இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்து தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் நடந்து வரும் இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் எஃப்-பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, பூவா-தலையா வென்று முதலில் பேட் செய்தது.
துவக்க ஆட்டக்காரர்களாக கம்ரான் அக்மல், ஷாசைப் ஹசன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடினர். ஷாசைப் ஹசன் 19 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அஃப்ரிடி 13 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 24 ரன்னும், கேப்டன் யூனிஸ்கான் 8 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் கம்ரான் அக்மல் நிலைத்து நின்று ஆடி அரை சதத்தை கடந்தார்.
அணியின் ஸ்கோர் 12.5 ஓவர்களில் 102 ரன்களாக உயர்ந்த போது கம்ரான் அக்மல், ஜான்ஸ்டன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அக்மல் 51 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 57 ரன் சேர்த்தார். மிஸ்பா உல்-ஹக் 14 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அப்துல் ரசாக் 15 ரன்னுடனும், சோயிப் மாலிக் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அயர்லாந்து அணி தரப்பில் கைல் மெக்கல்லன் 2 விக்கெட்டும், ஜான்ஸ்டன், அலெக்ஸ் குசாக், ரெகன் வெஸ்ட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெற்றி பெற 160 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்த வண்ணம் இருந்தன. அணித்தலைவரும், துவக்க ஆட்டக்காரருமான வில்லியம் போர்டர்பீல்டு அதிகபட்சமாக 36 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பாஸ் ஸ்டிரில்லிங் 17 ரன்னும், கெவின் ஓபிரையன் 26 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் சயீத் அஜ்மல் 4 விக்கெட்டும், உமர்குல் 2 விக்கெட்டும், அஃப்ரிடி, முகமது அமிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
சூப்பர்-8 சுற்றில் பாகிஸ்தான் பெற்ற 2வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்று நடைபெறும் நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையேயான ஆட்டத்தின் முடிவை பொறுத்தே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.