Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிக்கலைன்னா கூட பரவாயில்லை, தப்பான படம் பண்ணி வீட்ல உக்காரக்கூடாது - ஷாம் பேட்டி

நடிக்கலைன்னா கூட பரவாயில்லை, தப்பான படம் பண்ணி வீட்ல உக்காரக்கூடாது - ஷாம் பேட்டி
, வியாழன், 18 ஜூன் 2015 (08:53 IST)
அண்மையில் வந்த புறம்போக்கு ஷாம் நடித்த 25 -வது படம். அவர் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்துகொண்டிருந்த ஷாம், 6 படத்துக்குப் பின் ஆளே​ ​மாறினார். பாம்பு சட்டை உரிப்பதைப் போல தனக்குள் இருந்த அர்ப்பணிப்புள்ள நடிகனை உரித்துக் காட்டினார்.

அவரது 25 -வது படமாக வந்த புறம்போக்கு படத்தில் அழுத்தமான மெக்காலே பாத்திரம் மூலம் விஸ்வரூபம் எடுத்து பலபடிகள் மேலேறி கம்பீரமாக நிற்கிறார். அவரைச் சந்தித்த போது பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.
புறம்போக்கு உங்கள் திறமையை புடம்போட்டு காட்டியது. அடுத்து என்ன?
 
ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில், ஒரு மெல்லிய கோடு​.​ ​ ​இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எனக்கு மனிஷா கொய்ராலா, ஸ்ருதி ஹரிஹரன் என்று இரண்டு கதாநாயகிகள். ஜோடியாக நடிக்கிறார்கள்.​ ​அர்ஜுன் ​ சாருடன் நடிக்கிறேன்.

இந்தப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிப்படமாக உருவாகி வருகிறது. சென்னை பெங்களூர் என்று மாறிமாறி படப்பிடிப்பு நடந்து வருகிறது. என் கேரக்டர் கொஞ்சம் நெகடிவ் நிழல் விழுகிற மாதிரி இருக்கும்​.​ பாடல் காட்சிக்கு துருக்கி செல்ல இருக்கிறோம். இது ஒரு க்ரைம் கதை.
 
தெலுங்கில் நடிக்கிறீர்களா?
 
தெலுங்கில் இதுவரை 5 படங்கள் முடித்து விட்டேன். அடுத்து கிக், ரேஸ்குர்ரம் படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டியின் படம் செப்டம்பரில் தொடங்குகிறது.

சொந்தப்பட அனுபவம் சொல்வது என்ன? மீண்டும் தயாரிப்பில் ஈடுபடுவீர்களா?
 
சொந்தப்படமான 6 எனக்கு லாபம் தரவில்லைதான். ஆனால் இழப்பையும் தரவில்லை. எனக்கு பெரிய மரியாதையையும் அடையாளத்தையும் பெற்றுத் தந்தது. ஷாம் விளையாட்டுப் பையனில்லை​.​ அர்ப்பணிப்பும் தேடலும் ஈடுபாடும் கொண்ட நடிகன் என்கிற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. ​​அதுவரை

மக்களும் ரசிகர்களும் என்னைப் பார்த்த பார்வை வேறு, 6 படத்துக்குப் பிறகு பார்க்கிற பார்வை வேறு. மரியாதையும் கவனமும் கூடி இருக்கிறது. இப்படி நிறைய லாபம் கிடைத்து இருக்கிறது. மீண்டும் படம் தயாரிப்பேன்​.​ ​​அந்தப் படம்​ ​​இதுவரை நடித்த 25 படங்களிலிருந்து​  முற்றிலும் புதுமையான இளமையான அவதாரம் என்று சொல்லும்படி ​இருக்கும்.  
webdunia
25 படங்கள் தரும் அனுபவங்கள் உணர வைப்பது என்ன?
 
பெருமையாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. திருப்தியாக இருக்கிறது. ஆனால் இதை நினைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்து விடமுடியாது. ஓடவேண்டும்; உழைக்க வேண்டும்; உயர வேண்டும். நான் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய போட்டி நிறைந்த சினிமா சூழலில் இவ்வளவு நாள் தாக்குப் பிடித்து நிற்பது பெரிய விஷயம்தான். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவன் நான். என்னை குருநாதர் ஜீவா அறிமுக​ப்படுத்தினார்.

ஊக்கம் தந்து வளர்த்தார். அவரும் திடீரென காலமாகிவிட்டார். ​​கை தூக்கி விட யாருமில்லை. ​கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க. ​நானாகத்தான் சரியா த​​ப்பான்னு முடிவு பண்ணி நடிக்கிறேன். சிலர் கதை நல்லா சொல்றாங்க. ஆனா எடுக்கும்போது சொதப்புறாங்க. இப்போதான் கரணம் அடிச்சு எழுந்திருக்கப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் கீழே விழுற தப்பை பண்ணிக்கிட்டே இருக்கமுடியுமா? யாருமே படம் பண்ண வராதபோது என் சொந்தக் காசைப் போட்டு லேசா நிமிர்ந்திருக்கேன் பாஸ். உசாரா இருக்கலைன்னா நீங்க பேட்டி கூட எடுக்கமாட்டீங்க. அப்புறம் எப்படி நடிக்க? 
 
சினிமாவில் இதுவரை கற்றுக் கொண்டதில் முக்கியமானது என்ன?
 
நடிக்கலைன்னா கூட பரவாயில்லை. தப்பான படம் பண்ணி வீட்ல உக்காரக்கூடாது. அதுதான் மகாக்  கொடுமை. இடையில் அந்தக் கொடுமையை ரொம்பவே அனுபவிச்சிட்டேன்​.​ இருந்தாலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். பள்ளம் மேடுகள் ஏற்றம் இறக்கங்கள் இருந்தாலும் என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறதே​.​ அதுவே மகிழ்ச்சி தானே. 

Share this Story:

Follow Webdunia tamil