Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌ண்ட‌ல்

-பா‌ல்‌நிலவ‌ன்

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2009 (16:41 IST)
ந‌வீன ‌விரு‌ட்ச‌ம் எ‌ன்ற இத‌ழி‌ல் வெ‌ளியான சு‌ண்ட‌ல் எ‌ன்ற ‌சிறுகதையை உ‌ங்களு‌க்காக தே‌ர்‌ந்தெடு‌த்து வழ‌ங்கு‌கிறோ‌ம்.

webdunia photo
WD
தென்னந்தோப்பின் இளங்காற்றில் எங்கள் சாயங்காலம் நன்றாயிருந்தது. வாத்துக்கள் மேய்க்கும் மூசா பாய் அந்த வழியாகத்தான் எங்களை கடந்து போக வேண்டும். ஒவ்வொரு வாத்தையும் நாங்கள் தூக்கிப் பார்த்து அதன் கழுத்தழகையும் மழமழவென்றிருக்கிற மென்னியையும் தடவி விட்டுப் பார்த்து அதைத் தண்ணீர் வாய்க்காலில் விடுவோம். இன்றும் அப்படி ஆனதும் இருட்டாகும் போலிருந்தது. லேசாக தூறல் அடித்தது.

எதிரே சசி ஓடி வருவது போலிருக்கிறது.

நான், ரமேஷ், சுசி, ரஞ்சனி, மணி எல்லோரும் ஆவலுடன் அவளை எதிர்நோக்கினோம். சசி ஓடிவரும் வேகம் ஏதாவது ஒரு மரத்தில் இடித்துக்கொள்வான் போலிருக்கிறது. மூச்சு வாங்க எங்கள் அருகே வந்து நின்றாள் அவள்.

“யேய் பசங்களா இன்னிக்கு சனிக்கிழமை,” என்றாள் அவள்.

“ஐயோ இப்ப இன்னா பண்றது.”

“நீ சும்மா இருக்கியா கொஞ்சம். சனிக்கிழமை தாத்தா பெருமாள் கோவிலுக்கு பஜனைக்குப் போவாரு...”

“ஹையா.. சுண்டல் இன்னிக்கு ஹை.. சுண்டல் இன்னிக்கு.”

நாங்களெல்லாம் எகிறி எகிறி குதித்தோம். நான் சுசியின் காது வளையத்துக்குள் விரலை விட்டேன். “ஐய சும்மா இரேன்,” என்ற அவளின் கட்டளையை மறுத்தேன். “சும்மா இருக்க மாட்டேனே,” என்று நான் மேலும் எகிறி குதித்தேன்.

மணிப்பையன் சட்டென்று என் டிராயரின் பின்பக்க கிழிந்த ஓட்டையில் கையைவிட்டு, “இப்ப என்ன பண்ணுவே,” என்றான். நான் அவனை அடிக்க விரும்பி கையை ஓங்கினேன். சசி என் கையைப் பிடித்துக்கொண்டாள். “சும்மா இருக்க மாட்டீங்களா - நான் என்ன சொன்னேன் இன்னிக்கு சனிக்கிழமைதானே..”

“இல்ல வெள்ளிக்கிழமை...”

“இல்ல. ஞாயிற்றுக்கிழமை...”

“யேய் உனக்கு ரொம்ப தெரியுமா...”

“ சரி, உனக்கு ரொம்ப தெரியும்னு வச்சுக்கோயன்.”

“ச்சூ... கம்முனு இருங்க இன்னிக்கு தாத்தா பஜனைக்கு போவாரு..”

“ஹை...ஆமா...ஆமா... அப்படின்னா சுண்டல் கொண்டாருவாரே...”

“ஆமா, அதுக்குத்தான் சொன்னேன். என்னிக்கும்போல இன்னிக்கும் நீங்கள்லாம் படிக்கணும். கொஞ்சநேரமாவது ஒக்கார்ந்து படிச்சாத்தானே சுண்டல் கிடைக்கும்... ”

நாங்கள் அமைதியாக தென்னந்தோப்பில் நடந்தோம். குதித்துக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் இருந்த நாங்கள் அமைதியாக பேசிக்கொண்டு தென்னந்தோப்பைக் கடந்து பெரிய கால்வாய் ஒன்றில் நீர் வேகத்தில் குறுக்கே சில்லென்ரு நடந்து சோளக்கொல்லை வழியாக எங்கள் வீட்டு நிலா மைதானத்தை அடைந்தோம்.

மைதானம் முழுக்க நிலா வெளிச்சம் பரவிக்கிடந்தது.

எங்கள் வீட்டு மைதானத்தில் சின்ன லைட் வெளிச்சம் ஒயர்கொண்டு வந்து கொம்புநட்டு பல்ப் போட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களுக்காக. அங்கே அமைதியாக உட்கார்ந்து புத்தகங்களையும் ஸ்லேட்டுகளையும் நோட்டுக்களையும் கொண்டு வந்து எழுதப் படிக்க ஆரம்பித்தோம். காற்று அருமையாக வீசியது.

இங்கே இருந்தே சசி சத்தம் போட்டு கேட்டாள், மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கிக்கொண்டிருந்த புதிய வேலைக்காரனிடம், “தே ஆள்காரரு சொக்கலிங்கம் தாத்தா பஜனைக்குப் போய்ட்டாரா?”

“ம்.. கிளம்பிட்டாரு பாப்பா... இப்பத்தான் ராஜு ஐயா பொட்டி வண்டில உக்கார வச்சிகிட்டு போனாங்க..”

பெருமாள் கோவில் இங்கிருந்து ரொம்ப தூரம் இருக்கிறதென்பதை எங்களுக்கு ஜக்குபாட்டி சொல்லியிருந்தாள். ஆனால் நாங்க‌ள் அங்கு ஒருமுறை கூட போனதில்லை.

மணி எழுத ஆரம்பித்தான். சசி சத்தம் போட்டுப் படித்தாள். ரஞ்சனி டிராயிங் நோட்டில் கிளி போட்டாள். சசியும் ஏதோ எழுதினாள். அவளுடைய கையெழுத்து அச்சு அச்சாக இருக்கும். அதைப் பார்த்துக்கொண்டே நான் இருந்தேன். அவளிடம் எனக்குப் பிடிக்காத விஷயங்களும் இருக்கவே செய்தன. உதாரணமாக கண்ணாடியில் தன் ஸ்டைல் முகத்தைப் பார்த்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் கொஞ்சிக்கொண்டு தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டு இருப்பது எனக்கு நிறைய வெறுப்பாக இருக்கும்.

திடீரென்று சசி என் தலையில் குட்டி, “அப்படிப் போய் ஒழுங்கா ஒக்காந்து படி,” என்றாள். எனக்கு அவள்மேல் வெறுப்பு வந்தது. நான் சற்றுத் தள்ளி அமர்ந்து லைட் வெளிச்சத்தையும் நிலா வெளிச்சத்தையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்த்தேன். நிலாவைச் சுற்றிலும் ஈக்களும் விட்டில்களும் வண்டுகளும் பறக்காததையும் பல்பைச் சுற்றிலும் மட்டும் அவைகள் பறந்து பறந்து சுற்றிச் சுற்றி வருவதையும் நான் கண்டு பிடித்தேன். எனக்கு யோசனை நிறைய வந்தது.

சசி என்னை முறைத்தாள்.

சட்டென்று நானும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பதைப்போல பாவனை செய்தேன். இந்தச் சூழ்நிலையில் ரொம்ப நேரம் கழிந்து கொண்டிருந்தது. அவரவர்கள் அவரவர்களுடைய வேலையில் இருந்தார்கள். நான் மட்டும் முட்டாளா? நானும்தான் எல்லோரையும் போல் ஒன்று செய்தேன். புத்தகத்தை மடியில் வைத்து அதன் எழுத்துக்களை முறைத்துக்கொண்டிருந்தேன். என் ஞாபகமெல்லாம் சுண்டலில்தான் இருந்தது.

நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒன்றும் வீட்டுப்பாடம் காண்பிக்க வேண்டிய வேலை கிடையாது. கேள்வி கேட்கிற பதில் சொல்கிற வேலையும் கூட நாளைக்கு கிடையாது. அப்புறம் எதற்கு மாய்ந்து மாய்ந்து படிக்க எழுத வேண்டும்.

எப்படியும் இரண்டு மணி நேரத்திற்குமேல் ஆகியிருக்கும் போலிருக்கிறது. கப்சிப்பென்று இருந்தது. சத்தம் போட்டு படித்துக்கொண்டிருந்த சசியும் மெதுவாகப் படித்துக் கொண்டிருந்தாள்.

மேலும் மேலும் நேரமாகிக்கொண்டிருந்தது.

நான் இந்த அமைதியை உடைக்க விரும்பினேன். பேச ஆரம்பித்தேன்.

“இன்னிக்கு பட்டாணி சுண்டல்தான் வரும்”

“என்ன பட்டாணி சுண்டலா? ஆஹா..”

படிக்கிற எழுதுகிற வேலைகளை நிறுத்தி என்னைப் பார்த்தார்கள்..நான் மேலும் சந்தோசம் ஒரு சந்தோஷம் அளிக்கிற குண்டைப்போட்டேன்... ” அதுல வறுத்த முந்திரியெல்லாம் கூட கலந்திருப்பாங்க” எல்லோரும் பேனா பென்சிலை பலப்பத்தையெல்லாம் எடுத்து வைத்துவிட்டு என்னருகே வந்து அமர்ந்தார்கள். அவர்கள் கண்களில் இப்போதுதான் ஒளி வீசியது. சுண்டல் ஒளி பிரகாசம்.

சசியும் , “படிப்பு முடிஞ்சிருச்சா?” என்று கேட்டபடி நகர்ந்து நகர்ந்து எங்களருகில் அமர்ந்தாள்.

“போனவாரம் மூக்குக் கடலை சுண்டல், அதுக்கு முன்வாரம் கொண்டைக் கடலை, அதுக்கும் முந்தி மொச்சை கடலைச் சுண்டல். அதுக்கும் முன்னே பச்சைப் பயிறு சுண்டல். அதனாலதான் நான் சொல்றேன். இன்னிக்குப் பட்டாணி சுண்டல்... ”

“இல்ல இன்னிக்கு காராமணி சுண்டல்..”

“சரி, ஏதோ ஒரு சுண்டல் ஆஹா ஜாலி.”

நாங்கள் எகிறி எகிறி குதித்தோம். எங்களுக்கும் சுண்டல் மகிழ்ச்சி அற்புதமாயிருந்தது. தூரத்தில் பொட்டு வண்டியில் உடன் சில மா‌ட்டு வ‌ண்டிகளு‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ப்பதை நா‌ங்க‌ள் கவ‌னி‌த்தோ‌ம். எங்கள் குதூகலம் மேலும் அதிகமாகியது. நாங்கள் ஆடினோம். டேன்ஸ்கூட. சசியும் ஒரு டேன்ஸ் ஆடினாள். கொள்ளை மகிழ்ச்சி எங்களுக்கெல்லாம்.

மாட்டுவண்டிகள் எங்கள் மைதானத்திற்குள் வந்து நின்றது. அதில் நிறைய பாகவதர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் அழுதுகொண்டிருந்தார்கள். ராஜூ மாமாவும் அழுதுகொண்டிருந்தார். பொட்டி வண்டியை விட்டு இறங்கிய்து.

“யேய் கண்ணுங்களா ஆட்டம் ஆடக்கூடாது.. தாத்தா செத்துப் போய்ட்டாரு. கம்னு இருக்கணும்..” என்றார் ஒரு பாகவதர்.
எனக்கு திடீரென்று சொல்லமுடியாத வேதனை வந்தது. இந்த உலகத்தில் இனி எதுவுமே இல்லை என்பது போல் தோண்றியது. “அப்படியென்றால் சுண்டல் இல்லையா இப்போது... ”

தாத்தாவை பொட்டி வண்டியிலிருந்து இறக்கினார்கள். இவ்வளவு நேரம் படுக்க வைத்திருந்தார்கள் போலிருக்கிறது. வீட்டிலிருந்து எல்லோரும் ஓடிவந்து லபோதிபோ என்ரு அரற்றினார்கள்.. அழுது இரைச்சலிட்டார்கள்.. கானம் ஆட போனவர்கள் மடை திறந்துவிட போனவர்கள் தோட்டத்தில் நெல் அவித்துக் கொண்டிருந்தவர்கள்.. திண்ணையில் மல்லாட்டா உரித்துக்கொண்டு நன்னிப்பயிர் பொறுக்கிக் கொண்டிருந்தவர்கள் என்று எல்லா வேலைக் காரர்களும் கூட தங்கள் தங்கள் வேலைகளை போட்டுவிட்டு திபுதிபுவென்று ஓடிவந்தார்கள்.

பிரமாண்டமான அந்த ஒரு திண்ணையை சடுதியில் சுத்தம் செய்து அங்குதான் தாத்தாவை கொண்டுபோய் படுக்க வைத்தார்கள்.

ஒரு பாகவதர் சாணி வாரும் எல்லம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “ஒண்ணுமில்ல மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்னு பாடிக்கிட்டே.. மதிநிறைந்த நன்னாளாம்னு மறுபடியும் திரும்பப் பாடிட்டு..அப்புறம் நன்னாளாம்னு ஒரு சொல்லை மட்டும் சொல்லிட்டு நிறுத்திட்டாரு... என்னன்னு பாத்தா... கண்ணெல்லாம் சொருவுது ஆளு கீழ சாஞ்சிட்டாரு அப்படியே... ”

எங்களுக்கு வெறுப்பு தட்டியது.

நான் சொன்னேன், “யேய் பசங்களா வாங்க சசியை உதைப்போம். அவதானே சொன்னா படிச்சா சுண்டல்னு எங்கே சுண்டலையும் காணோம். வண்டலையும் காணோம்..”
எல்லோரும் சசியை இழுத்துக்கொண்டு மைதான லைட் வெளிச்சத்தில் குத்து குத்தென்று குத்தினோம். சுசி சசியைக் கிள்ளினாள். நான் சசியின் சூத்தாம்பட்டையில் ரெண்டு வைத்தேன். ஒரு பாகவதர் மட்டும் எங்களை நோக்கி வந்தார். ஒரு போகினையைத் தந்து பசங்களா இந்தச் சுண்டலை உள்ளே கொண்டுபோய் வைங்க தோ வரேன்... ” என்று விட்டுப் போனார்.

போகினி மூடியை திறந்துகாட்டி, “பாத்தீங்களா பட்டாணி சுண்டல்தான இன்னிக்கு . வாங்க அந்த அரி நெல்லிக்காய் மரத்தாண்ட ஒக்காந்து சாப்பிடலாம்... ”என்று சற்றே நடந்து மரத்தினருகே அமர்ந்து நாங்கள் பங்கு போட்டோம். சசி எங்கள் சுண்டல்களையெல்லாம் கீழே தட்டிவிட்டு, “கம்னு இருக்க மாட்டீங்களா சனியன்களா... ” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள். அவளை மீண்டும் தாக்குவது என்று முடிவு செய்தோம்.

அதற்குள்ளாகவே மைதானத்திலும் வீட்டிலும் புதியதாக மக்கள் வெள்ளம் சூழ்ந்திருந்தது... இந்த கூட்டத்தில் சசியை எப்படி கண்டு உதைப்பது...

ந‌ன்‌றி - ந‌வீன ‌விரு‌ட்ச‌ம்
காலா‌ண்டு இத‌ழ்
ஜனவ‌ரி-மா‌ர்‌ச்சு 2004
( மே 2004‌ல் வ‌ந்து‌ள்ளது)

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments