Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர இன்ஃப்ளுயென்சா காய்ச்சலுக்கு டாமிஃப்ளூ வேலை செய்யுமா? மருத்துவர்கள் ஐயம்

Webdunia
புதன், 9 டிசம்பர் 2009 (16:40 IST)
டாமிஃப்ளூ மருத்துவ பரிசோதனை முடிவுகளை ரோச் நிறுவனம் பொதுமக்கள் பார்வைக்கு கோண்டுவராமல் காலதாமதம் செய்து வருகிறது என்று பிரிட்டன் மருத்துவர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளதாக அந்நாட்டு பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

FILE
பரிசோதனை முடிவுகளில் ஆரோக்கியமானவர்களை டாமிஃப்ளூ, காய்ச்சலிலிருந்து காக்குமா என்பதும், நிமோனியாவை போக்குமா என்பதும் சரிவர நிரூபிக்கப்படவில்லை. அல்லது சோதனை முடிவுகளை ரோச் நிறுவனம் வெளியிட மறுத்து வருகிறது அல்லது சாதகமான தரவுகளை மட்டும் வெளியிடுகிறது.

காய்ச்சலை ஓன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வேண்டுமானல் டாமிஃப்ளூ குறைக்கலாம், தீவிர ஃப்ளூ காய்ச்சலுக்கு டாமிஃப்ளூ வேலை செய்யும் என்பதற்கான சான்றுகள் உள்ளதா என்பதை அறியக்கூடிய சாத்தியங்கள் இல்லை, ஏனெனில் வெளியிடப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை. ரோச் நிறுவனம் பரிசோதனைக் கண்டுபிடிப்புகளை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வர‌த் தவறி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

" பல நாடுகள் கோடிக்கணக்கான அளவு பணத்தை முதலீடு செய்து ஒரு மருந்தைக் கொள்முதல் செய்துள்ள நிலையில் அந்த மருந்தின் செயல்திறனை விஞ்ஞான சமூகத்தினரால் நிர்ணயம் செய்ய முடியவில்லை என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆசிரியர் ப்ளோனா காட்லீ தெரிவித்துள்ளார்.

நவம்பர் 26ஆம் தேதி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியான இவரது கட்டுரையில், வைரஸ் காய்ச்சல் கொள்ளை நோயாக பரவும் போது டாமிஃப்ளூ வேலை செய்யுமா என்பது பற்றி மருத்துவர்களுக்கு ஒன்றும் தெரிய வாய்ப்பில்லாமல் உள்ளது என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி சர் லியாம் டொனால்ட்சன் கூறியதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ரோச் நிறுவனத்தின் இந்த மாத்திரை சார்பாகப் பேச பேராசிரியர்களையோ, மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மூத்த மருத்துவர்களையோ அணுகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த போக்கு குறித்து விமர்சிக்கும் லண்டன், செயிண்ட் ஜார்ஜ் மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் ஜோ கொல்லியர், மருத்துவர்கள் நிறுவனத்திடமிருந்து நிதிச் சலுகைகளை பெறுவதில்லை என்று நாம் உறுதியாகக் கூறுவதற்கில்லை, மேலும் நிதிச்சலுகைகளை பெறாதவர்கள் என்று யாரேனும் இருக்கிறார்களா என்பதும் உறுதியாகக் கூற முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார்.

ஆனால் டாமிஃப்ளூ மூலம் ரோச் நிறுவனத்தின் பங்கு விலை பங்குச் சந்தையில் 60% அதிகரித்துள்ளது. லாபங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. மேலும் 50 நாடுகள் இந்த மருந்தை கொள்முதல் செய்யும் வேளையில் ரோச் நிறுவனத்தால் குறித்த காலத்தில் வழங்க முடியாத அளவுக்கு அதனிடம் ஆர்டர்கள் குவிந்துள்ளன.

ரோச் நிறுவனம் வழங்கும் ஆதாரங்களை மறு பரிசீலனை செய்யும் மருத்துவக் குழுவிற்கு அனைத்து சோதனை முடிவுகளும் காட்டப்படுவதில்லை. பரிசீலனைக்கு அளிக்கப்படும் முடிவுகளை வைத்து எந்த ஒரு தீர்மானமான முடிவுக்கும் வரவியலாது என்று இந்த மறுபரிசீலனையில் ஈடுபட்டுள்ள ஆஸ்ட்ரேலிய மருத்துவப் பேராசிரியர் கிறிஸ் டெல் மார் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் டாமிஃப்ளூவை வாங்கும் அரசுகள் ஆய்வுகளை நடத்தவேண்டும் என்று இந்த மருத்துவர்கள் கோருகின்றனர்.

நிமோனியாவை வேண்டுமானால் டாமிஃப்ளூ குறைக்கலாம், ஆனால் இதிலும் பலன் குறைவு, பக்க விளைவுகள் அதிகம் என்று பரிசீலனை செய்யும் மருத்துவர்கள் தரப்பு கூறுகிறது.

இதனால் மருந்து நிறுவனங்கள் நடத்தும் பரிசோதனைத் தரவுகள் முழுதும் மறு பரிசீலனைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற சட்டம் தேவை என்று இந்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

Show comments