Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனிமனித கொள்கை வேறு, சினிமா வேறு - கமல் பேட்டி

தனிமனித கொள்கை வேறு, சினிமா வேறு - கமல் பேட்டி
, வியாழன், 2 ஜூலை 2015 (09:50 IST)
பாபநாசம் படம் நாளை வெளியாவதை முன்னிட்டு தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை கமல் சந்தித்தார். அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஒரு ரீமேக் படத்தில் நடிக்க என்ன காரணம்?
 
நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம். மலையாளத்தில் மோகன்லால் நடித்த இந்தப் படம் ஒரு சிறந்த படம். அதனை தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் செய்து அங்கும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை நம் மக்களுக்கும் காட்ட வேண்டும் என்ற உந்துதலில் ரீமேக் செய்து நடித்தேன். சில நல்ல கதைகள் தானாக வரும். அப்படி வந்த படம்தான் இது.
 
கௌதமி இதில் நாயகியாக நடிக்க யார் காரணம்?
 
இயக்குனர் ஜீத்து ஜோசப்தான் காரணம். அவர்தான் என்னிடம் கௌதமியை நடிக்க வைக்கலாம் என்றார். எனக்கு தயக்கமாக இருந்தது. தயாரிப்பாளரும் கௌதமி நடிப்பதை விரும்பினார். எழுத்தாளர் ஜெயமோகனும் கௌதமி பொருத்தமாக இருப்பார் என்றார். படத்தை பார்த்த பிறகு எல்லோருடைய முடிவும் சரியாக இருந்தது. அந்தளவு சிறப்பாக நடித்திருக்கிறார்.
 
நாத்திகரான நீங்கள் தசாவதாரத்தில் விபூதி பூசி நடித்தது ஏன்?
 
தனிமனித கொள்கை வேறு, சினிமா வேறு. என்னுடைய சினிமாவில் சில விஷயங்கள் மேலோட்டமாக இழையோடும், ஆனால் திணிப்பு இருக்காது. 
 
பாபநாசம் படப்பிடிப்பின் போது வானமலை ஜீயர் சுவாமிகளை சந்தித்தீர்களே?
 
பாபநாசம் படப்பிடிப்பு நடத்த இடம் தந்து உதவினார். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக சந்தித்தேன். மனிதம் முக்கியம். மதம் இல்லாமல் போனாலும் மனிதம் இல்லாமல் போகாது. எல்லா ஆள்களையும் மனிதராக பார்க்கிறேன். அவர் ஜீயரா அய்யரா என்றெல்லாம் பார்ப்பதில்லை.
 
பாலியல் குற்றத்தை மையப்படுத்தியது பாபநாசம். இப்போது பாலியல் குற்றங்கள் மலிந்துள்ளதே?
 
ஒரு பெண் நகைகளுடன் நள்ளிரவில் தனியாக செல்லும் போதுதான் முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம். இப்போது அந்த நிலை இல்லை. பஸ்சுக்குள்ளேயே கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. ஒவ்வொருவரும் தானாக திருந்தினால் தான் இக்குற்றங்கள் குறையும். 

பாலியல் குற்றங்களை தடுக்க கடும் தண்டனை சரியா?
 
கடும் தண்டனை என்பது மரண தண்டனை. நான் மரண தண்டனையை ஆதரிப்பது இல்லை. மனுநீதி சோழன் தன் மகனை தேர்காலில் இட்டதையும் நீதியாக கருதமாட்டேன். ஆயுள் தண்டனையிலும் எனக்கு மறுப்பு உண்டு.
webdunia
கட்டாய ஹெல்மெட் சர்ச்சையாகியிருக்கிறதே?
 
ஹெல்மெட் அணிவது உயிரை பாதுகாக்க கூடியது. சினிமா நடிகர்கள் அணிய வில்லையே என்று வாதம் செய்யக்கூடாது. படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு நிறைய ஆட்களை வைத்துக்கொண்டு தான் அவர்கள் நடிக்கிறார்கள். மஞ்சள் கோட்டை தாண்டக்கூடாது என்று போக்குவரத்து விதி இருக்கிறது. அந்த விதியை பின்பற்றி மஞ்சள் கோட்டை தாண்டாமல் இருப்பதை ஒவ்வொருவரும் தங்களின் கடமையாக நினைக்க வேண்டும்.
 
இந்த வயதிலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்களே, எப்படி?
 
என் பெற்றோர் சொல்லி தந்த உணவை சாப்பிடுவது இல்லை. சிறுவயதிலேயே அசைவத்துக்கு மாறி விட்டேன். கெட்ட பழக்கங்களை விட்டு விட்டேன். பாக்கு போடும் பழக்கம் இருந்தது. அதை விட்டு விட்டேன். சிகரெட் பிடிப்பதையும் நிறுத்தி விட்டேன். 
 
யாருடன் நடிக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது?
 
நடிகர் ரங்காராவுடன் கடைசி வரை நடிக்க முடியவில்லை. அந்த ஆதங்கம் எனக்குள் உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil