது-20 சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 28 பேர் நான்கு விக்கெட்கள் கைப்பற்றி உள்ளனர். இதுவரை சாதனையாக இருந்த அதனை உமர்குல் நேற்று மிஞ்சி விட்டார்.

வெற்றி பெற 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற எளிய இலக்குடன் களமிரங்கிய பாகிஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாசாயிப் ஹசன் 35, அஃப்ரிடி ஆட்டமிழக்காமல் 29 ரன் எடுத்து வெற்றியை எளிதாக்கினர்.

சூப்பர்-8 சுற்றில் ஏற்கனவே இலங்கை அணியிடம் தோல்வியுற்றதால் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளான பாகிஸ்தான், நியூஸீலாந்துக்கு எதிரான போட்டியை வென்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil