Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலதிகாரியை கதற வைத்த இளம் பெண்கள்

சுரேஷ் வெங்கடாசலம்
செவ்வாய், 22 டிசம்பர் 2015 (12:52 IST)
அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முயலும் மேலதிகாரியை இரண்டு இளம் பெண்கள் கதறவைப்பதை சித்தரிக்கும் சிறுகதை. 


 




 
                                                             மேலதிகாரி
 
வழக்கம் போல கோகிலா அன்றும் 9 மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு வந்துவிட்டாள்.
 
கோகிலா எப்போதும் காலதாமதமின்றி அலுவலகத்திற்கு வருவது வழக்கம். அந்த அலுவலகத்தில் அவள் வேலைக்குச் சேர்ந்து 4 வருடங்கள் முடிந்து விட்டன. தனது வேலைகளில் எப்போதும் கவனமாக இருப்பாள்.
 
தன்னை யாரும் கேள்வி கேட்கும்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதில் எப்போதும் முனைப்புடன் இருப்பாள். கோகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை; அவளுக்கு சுமார் 23 வயதிருக்கும்.
 
சுறுசுறுப்பாகவும், குறும்புத் தனமாகவும், முகம் சுழிக்காமலும் இருப்பது கோகிலாவின் இயல்பு. இதனால் அந்த அலுவலகத்தில் உள்ள பலருக்கும் கோகிலாவை ரொம்பப் பிடிக்கும்.
 
கோகிலா, வழக்கம்போல, கம்ப்யூட்டரை பார்த்தபடி, கீபோர்டை தட்டத் தொடங்கினாள். அப்போது அலுவலகத்தைக் கூட்டி சுத்தம் செய்யும் அமுதவல்லி, அந்த அறையை கூட்டிக் கொண்டிருந்தாள்.
 
அமுதவல்லியை செல்லமாக வம்புக்கு இழுப்பது கோகிலாவின் வழக்கம். அன்றும் அப்படித்தான் நடந்தது.
 
"என்னக்கா, உங்களுக்கு ஒடம்பு வீங்ககிக்கிட்டே போகுது. இப்பலாம் பொம்பளங்க ஜிம்முக்குப் போயி ஒடம்ப ஸ்லிம்மா வச்சிக்கறாங்களே உங்களுக்கு தெரியாதா?" என்றாள் கோகிலா.
 
"என்னடியம்மா எங்கிட்ட வம்பு இழுக்குலயினா ஒனக்கு பொழுது போகாதே..." என்றாள் அமுதவல்லி.
 
"என்னக்கா செய்யறது நம்மளமாதிரி கூலி வேல பாக்கறவங்க எல்லாம் டார்ஜிலிங், சிம்லாவுக்கு எல்லாம் போயா என்ஜாய் பன்ன முடியும்? இந்த மாதிரி நமக்குள்ளயே பேசி என்ஜாய் பண்ணிக்கிட்டதான் உண்டு" என்றாள்.
 
"அட போடியம்மா டார்சிலிங்காம் டார்..சி....லிங்..கு.., பக்கத்துல இக்குற பீச்சிக்கே போகமுடியலயாம் இதுல டார்சிலிங்கு போயி என்சாய் பண்ணலனு சொல்ற.." என்று கூறியபடி, கோகிலாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அமுதவல்லி, "ஆனாலும் நீ சொல்றது உண்மை தான்டியம்மா! ஒன்னப் பாத்தா மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் வருது. வேல செய்யுற களைப்பே தெரியாம இருக்கு." என்றாள்.
 
சிரித்துக்கொண்டே மீண்டும் கீபோர்டை தட்டத்  தொடங்கினாள் கோகிலா.
 
அப்போது அந்த அலுவலகத்தின் மேலதிகாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கோகிலா ரிசீவரை எடுத்து காதில் வைத்தாள், "கோகிலா என் ரூமுக்கு வா!" என்று கூறினார் அந்த மேலதிகாரி. இதைக் கேட்டதும் கோகிலா முகத்தை சுழித்தபடி எழுந்து அந்த மேலதிகாரியின் அறைக்குப் போனாள்.
 
"உக்காரு கோகிலா." என்றார் அந்த மேலதிகாரி.
 
கோகிலா உட்கார்ந்தாள். "சொல்லுங்க சார்" என்றாள்.
 
"என்ன கோகி என்ன செய்ற பிசியா?" என்று கேட்டார்.
 
" இல்லங்க சார்... சொல்லுங்க" என்றாள் .
 
"நான் சொன்னதப் பத்தி என்ன முடிவெடுத்திருக்க?" என்றார்.
 
இதைக் கேட்ட கோகிலாவுக்குக் கண்கள் ரெண்டும் சிவந்தன, கோபத்தால் அவளது ரத்த ஓட்டம் அதிகரித்தது. இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. உடல் லேசாக நடுங்கியது. தனது கோபத்தை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
 
கோகிலா விருட்டென்று எழுந்தாள். பதில் எதுவும் பேசாமல் கதவை "தடால்" என்று திறந்தபடி வெளியேறினாள். ஒருவேளை அந்த கதவு பலவீனமாக இருந்திருந்தால் உடைந்து விழுந்திருக்கும்.
 
அந்த நிறுவனத்திற்கு அவர்தான் மேலதிகாரி. அவருக்கு சுமார் 55 வயதிருக்கும். மேலான வேலைகள் எதையும் அவர் செய்வதில்லை. ஆனாலும் அவர்தான் மேலதிகாரி.
 
சில தினங்களுக்கு முன்னர் இந்த மேலதிகாரி இதேபோல கோகிலாவை தனது அறைக்கு அழைத்தார். பாதி நரைத்த தனது தலைமுடியை கோதியபடி அவளை ஏற இறங்க பார்த்துக் கொண்டே அமரச் சொன்னார்.
 
"சொல்லுங்க சார்" என்று கூறியபடி அமர்ந்தாள் கோகிலா.
 
"வர ஞாயித்துக் கிழமை பாண்டிச்சேரியில ஒரு பங்ஷன் இருக்கு அந்த பங்ஷனுக்கு உன்னையும் கூட்டிட்டு போலாம்னு விரும்பறேன்" என்றார்.
 
"என்ன பங்ஷன் சார், நான் எதுக்கு வரனும்" என்று கேட்டாள்.
 
"சும்மா அப்படியே போயிட்டு... ஜாலியா சுத்திப் பாத்திட்டு வரலாம்; அங்க பீச் நல்லா இருக்குமாமே" என்றார் அந்த மேலதிகாரி.

மேலதிகாரியின் மேலான நோக்கத்தைப் புரிந்துகொண்ட கோகிலாவுக்கு கோபம் தலைக்கேறியது.
 
விறுட்டென்று எழுந்து அந்த மேலதிகாரியை முறைத்துப் பார்த்தபடி இதேபோல அன்றும் வெளியேறினாள்.
 
இந்த மேலதிகாரி இப்படித்தான் பல பெண்களை தன்வசப்படுத்தி தனது இச்சசைக்கு பணியவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
 
இந்த நிறுவனத்திற்கு அவர் வந்து 6 மாதங்கள்தான் ஆகின்றன. இதற்குள்ளாக பல பெண்களிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
கோகிலாவுக்கு அந்த மேலதிகாரி கொக்கி போடுவது இதுதான் முதல்முறை.

அன்று மாலை கோகிலா வீட்டிற்குச் சென்றதும் இது குறித்து சிந்திக்கத் தொடங்கினாள். இந்த விஷயத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என்றும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் யோசித்துக் கொண்டே இருந்தாள்.

கோகிலாவுக்குத் தூக்கம் வரவில்லை. அந்த அறையில் மின்விசிறி ஓடியபோதும் அளளுக்கு ஒரே புழுக்கமாக இருந்தது. இதயம் படபடத்தது. படுக்கையில் புரண்டு.. புரண்டு படுத்துப் பார்த்தாள். ஆனாலும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை.

வழக்கம் போல மறுநாள் கோகிலா அலுவலகத்தற்குச் சென்றாள். தனது பணிகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.
 
அவளுக்கு அருகில் அமர்ந்து வேலைசெய்யும் யாமினி கண்கள் கலங்கியபடி அமர்ந்திருந்தள். அவள் கோகிலாவைப் பார்த்ததும் தனது கண்களை துடைத்துக் கொண்டு தனது பணியை தொடங்க முயற்சிப்பதை கோகிலா கவனித்தாள்.
 
பின்னர் யாமினியும் கோகிலாவும் கேண்டீனுக்குச் சென்றனர். அப்போது யாமினி அந்த மேலதிகாரி தன்னிடம் தவறாகப் பேசுவதாகக் கூறி தகறி அழுதாள்.
 
“நாம் வயித்துப் பொழப்புக்கும், நம்ம குடும்ப வறுமையாலும் வேலைக்கு வந்தா இங்க நம்ம மானத்தை வித்து பிழைக்கச் சொல்லறாங்க.. அசிங்கம் பிடிச்ச நாயிங்க” என்று கண்களில் நீர் வடிய நடுங்கிய குரலுடன் கூறினாள் யாமினி.
 
“சரி விடு யாமி... அதயே நினைச்சு பீல் பண்ணாத... இவங்கள எல்லாம் இப்படியே விட்டா சரிபடாது.  நாம ஏதாச்சும் செய்யனும்” என்றாள் கோகிலா.

"நாம என்ன செய்ய முடியும்னு சொல்லு... அவுங்க கையில எல்லாமே இருக்கு... அதிகாரத்த கையில் வச்சிக்கிட்டு அவுங்க நம்மள துன்புறுத்துறாங்க" என்றாள்.
 
"அதுக்காக அவுங்க என்ன செஞ்சாலும் நாம சரின்னு ஒத்துக்கிட்டு போகனும்மா...?" என்று கோபமாகக் கூறினாள் கோகிலா.
 
 
“சரி கோகி என்ன செய்யலாம்னு சொல்லு" என்றாள் யாமினி.
 
"நாம செய்யறது, இந்த ஆளுக்கும் இந்த மாதிரி இருக்குற மத்த ஆளுங்களுக்கும் மிகப்பெரிய பாடமா இருக்கனும் இப்டிப்பட்ட தப்ப இனி எவனும் பண்ணக் கூடாது, பண்ணனும்னு நினைச்சாலே பயம் அவுங்கள கொல்லுற மாதிரி பெருசா செய்யனும்" என்று கோகிலா கோபமகாகக் கூறினள்.
 
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு கோகி... இதெல்லாம் என் புருஷனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான், என்னைய அடிச்சே கொன்றுவாறு அந்த குடிகார மனுஷன்" என்று கண்ணீரைத் துடைத்தபடி கூறினாள் யாமினி.
 
மறுநாள் காலை வழக்கம் போல கோகிலாவும் யாமினியும் அலுவலகத்திற்கு வந்தனர். அந்த மேலதிகாரி யாமினியை தனது அறைக்கு வருமாறு அழைத்தார்.
 
"ம்ம்ம்.. நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க..." என்று கூறியபடி அவளை ஏற இறங்கப் பார்த்தார் அந்த மேலதிகாரி.
 
"உன் வீட்டுக்காரர் என்ன என்னவிட அழகா இருப்பாரா என்ன?.." என்று ஓரக்கண்ணால் பார்த்தவாறு கேட்டார்.
 
“சார்... எதுக்கு தேவை இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க. இது ஆபீஸ் நாங்க இங்க வேல செய்யறவ. நீங்க எனக்கு மேலதிகாரி. அவ்ளோதான். என்னோட பர்சனல் விஷயத்தப் பத்தி உங்ககிட்ட சொல்லனும்ற அவசியம் எனக்கில்ல... அதொல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்” என்று தயங்கித் தயங்கி கூறிய யாமினியால் அழுகையை அடக்க முடியவில்லை.
 
அவளது கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.
 
”இதைக் கேட்டு, நமட்டு சிரிப்பு சிரித்த அந்த மேலதிகாரி “இங்க பாரு யாமினி உனக்கு இப்ப சின்ன வயசு. இன்னும் எவ்வளவோ பாக்க வேண்டி இருக்கு. இப்படி வெளியில போறதொல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. இதை எல்லாம் சாதாரணமா எடுத்துக்கனும். இப்போலாம் காலம் எவ்வளவோ மாறிப்போச்சு. புரிஞ்சுக்கோ. இதுக்கெல்லாம் யாராவது கண் கலங்குவாங்களா? என்று கூறினார்.
 
 
“சார்.. மத்தவங்க எப்படி வேணுமுனாலும் இருக்கலாம்.. அது எனக்குத் தெரியாது, நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல. என்னைய விட்டுடுங்க...” என்று கெஞ்சினாள் யாமினி.
 
“சும்மா அழுது கண்ணீர் வடிச்சி உன்னோட எனர்ஜிய வேஸ்ட் பன்னாத, என்னோட பதவியப் பத்தி ஒனக்கே நல்லா தெரியும்; ஒன்ன எப்பவேனும்னாலும் வேலய விட்டுத் தூக்குற அதிகாரம் எனக்கு இருக்கு; உன் குடும்ப நெலமய பத்தி நல்லா யோசிச்சுக்க.” என்று கூறினார் அந்த மேலதிகாரி.

மேலும், “நீ என்னோட ஊட்டிக்கு வர சரியா” என்று அதிகார தொணியில் கூறினார்.
 
கோகிலாவை பாண்டிச்சேரிக்கும் யாமினையை ஊட்டிக்கும் அழைத்துச் செல்வதில் அந்த மேலதிகாரி குறியாக இருந்தார்.
 
“சார் என்னாலலாம் உங்களோட வரமுடியாது சார்..., பிளீஸ் என்ன விட்டுங்க”. என்று மீண்டும் கெஞ்சினாள் யாமினி.
 
பின்னர் கண்களைத் துடைத்தபடி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
 
மறுநாள் காலை அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அலுவலகத்திற்கு முன்னர் திரண்டிருந்தனர். இதனால் அந்த வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
 
வழக்கம் போல அந்த மேலதிகாரி தனது காரில் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கு கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்தபடி காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்தார்.
 
அருகில் வந்து, "என்ன இங்கு கூட்டம்" என்று கேட்டபடி கூட்டத்தைக் கவனித்தார். அங்கு செய்தியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் குவிந்திருப்பதைக் கலக்கத்துடன் கவனித்தார்.
 
அப்போது அலுவலகத்தின் வாயிலுக்குள் காவல்துறையினரின் வாகனம் நுழைவதைப் பார்த்தவுடன் அவரது இதயத்துடிப்பு அதிகரித்தது.
 
செய்தியாளர்கள் அவரை நெருங்கி வருவதைப் பார்த்தபோது அவருக்கு புரிந்துவிட்டது. தனது சில்மிஷங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன என்று எண்ணினார்.
 
உண்மைதான். கோகிலாவும் யாமினியும் கேண்டீனுக்குச் சென்றபோது, அவர்கள் இருவரிடமும் அந்த மேலதிகாரி தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பது குறித்து பேசினர்.
 
அப்போது கோகிலா, “இங்க பாரு யாமினி நீ எதப்பத்தியும் கவலப்படாத. இந்த கம்பெனி இல்லனா நமக்கு எத்தனையோ கம்பெனிங்க இருக்கு. நம்ம மானத்தையும் கற்பையும் இழந்துதான் வேல பாக்கனும்குற அவசியம் இல்ல."
 
"அதுமட்டும் இல்ல இந்த மாதிரி ஆளுங்கள நாம சும்மா விடறதால நம்மப்போல எத்தனையோ பொண்ணுங்களோட வாழ்க்கை பாழாகிறும். இத நெனச்சிதான், அந்த ஆளு எங்கிட்ட ஒரு மாதிரியா பேசுனப்பவே சுதாரிக்க ஆரம்பிச்சேன்.
 
அந்த ஆளு எங்கிட்ட பேசுனத எல்லாம், எங்கிட்ட இருந்த ஒரு சின்ன கேமராவால அந்த ஆளுக்கே தெரியாம படம் எடுத்து வச்சிருக்கேன்.” என்று கூறினாள்.
 
இதைக் கேட்டபோது குழப்பத்திலும், மன உளைச்சலாலும் அவதிப்பட்டு வந்த யாமினிக்கு தைரியம் வரத் தொடங்கியது.

கோகிலவைப் போவவே அவளும் அந்த மேலதிகாரியின் கீழ்த்தரமான பண்பை படமெடுப்பது என்று முடிவு செய்தாள் அவ்வாறே அவர் ஊட்டிக்கு கூப்பிட்டபோது படம் பிடித்தாள்.
 
இதைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் கோகிலா, அந்த வீடியோக்களை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டாள்.
 
அத்துடன், காவல்துறை அதிகாரியிடம், அந்த மேலதிகாரியின் நடவடிக்கை பற்றி ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தாள். மேலும், அந்த வகிரபுத்தி கொண்ட மேலதிகாரி எந்த விதத்திலும் தப்பிக்கக் கூடாது என்று நினைத்து, ஊடகங்களுக்கும் இந்த தகவலை தெரிவித்தாள். அதன் விளைவுதான் இந்த பரபரப்பும் கூட்டமும்.
 
அந்த மேலதிகாரியைப் பார்த்ததும், அங்கு வேலை செய்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவரை சூழ்ந்தனர். அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த மதிப்பிற்குரிய மேலதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
 
இதைத் தொடர்ந்து அந்த அதிகாரிக்கு அடியும் உதையும் சரமாரியாக விழத்தொடங்கியது. இதனால் அந்த அதிகாரி வலி தாங்க முடியாமல் துடிதுடித்தபடி கதறத் தொடங்கினார்.
 
அப்போது அங்கு ஓடிவந்த காவல்துறையினர் கூட்டத்தினரை விலக்கி அந்த மேலதிகாரியை மீட்டு, கைது செய்து காவல்துறையினரின் வாகனத்தில் ஏற்றினர். அடிபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருந்த முகத்தை செய்தியாளர்களுக்குக் காட்டியபடி, கிழிந்த சட்டையுடன் அந்த மேலதிகாரி வாகனத்தில் ஏறினார்.
 
                                                                                                                          - சுரேஷ் வெங்கடாசலம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?