Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரமை

பாரதசாரி

Webdunia
சனி, 31 மார்ச் 2012 (13:48 IST)
FILE
டாக்டர், நான் ரவி, இவன் கௌதம். நாங்க தான் திவாகர இங்க கூட்டிகிட்டு வந்தது. இப்போ எப்படி இருக்கு அவனுக்கு?"

" மிஸ்டர் ரவி , நீங்க மட்டும் உள்ள வாங்க" என்ற டாக்டர் பத்ரன் , அன்று சரியாக பல் விளக்கவில்லை என்பது சற்று தூரத்திலே தெரிந்தது.

" சொல்லுங்க மிஸ்டர் ரவி என்ன ஆச்சு?"

" அவன எனக்கு ஒரு வருஷமா தெரியும், நல்லா வேலை பாக்கறவன், இது வரைக்கும் லேட்டா கூட வராதவன் , ஒரு மாசமா ஆஃபீஸ் வரவே இல்ல, சரின்னு அவன் வீட்டுக்கு போய் பாத்தப்போ , யார் கிட்டயோ சண்ட போட்டுக்கிட்டிருந்தான்"

" அப்படியா மேல சொல்லுங்க"

" உள்ள போய் பார்த்தா தான் தெரியுது உள்ள யாருமே இல்ல, தனக்கு தானே பேசிக்கிட்டிருந்தான்.கத்தியால தன்னையே குத்திக்க போனான்,தடுக்க போனப்போ எனக்கும் கைல வெட்டு, இங்க பாருங்க..."

" அடடே, நீங்க வந்து அங்க படுங்க, நான் கட்டு போடறேன்"

" இல்ல பரவாயில்ல டாக்டர், முதல்ல அவன கவனிங்க"

" அவருக்கு இருக்குற ப்ரச்சனைய நீங்க புரிஞ்சிக்கனும்னா, நான் சொல்றத கேளுங்க. அப்போ தான் அவருக்கு குணமாகும்".

குழப்பமாக ரவி சென்று படுத்தான். அருகாமையில் அவர் வாயை சந்திக்கும் அவஸ்தையை நெடு நேரம் அவனுக்கு கொடுக்கவில்லை டாக்டர். முகத்தில் வாயை மூடும்படியான முகமூடியை போட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டான் ரவி.

" அப்படியே ரிலாக்ஸ் பண்ணுங்க ரவி, கண்ண மூடுங்க, நான் ஒண்ணுலேந்து பத்து வரைக்கும் எண்ணுவேன் , நீங்க ஆழமா மூச்சு விட்டுட்டு நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க, எப்போவாவது சின்ன வயசுல உங்களுக்கு விபத்து நடந்திருக்கா?"

" காலேஜ் படிக்கும்போது.." என்று தொடங்கி அவன் சொல்ல சொல்ல டாக்டர் அதை பதிவு செய்ய தொடங்கினார். அரை மணி நேரம் போனது தெரியாமல் , தாடி கதாநாயகர் போல் வாய்க்கு வந்ததை பேசி தீர்த்துவிட்டான் ரவி.கண் விழித்துப் பார்த்தபோது, டாக்டர் அவனை கூர்ந்து பார்த்துகொண்டிருந்தார், புரியும்படி சொல்லவேண்டுமென்றால் , குறுகுறுன்னு பார்த்தார் .

" என்ன டாக்டர் எனக்கு என்ன ஆ cச்சு?"
" ஒண்ணும் இல்ல, நீங்க நேத்திக்கு சரியா தூங்கல போல இருக்கு, அசந்து தூங்கிட்டீங்க , அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டேன்."

" சரி டாக்டர் , திவாகருக்கு..."

" அவருக்கு ஒண்ணும் ஆகாது பயப்படவேண்டாம், சரி கொஞ்சம் வெளியே போய்ட்டு கௌதம உள்ள அனுப்புங்க ப்ளீஸ்".

" கூப்டீங்களா டாக்டர்?"

" யெஸ் மிஸ்டர் கௌதம், அவருக்கு சிவியர் டெல்யூஷன் தான்"

" அவர் ஃப்ளாட்ல நடந்ததா நீங்க சொன்னதெல்லாத்தையும் , திவாகர் வீட்ல நடந்ததா சொன்னார்"

" அவன எனக்கு ஒரு வருஷமா தெரியும், நல்லா...."

" தெரியும் சொன்னார்...நல்லா வேலை பாக்கறவன், இது வரைக்கும் லேட்டா கூட வராதவன் , ஒரு மாசமா ஆஃபீஸ் வரவே இல்ல, சரின்னு அவன் வீட்டுக்கு போய் பாத்தப்போ , அதானே?"

" ஆமா"

" ஹூம்.. சில ஸ்கேன் எடுக்கனும், அடுத்த வாரம் கூட்டிகிட்டு வாங்க. அவர பொருத்த வரை திவாகர்னு ஒருத்தர் இருக்கறது நிஜம், அவருக்கு தான் நான் ட்ரீட்மெண்ட் தர்றேன் சரியா?"

வெளியில் நெற்றியில் வியர்வையோடு நகத்தை கடித்தபடி ரவி உட்கார்ந்திருந்தான். கௌதமும் டாக்டரும் வெளியில் வந்தார்கள்.

" மிஸ்டர் ரவி, திவாகருக்கு செடேஷன் குடுத்திருக்கேன் , நல்லா தூங்கறர், நீங்க அடுத்த வாரம் வந்தா போதும் . ரெண்டு பேரும் வாங்க"

" டாக்டர்... ஃபீஸ்...?" என்று பர்சை எடுக்க எத்தனித்த ரவியை "வேண்டாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம்" என்று மறுத்த டாக்டர் பத்ரன் அவர்கள் இருவரும் போவதை அசைவின்றி நின்றபடி பார்த்துக் கொன்டிருக்கும் போது பின்னாலிலிருந்து அவரை அழைத்தார் சக டாக்டர் திருமலை.

" ராம பத்ரன் , உங்க கூட நான் பேசனும்"
" ப்ளீஸ் கால் மீ டாக்டர் பத்ரன்" என்று கோபாமாக கத்தினார் ராம பத்ரன்.

" ஓகே.... ஒகே.... டாக்டர் பத்ரன் எப்படி இருக்கீங்க? காலைல மாத்திரை போட்டுக்க மறுத்துட்டீங்களாமே? சுப்பையா சொன்னான்"

" அது கசப்பா இருக்கு, எனக்கு வேண்டாம் எனக்கு ஒண்ணும் இல்லையே எனக்கு எதுக்கு மாத்திரை?" என்றார் ராம பத்ரன்.

யாருமற்ற திசையை காட்டி"அதோ போறரே ரவி , அவர் என்னோட புது பேஷண்ட் " என்றார் இல்லாத ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி.

" ஓஹோ அப்படியா , வெரி குட். வாங்க நம்ம என்னோட ரூமுக்கு போய் பேசலாம்"

என்று ராம பத்ரன் தோளில் கையைப் போட்டு ஆதரவாகவும் கைத்தாங்களாகவும் அவரை வழி நடத்தி நடக்க தொடங்கினார் டாக்டர் திருமலை.
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த டாக்டர் திருமலை அருகில் இல்லாத யாரையோ அணைத்துக்கொண்டு போவதை பின்புறத்திலிருந்து பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு கணத்தில் அவர் நடைத் தடுமாறி படியில் விழத் தெரிய அவரைப் பிடிக்க ஓடினேன்.

" அவர் படில விழப்போறார்" என்று அலறிக்கொண்டே.

" அங்க படியும் இல்ல யாரும் இல்ல, வா என்னோட, தூங்க வேண்டாமா? நேரம் என்ன ஆச்சு பாத்தியா இருபத்தஞ்சு மணி எண்பத்தி ரெண்டு நிமிஷம்" என்று என்னை குரோதமாக தர தரவென்று இழுத்துச் சென்ற திவாகர் கையில் ஒரு கத்தியிருந்தது.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments