Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுமார் கவிதை குமாரு!

சுரேஷ் வெங்கடாசலம்
புதன், 21 மே 2014 (17:43 IST)
செந்தில் குமாருக்கு எப்படியாவது கவிஞனாக வேண்டுமென்று ஆசை. ஆசைனா சாதாரன ஆசை இல்லீங்க பயங்கர ஆசை. சரி எப்படி கவிஞனாவது.....?
 
நிறைய கவிதைகளை படித்தால் கவிஞனாகி விடலாம் என்று கவிதைப் புத்தகங்களை வாங்கிப் படித்தான். அதன் பலனாக ஒரு சில கவிதைகளை எழுதினான்.

ஆனால் அவை மிகவும் சுமாராக இருப்பதாக நினைத்தான். அடுத்து என்ன  செய்வது என்று யோசிக்கத் தொடங்கினான். இரண்டு நாட்கள் யோசித்தும் அவனால் அடுத்த முடிவை எடுக்க முடியவில்லை.
 
முன்றுநாள் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, ஒரு ஜிப்பாவை வாங்கி வந்து மாட்டிக் கொண்டான். எல்லோரும் அவனை வினோதமாகப் பார்த்தனர். தனிமைப்பட்டிருந்த அவன் ஜிப்வைப் போட்ட பின்னர், தனிமைபடுத்தவும் பட்டான்.
 
அவன் எழுதும் கவிதைகளை யாரிடமும் காட்டுவதில்லை. இருந்தாலும் நண்பர்கள் கூட்டம் விட்டுவிடவா போகிறார்கள், ஒருநாள் அவனது நண்பன் சண்முகம் "என்னா குமாரு நீ எழுதற கவிதைகளை எங்களுக்கு கொடுக்கறதே இல்ல..., கொடுத்தா நாங்களும் படிச்சிப் பாப்போம்ல...." என்று கேட்டான். “ஒரு நல்ல கவிதையா எழுதி தறேன்” என்றான் குமார்.
 
குமார், பல கவிதைகளை எழுதி கிழித்துப் போட்டான். சில கவிதைகளை நோட்டில் எழுதி வீட்டில் வைத்தான்.

ஒருநாள் ஒரு கவியரங்க கூட்டத்தில் குமார் கலந்து கொண்டான். பத்துக்கும் மேற்பட்டவர்கள் கவிதைகளை வாசித்தனர். அதில் சில கவிதைகள் குமாருக்கு பிடிக்கவில்லை. பல கவிதைகள் புரியவே இல்லை.

கவிதை வாசித்த கவிஞர்களைவிட கவிதைகளை கேட்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. குமார் மட்டும் கூட்டம் முடியும் வரை அங்கேயே அமர்ந்திருந்து அத்தனை கவிதைகளும் புரிந்ததுபோல் தலையாட்டி, கைத்தட்டிக் கொண்டிருந்தான்.
 
கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்த குமார், அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். இவர்கள் படித்த கவிதைகள் எதைப் பற்றியவை...? இந்த கவிஞர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தான். ஆனால் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படியே தூங்கிவிட்டான். 

மறுநாள் எழுந்து பல்கூட துலக்காமல் கவிதை எழுதத் தொடங்கினான். அதில் ‘இருண்மை’, ‘சூன்யம்’, ‘அவிழும் சொற்கள்’, ‘அலையும் ஆத்மா’, ‘ஆதாமும் ஏவாளும்’ என்று எத்தனையே சொற்களை பயன்படுத்தி எப்படியோ ஒரு முப்பது வரிகளை எழுதிவிட்டான்.
 
பின்னர் படித்துப்பார்த்தான் பல சொற்களை அடித்துத் திருத்தினான். நோட்டை மூடி வைத்துவிட்டு எழுந்தான். “அடுத்த கவியரங்கத்தில் இந்த கவிதையை நாமும் வாசித்துவிட வேண்டும்” என்று எண்ணினான். 

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு கவியரங்க கூட்டத்தில் குமார் கலந்து கொண்டான். அவன் படித்த கவிதையை, அங்கு கவிதை வாசித்த அனைவரும் பாராட்டினர். ஏழெட்டு கவிஞர்கள் பாராட்டியதால், நாமும் கவிஞராக மாறிவிட்டோம் என்று குமாருக்கு ஒரே சந்தோஷம்.
 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

அவனுக்கு அன்று இரவு நீண்ட நேரம் தூக்கமே வரவில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஒரு சிற்றிதழில் அந்த கவிதை வெளியிடப்பட்டது. அந்த செய்தியை குமார் அவனது நண்பன் சண்முகம் உள்ளிட்டவர்களிடம் பெருமையாக கூறினான்.
 
அந்த கவிதையை நண்பர்கள் படித்தார்கள், “என்னா, குமாரு இப்படி எழுதியிருக்க...? ஒன்னுமே புரியல ஆதாம்குற, சூனியம்கிற என்னதான் மச்சான் நீ சொல்லவர்ற” என்றான் சண்முகம்.
 
“ஏய் இதான்டா இப்ப டிரெண்டு நான் எழுதறது உங்களுக்குலாம் புரியாதுடா அதுக்குலாம் நெறிய அறிவு வேனும்டா, எத்தனை கவிஞர்கள் என்னை பாராட்டுனாங்கனு தெரியுமா?” என்றான் குமார்.
 
"மச்சான் நான் சொல்றேன்னு கோவிச்சிக்காத... சமையல் செய்றதா சொல்லிட்டு, உப்பு, மிளகாய், தண்ணீர் எல்லாத்தையும் ஒன்னா கலந்து வைக்கறத்து சமையல் இல்லடா, எத...., எப்ப, எப்படி சேககனும்னு தெரிஞ்சி, சுவைய கொண்டு வரனும், சாப்பிடுறவங்களுக்கும் அது ஆரோக்யமா இருக்கனும்டா, அது போலத்தான் கவிதையும்" என்றான் சண்முகம்.
 
அப்போது, அங்கு வந்த மற்றொரு நண்பன் கவிதையைப் படித்துவிட்டு “என்னடா இது, இவ்ளோ சுமாரா இருக்குது. நான் என்னமோ நீ செமயா எழுதியிருப்பனு நினைச்சேன், ஆனா நீ சுமார் கவிதை குமாரா இருக்க...” என்றான். எல்லோரும் கல கலவென சிரித்தனர்.
 
குமாருக்கு கடுமையாக கோபம் வந்தது. கவிதையை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். வீட்டிற்குச் சென்று படுத்துக் கொண்டான். நண்பர்களின் மீது அவனுக்கு வெறுப்பாக இருந்தது. இனி அவர்களை பார்க்கவே கூடாது என்று நினைத்தான்.
 
“குமாரு சாப்பிடலயா எந்திரிச்சி சாப்பிட்டு படுறா, நேரமாகுதில்ல” என்று அவனது தாய் எழுப்பினார்.

“சோறும் வேனாம் ஒன்னும் வேனாம்.... ஒங்க வேலைய பாத்துகிட்டு போங்க" என்று கோபமாகக் கூறினான்.

அன்று இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை. நடந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். "உண்மைதான் நான் சுமார் கவிதை குமாராகத்தான் இருக்கிறேன் என்று நினைத்தான். இப்படிப்பட்ட கவிதையை எழுதவா நான் ஆசைப்பட்டேன்... இல்லை இலலை" என்று நினைத்தபோது அவனுக்கே அவன் மீது வெறுப்பாக இருந்தது.
 
"கவிதையில் உணர்ச்சி இல்லை....., சமூக அக்கறை இல்லை.... மக்கள் படும் துன்பதுயரங்களைப் பற்றி கவலைப்படவில்லை..., சமூக அநீதிகளைக் கண்டு கோபப்படவில்லை...., என்னைப் போலவே நான் பிறரையும் நேசிக்க வில்லை" என்று அவன் நினைத்தபோது குற்ற உணர்வு அவனை துன்புறுத்தியது.

"இனி வாழ்க்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்... துன்பம் மிகுந்த வாழ்க்கையை மாற்றுவதற்கு உதவும் நோக்கில் கவிதைகள் எழுத வேண்டும்...." என்று நினைத்தான். அடிவானம் வெளுக்கத் தொடங்கியது..... விடியல் நெருங்கிக் கொண்டிருப்பதை குமார் கவனித்தான்.
 
"இனி தன்னை யாரும் சுமார் கவிதை குமாருனு சொல்லக்கூடாது" என்று எண்ணியபடி படுக்கையிலிருந்து எழுந்தான்.
                                                                                                                                      - சுரேஷ் வெங்கடாசலம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Show comments