Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“தமிழில் படித்தால்… தரணி ஆளலாம்”

“தமிழில் படித்தால்… தரணி ஆளலாம்”

Sasikala

, வியாழன், 21 ஜனவரி 2016 (17:06 IST)
தமிழ் மொழி உலகின் தொன்மையான செம்மொழியாகத் திகழ்கிறது. ஆனால் தமிழில் கல்லூரிக் கல்வியைப் படிப்பது இன்னமும் பெருமைக்குரியதாக இல்லை என்பது வேதனை அளிப்பதாகும்.


 


ஆனால் தமிழில் பட்டம் பெறுபவர்கள் தரணியாள முடியும் என்பதற்கு தமிழகமே சான்றாக உள்ளது. நமது தாய்மொழியான தமிழின் சிறப்புகளை அறியவும், அதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும், தமிழ் இலக்கியப் படிப்புகள் உதவுகின்றன. தமிழில் இளங்கலை (பி.ஏ) முதல் முனைவர் (பி.எச்.டி) பட்டம் வரை பயிலலாம். உடன் பல்வியியல் பட்டமும் படிப்பவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
 
பி.ஏ., பி.எட்., எம்.ஏ., எம்.எட்., பயிலுவோருக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர் பணிகள் கிடைத்துவருகின்றன. அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தமிழ் ஆசிரியர் தேவை உள்ளது. இதேபோல கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடத்துக்கு எம்.பில்., பி.எச்.டி., தமிழ் படித்தோர் தேர்வு செய்யப்படுகின்றனர். இவை தவிர பல்வேறு துறைகளில் தமிழ் பயிலுவோர் கோலோச்சுகின்றனர். குறிப்பாக அரசின் பல்வேறு துறைகளில் தமிழ் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிட்டுகின்றன. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதாக வெற்றி பெற முடியும்.
 
எண்ணற்ற மாற்று வாய்ப்புகள்:
 
தமிழ் படிப்பவர்களுக்கு தமிழாசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம். பழைய காலம். தமிழ் படித்தோருக்கான வேலை வாய்ப்புகள் நிரம்ப இருக்கின்றன. குறிப்பாக, இதழியல் துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. 
 
பத்திரிக்கைகள், சின்னத்திரை, வானொலி, பண்பலை, இவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் தமிழர்கள் வாழும் இடங்களிலும், தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. இன்று ஊர்தோறும் தனியார் தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தியாக வேண்டிய நெருக்கடி உள்ளது. நிகழ்ச்சித் தொகுப்பு, செய்தி வாசிப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு ஆகிய பணிகளில் தமிழ்ப் பட்டதாரிகள் கோலோச்ச முடியும்.
 
பிரசித்தி பெற்ற பி.பி.சி. சீனா, ஜப்பான், இலங்கை, ஆஸ்திரேலியா,அமெரிக்க வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றறிந்தோருக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன. தவிர தற்கால விளம்பரத் துறையிலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன.
 
பதிப்பகங்கள்:
 
மேலும், கணினி அச்சுத் தொடர்பான நிலைகளில் பழந்தமிழ் இலக்கியங்களை அச்சிடுதல், மின்னுருவேற்றல் போன்ற நிலைகளில் மரபார்ந்த செம்மையான தமிழறிவு பேரளவில் உதவும். தமிழோடு பிறமொழி அறிவும் இருப்பின் சிறப்பான ஊதியம் பெறலாம். மொழிபெயர்ப்பு, பெரிய அளவில் வளர்ந்து வரும் துறையாக உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் பாடமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் ஓதுவார்கள், தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு சிறப்பான தமிழறிவு தேவைப்படுகிறது.
 
ஊக்கத்தொகை:
 
கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான ஸ்லெட், நெட் தேர்வுகளில் தமிழ் ஆய்வு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வியை நிறைவு செய்யும் வரை மாதம் ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை பல்கலைக்கழக மானியக் குழு ஊக்கத் தொகை தருகிறது. அதே போல, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., தமிழ் பட்டப்படிப்பில் சேருவோருக்கு என தனியாக கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
 
வெளிநாடுகளில் பணிவாய்ப்புகள்:
 
தமிழர்கள் உலகம் முழுவதும் தற்போது தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் அரபு நாடுகளிலும் பணி நிமித்தமாக குடிபெயர்ந்து வசிக்கின்றனர். 
 
அங்கு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மறந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அங்கும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனநர். இவ்வாறாக உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்புக்கு மிகுந்த வரவேற்கான நிலை உள்ளது. தமிழ் படிக்கும் மாணவர்கள், இதை உணர்ந்து தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொண்டால் சிறப்பான எதிர்காலம் நிச்சயமாக உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil

ஐதராபாத் மாணவர் தற்கொலை விவகாரத்தில் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேஜரிவால் கூறுவது...