Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அர்ஜுனா அர்ப்பணிப்புள்ள நடிகன் - பெருமிதப்படும் சாமியின் பேட்டி

அர்ஜுனா அர்ப்பணிப்புள்ள நடிகன் - பெருமிதப்படும் சாமியின் பேட்டி
, திங்கள், 19 ஜனவரி 2015 (08:50 IST)
சாமி இயக்கத்தில் கங்காரு படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பவர் அர்ஜுனா. பொறியியல் பட்டதாரியான இவர் அறிமுகம் ஆனது என்னவோ மலையாளப் படத்தில்தான். ரஞ்சித்குமார் என்ற பெயருடன் மலையாளத்தில் சிறிதும் பெரிதுமாக 15படங்களில் நடித்திருக்கிறார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் அண்ணனாக வருபவர் இவர் தான். பரவலாக பல படங்களில் நடித்திருந்தாலும் பெயர் பெறப்போவது வரவிருக்கும் கங்காரு தமிழ்ப்படம் மூலம்தான்.
 
 கங்காருவில் டைட்டில் ரோலுக்கு அர்ஜுனா தேர்வானது எப்படி என்று கேட்டபோது படத்தின் இயக்குனர் சாமி மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். 


 
அது 2006 ஆம் ஆண்டு. நான் உயிர் படம் எடுக்கும் போது படத்தின் ஒளிப்பதிவாளர் பவுசியாவின் மலையாளி நண்பர் அருண் பழக்கம். அவர் மூலம் இவர் அறிமுகமானார். நான் சரித்திரம் படம் இயக்கிய போது கலாபவன் மணியின் மகனாக நடிக்க வைத்தேன். சிறு வேடமென்றாலும் அவரிடம் திறமை மட்டுமல்ல சகிப்புத்தன்மையும் அர்ப்பணிப்பு உணர்வும் இருப்பதைக் கண்டேன்.
 
கங்காருவில் அவர் தேர்வானது எப்படி?
 
கங்காருவாக  நடிக்க வைக்கச் சரியான ஆள் பார்த்தபோது ஆறு மாதங்கள் தேடினோம்.ஆறேழு பேர் பார்த்தேன் .யாரும் திருப்தியில்லை. கடைசியில் இவரைவிட யாரும் சரியாகச் செய்யவில்லை. அப்படிதான் இவரை கங்காருவில் நடிக்க வைப்பது என்று முடிவு செய்தேன். அப்போது ஒரு தயாரிப்பாளர் வந்து தன் மகனை அந்த ரோலில் நடிக்க வைக்க பத்துலட்சம் தருவதாகக் கூறினார். நீங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் நடிகனை மாற்ற மாட்டேன் என்று கூறித் திருப்பி அனுப்பினேன். அந்த அளவுக்கு அர்ஜுனா மீது எனக்கு நம்பிக்கை வந்து இருந்தது. படப்பிடிப்புக்குப் போனபிறகு என் கருத்து சரியானதுதான் என்று நிரூபித்தார்.

அர்ஜுனாவின் டெடிகேஷனுக்கு ஏதாவது உதாரணம்...?
 
படப்பிடிப்பு பரபரப்பாக கொடைக்கானலில் நடந்து கொண்டிருந்த போது அர்ஜுனா காலில் அடிபட்டு கட்டைவிரல் நகம் உடைந்து விட்டது. வலியில் துடித்துவிட்டார். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு காலில் கட்டுப்போட்டுக் கொண்டே மரமேறும் காட்சி முதல் கயிறு கட்டி ஏறும் காட்சி வரை எல்லாம் நடித்தார். படம் முழுக்க வெறுங்காலுடன் தான் நடந்து நடிக்க வேண்டும் இந்தக் கேரக்டர் அப்படித்தான் என்று சொல்லி வைத்திருந்தேன். அதனால் கால் தெரியாத காட்சிகளில் கூட காலில் செருப்போ ஷூவோ அணிய மறுத்து விட்டார். அந்த அளவுக்கு அந்த கேரக்டரை நேசித்தார்.

webdunia

 
அவருடைய பெயர் ரஞ்சித் குமார் அல்லவா?
 
அவரது பெயரை நான்தான் அர்ஜுனா என்று மாற்றினேன்.
 
படத்தில் நடிகர் செருப்பு போடுவதும் போடாமலிருப்பதும் அவ்வளவு முக்கியமானதா?
 
ஆதி மிருகம் படத்தில் நடிக்கும்போது காலில் எதுவுமே போடவில்லை. அதே ஆதி ஈரம் படத்தில் ஷூ போட்டார். இப்போதெல்லாம் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. அந்தக் காலத்தில் வெட்டியான் கேரக்டர் வந்தால் கூட . ஜீன்ஸ், ஷூ எல்லாம் போட்டிருப்பார்கள்.
 
கொடைக்கானலில் கடுங்குளிர் நேரம் அர்ஜுனாவை குளிக்க வைத்ததாக கேள்விப்பட்டோம்..?
 
கொடைக்கானலில் அப்போது கடுங் குளிர். பாதி நேரம் பனி மூட்டத்தால் கண்ணு கூட தெரியாது. படப்பிப்பு நடந்த இருபது நாட்களில் நாங்கள் எத்தனையோ முறை குளிர் போக்க தீ மூட்டி அமர்ந்திருக்கிறோம். ஆனால் ஒருமுறை கூட அர்ஜுனா குளிர் காய வந்ததில்லை. அப்படி குளிர் காய வந்தால் அடுத்த சீனில் நடிக்கும்போது நடுங்கும் என்பதால் அவர் அந்த குளிருக்கு தன்னை பழக்கப்படுத்தினார். 
 
 அர்ஜுனாவின் தமிழில் மலையாளம் கலந்திருக்குமே?
 
எனக்கு கேரக்டர்தான் முக்கியம். அர்ஜுனா அந்த அளவுக்கு அர்ப்பணிப்புள்ள நடிகன். மொழி கொஞ்சம் பிரச்சினையாகதான் இருக்கிறது. மலையாள வாசனை இருப்பதால் டப்பிங் குரல் பயன்படுத்தி இருக்கிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil