Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் படம் மொக்க படமாக இருக்காது - இயக்குநர் கேபிள் சங்கர்

என் படம் மொக்க படமாக இருக்காது -  இயக்குநர் கேபிள் சங்கர்
, புதன், 21 ஜனவரி 2015 (09:28 IST)
பிரபல பதிவராக அறியப்பட்ட கேபிள் சங்கர் தொட்டால் தொடரும் படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். அவரது வலைப்பூ பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் பிரபலமானவை. கறாரானவை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகத்திலானவை.அதே பாணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.
 

 
வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா இயக்குநராகி விடலாமா? அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்து விடமுடியுமா?
 
நான் சினிமா பற்றி பரவலாக ஒவ்வொரு தளத்திலும் ஆர்வப்பட்டு ஈடுபட்டு தெரிந்து கொண்டுதான் படம் இயக்க வந்திருக்கிறேன். விமர்சகனாக வெற்றிபெற்று அந்த அடையாளம் பெற்று விட்டதால் இப்படிக் கேள்வி வருகிறது.
 
விமர்சகர்கள் எல்லாம் படமெடுக்க முடியுமா? சுப்புடுகள் விமர்சிக்கலாம்.கச்சேரி செய்ய முடியுமா?
 
நிச்சயம் இது நியாயமான கேள்விதான்.நிச்சயமாக விமர்சனம் மட்டும் செய்பவர்கள் படமெடுக்க முடியாதுதான்.  ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எல்லா விமர்சகர்களும் அந்த தகுதியை வைத்துக் கொண்டு படமெடுக்க முடியாது. ஆனால் விமர்சகர்கள் இயக்குநர்களாகியும் இருக்கிறார்கள். பிரான்சில் புரட்சிகரமான படங்கள் இயக்கியவர்கள் பலர் முன்பு விமர்சகர்களாக இருந்தவர்கள்தான்.
 
சினிமா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
 
நான் விமர்சகன் என்கிற அழுத்தமான அடையாளம் பெற்றிருப்பதால் இந்தக் கருத்து எழுகிறது. இதில் எனக்கு மகிழ்ச்சிதான். நான் வெறும் விமர்சகனல்ல. நான் முன்பே சொன்ன மாதிரி பல துறைகளில் ஈடுபட்டு அனுபவ அறிவைப் பெற்றிருக்கிறேன். தியேட்டர் நடத்தியிருக்கிறேன். விநியோகம் செய்துள்ளேன். பல கதை விவாதங்களில் ஈடுபட்டு இருக்கிறேன்.

வசன உதவி, திரைக்கதை உதவி என்று பணியற்றிய அனுபவம் உண்டு. உதவி இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி என்று பலதரப்பட்ட பணிகளை செய்துள்ளேன். ஏன் போஸ்டர் கூட ஒட்டியுள்ளேன். சிறுகதைகள். குறுநாவல், குறும்படம். பாடல், பாடகர் இப்படி பலவித அனுபவங்கள் உண்டு. என்னை வெறும் விமர்சகனாகப் பார்க்க வேண்டாம்.
 
பல படங்ளை இரக்கமின்றி விமர்சனம் செய்த உங்கள் படத்தை அப்படி விமர்சனம் செய்தால் என்ன செய்வீர்கள்?
 
நான் படத்தைத்தான் விமர்சனம் செய்துள்ளேன். தனிப்பட்ட யாரையும் நான் விமர்சனம் செய்ததில்லை. இதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
webdunia
உங்களால் விமர்சிக்கப்பட்டவர்கள் எதிர் விமர்சனம் செய்தால் அதை எப்படி எதிர் கொள்வீர்கள்?
 
யாருக்கும் விமர்சனம் செய்ய உரிமை உண்டு. என் படம் பற்றிய விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்னால் விமர்சிக்கப்பட்டவங்கள் பலரும் என் நண்பர்களாகி இருப்பவர்கள்.
நான் விமர்சித்த இயக்குநரின் அடுத்த படத்தில் நானே பணியாற்றியுள்ளேன். விமர்சனத்தை  ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு.
 
இப்போது எந்த நம்பிக்கையில் இருக்கிறீர்கள்?
 
என் படத்தின் விளம்பரம் வந்த போதும், போஸ்டர்வந்த போதும், ஒற்றைப்பாடல் வந்த போதும் யாரும் விமர்சிக்கவில்லை. பலரும் பாராட்டினார்கள். படத்தின் மீதும் அந்த நம்பிக்கையில்தான் இருக்கிறேன்.
 
படத்தின் கதை என்ன?
 
தேவையில்லாத ஒரு விஷயத்தில் கதாநாயகி தெரிந்தே சிக்கிக் கொள்கிறாள். அதிலிருந்து கதாநாயகன் எப்படித் தப்பிக்க உதவுகிறான் என்பதே கதை. இது உண்மைச் சம்பவத்தின் தழுவல்.
 
உங்கள் படத்தின் கதையைப் போல நீங்களும் தெரிந்தே பட்டுக்கோட்டை
பிரபாகரின் தொட்டால் தொடரும் தலைப்பை எடுத்து சர்ச்சையில் சிக்கிக்
கொண்டுள்ளீர்களே?
 
நாவல் வேறு மீடியம். சினிமா வேறுமீடியம். எத்தனையோ பாடல் தலைப்புகள் நாவல்களாக வந்துள்ளன. அப்போது யாரும் பேசவில்லை. சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதையின் தலைப்பு படமாக வந்தது. அதே கதையை படமாக எடுத்தபோது ஆனந்த தாண்டவம் என்றுதான் பெயர் வைத்தார்கள். தொட்டால் தொடரும் படத்தைப் பொறுத்தவரை அதுபற்றி படமெடுக்கும் முன்பே அவரிடம் சொன்னேன். முடித்த பிறகும் சொன்னேன். தயாரிப்பாளர் படத்தின் கதையைக் கேட்டார். 3 தலைப்புகள் சொன்னேன். இதையே பொருத்தமாக இருப்பதாக கூறி பதிவு செய்து விட்டார்.
 
உங்கள் படம் மொக்க படமாக இருக்காது என்று என்ன நிச்சயம்?
 
என் படத்தை சில வகைகளில் வித்தியாசம் உள்ள படம் என்று கூறலாம். நிச்சயம் மொக்க படமாக இருக்காது.
 
எல்லாப் படங்கள் பற்றிப் பேசும் போது வித்தியாசம்  என்றுதானே கூறுகிறார்கள்?
 
என்படத்தைப் பற்றி  நானே பெரிதாகக் கூற விரும்பவில்லை.ஆனால் நல்ல எண்டர்டெய்னராக இருக்கும். போரடிக்காது. நான் பலரிடம் பல்வேறு வகையினர் பலதரப்பு   நண்பர்களிடம் படத்தைப் போட்டுக் காட்டினேன். யாரும் குறை சொல்ல வில்லை.. என்னைப் பற்றிய எதிர்பார்ப்பு இல்லாமல் உட்கார்ந்தால் படம் பிடிக்கும். என் மேல் மட்டும்
நம்பிக்கை வைத்து வருமளவுக்கு நான் பெரிய ஆளில்லை. படம் பார்த்து பி.வாசு, எம்.என்.ராஜம் போன்றோர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல படம் பார்த்தோம் என்றார்கள்.அது எனக்கு திருப்தியாக உள்ளது.
 
இது எந்த வகைப்படம்?
 
லவ் வித்  த்ரில்லர். ஆக்ஷனும் இருக்கும். நிச்சயமாக க்ளைமாக்ஸ் புதுமாதிரி இருக்கும்.எதிர்பாராதபடி இருக்கும். வழக்கமானதாக கண்டிப்பாக இருக்காது. திடுக்கிடும் திருப்பமாக க்ளைமாக்ஸ் இருக்கும்.
 
படம் இயக்கும் போது விமர்சகராக இருந்தீர்களா? வியாபாரியாக இருந்தீர்களா?
 
சினிமா என்பது  வருமானத்தில்  நிச்சயமற்ற தொழில்தான். சினிமா பணம் போட்டு பணம் எடுக்கும் வியாபாரம்தான். தயாரிப்பாளர் இல்லை என்றால் இயக்குநர் இல்லை. இதில் நான் விமர்சகராகவும் இல்லை.வியாபாரியாகவும் இல்லை.எனக்குள் இருக்கும் படைப்பாளி சொன்னபடிதான் எடுத்தேன்.

Share this Story:

Follow Webdunia tamil