Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலியான மூளையுடன் இயக்குநரின் கையில் களிமண்ணாக இருக்க நான் தயார் - நடிகர் ஹரீஷ்

காலியான மூளையுடன் இயக்குநரின் கையில் களிமண்ணாக இருக்க நான் தயார் - நடிகர் ஹரீஷ்
, செவ்வாய், 10 மார்ச் 2015 (08:50 IST)
எடிட்டிங் டேபிளில்தான் ஒரு படத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது என்பார் சத்யஜித்ரே.அந்த வகையில் படத்தொகுப்பு அறைதான் ஒரு திரைப்படம் உருவாகும் கருவறை எனலாம். 
 
இப்படி படங்கள் உருவெடுக்கும் எடிட்டிங் ரூமே ஆசானாக,குருவாக மாறி பயிற்சி தந்து ஒரு நடிகரை உருவாக்கியிருக்கிறது என்றால் அது வித்தியாசமான ஒன்றுதானே..? அப்படி உருவாகியுள்ள நடிகர்தான் ஹரீஷ். 
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ஆஸ்தான படத்தொகுப்பாளர்கள் எடிட்டர் 'கணேஷ் குமார் 'இரட்டையர்.சுமார் 300 படங்கள் இவர்களது எடிட்டிங் மேஜையில் உருவெடுத்துள்ளன.
 
இவர்களில் ஒருவரான குமாரின் மகன்தான் இந்த நடிகர் ஹரீஷ். பத்து படங்களில் நடித்துவிட்ட போதிலும் இன்னமும் புகழ் மறைவுப் பிரதேசத்திலேயே இருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியபோது...
 
எடிட்டர் மகன்  எடிட்டர் ஆகாமல் நடிகரா? ஏனிந்த  மாற்றம்?  
 
எனக்கு சிறுவயதிலிருந்தே சினிமா மீதுதான் ஆர்வம். அதிலும் நடிப்பில் ஈடுபாடு உண்டு. அப்பாவும் என்னை ஒரு நடிகனாக்கவே விரும்பினார். அப்பா எடிட் செய்யும் போது நானும் கூடவே இருப்பேன். ஒரு உதவியாளனாக அருகில் இருந்து எல்லாவற்றையும் கவனிப்பேன். அப்படி எடிட்டிங் ரூம் எனக்கு  பயிற்சி அறையானது.
 
எடிட்டிங் ரூம் உங்களுக்கு எப்படி பயிற்சி அறையானது?
 
படப்பிடிப்பில் எடுத்து வரும் பிலிம் ரோல்களில், ரீல்களில் சரியான ஷாட்களையும் சரியில்லாத ஷாட்களையும் எடிட்டிங் ரூமில்தான் பிரித்து எடுப்பார்கள்.
 
ஏன் அந்த ஷாட் ஓகே ஆனது ஏன் அது ஓகே ஆகவில்லை என்பதற்கு காரணம் சொல்வார்கள். நிராகரிக்கப்படும் ஷாட்களிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். எதனால் அவை ஒதுக்கப் படுகின்றன என்று தெரியும், காரணம் புரியும். ஓகே ஆனவை எதனால் எடுக்கப்படுகின்றன என்றெல்லாம் நிறை குறைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது.. 'சஹானா' டிவி தொடர் சிந்துபைரவி பாகம்- 2 என்று வந்தது. அதன் டைட்டில் பாடலை அப்பாவுடன் நானும் கூட இருந்துதான் எடிட் செய்தோம்.
 
நடிகனாக அங்கு கற்றவை என்னென்ன ?
 
நடிப்பை மட்டுமல்ல ஒரு பிரேமில் நடிகர்கள் பொருந்துவது, ஒளி அமைப்பு எப்படி , பின்னணி எப்படி இருக்கவேண்டும் என்பவை கூட புரியும்.இப்படிப்பட்ட குறைகள் இருந்தாலும் ஓகே ஆகாது. இவை எல்லாம் ஒரு நடிகருக்கு பெரிய பாடங்கள்.ஒரு நடிகரின் உடல்மொழி எப்படி இருக்கவேண்டும். குளோஸ் அப் ஷாட் எப்படி இருக்கவேண்டும்.  லாங்.ஷாட்,மிடில்.ஷாட்  எல்லாம் எப்படி இருக்கவேண்டும். ப்ரேமில் எப்படி வர வேண்டும். எப்படி தோன்ற வேண்டும் என எல்லாம் தெரிந்தது.
webdunia
அந்தப் படத்தில் நடித்த நடிகருக்குக்கூட தனது குறையுள்ள ஷாட்களை பார்க்க வாய்ப்பில்லை. எனக்கு அப்படி பல படங்கள் பல நடிகர்கள் நடித்த படங்களில்  குறையுள்ள ஷாட்களை பார்க்க வாய்ப்புகள் கிடைத்தன.கமலின் தீவிர ரசிகன் நான். அவர் நடிப்பைப் பார்த்து வியப்பவன். படங்களில் கமல்சார் முதல் பலரிடம் இப்படி பாடம் படித்தேன். எப்படி நடிப்பை படிப்படியாக மேம்படுத்தி நடிக்கிறார்கள். என்பதைக்  கற்றுக் கொள்ள முடிந்தது. இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.  இப்படி விஜயா, ஏவிஎம்., பிரசாத் போன்ற எடிட்டிங் ரூம்களே என் குருகுலம் போல இருந்தன.படப்பிடிப்பில் அருகிலிருந்தால் கூட இதைக் கற்றுக் கொள்வது சிரமம். ஆகவே எடிட்டிங் டேபிளே என் பிலிம் இன்ஸ்டிடியூட்டாக இருந்தது.
 
நடிகருக்கென்று வேறு என்னென்ன  தகுதிகளை வளர்த்துக் கொண்டீர்கள்?
 
சினிமாதான் நம் வாழ்க்கை என்று முடிவானதும் அதற்கு என்னவெல்லாம் தேவையோ எல்லாவற்றையும் கற்றேன். கலா மாஸ்டரிடம் 8 ஆண்டுகள் சினிமா நடனம் கற்றேன். கேரளா சென்று களரி பயிற்சி 5 ஆண்டுகள் பெற்றேன். ஸ்வராலயாவில் இரண்டரை  ஆண்டுகள்  கிளாசிக்கல் டான்ஸ் கற்றேன். இப்படி என்னை தகுதியுடையவனாக்கிக் கொண்டேன். 
 
சினிமாவில் முதல் பிரவேசம் எப்போது.?
 
கஸ்தூரி ராஜாதான் என்னை அறிமுகப்படுத்தினார். 'இது காதல் வரும் பருவம்' என்பதுதான் என் முதல்  படம். அதற்குமுன் நான் சிறுவனாக இருந்தபோதே என்னைக் கூப்பிட்டு வசந்த் சார் 'கேளடி கண்மணி' பாடல் காட்சியில் ஆடவிட்டார். குட்டிப்பையனாக வருவேன். சினிமாவில் முதல் தோற்றம் என்றால்  அதுதான். வளர்ந்ததும் கஸ்தூரிராஜாதான் என்னை அறிமுகப்படுத்தினார்.
 
நான் நடித்த 2வது  படம் 'புகைப்படம்'.  அடுத்து 3 வது படமாக 'மாத்தியோசி' நந்தா பெரியசாமி இயக்கிய படம். இப்படத்தின் டபுள் பாசிட்டிவ் பார்த்துவிட்டு வந்த வாய்ப்புதான் 'கோரிப்பாளையம்' .
 அண்ணன் ராசு மதுரவன் இயக்கியிருந்தார். அவரே அடுத்த படமான 'முத்துக்கு முத்தாக' வாய்ப்பும் கொடுத்தார். பிறகு வந்த படம் 'நேற்று இன்று'.
 
அடுத்ததாக விக்ரமன் சார் இயக்கிய 'நினைத்தது யாரோ' படத்தில் நடிகர் ஹரீஷாகவே வருவேன். சின்ன வேடம்தான். 'காதல் 2014' எனது எட்டாவது படம். சேரன் உதவியாளர் சுகந்தன் இயக்கியபடம். டெல்லி ரேப்பை மையப்படுத்திய கதை. 
 
இப்போது நடிப்பவை?
 
'வெத்துவேட்டு' என் 9வது படம். இதில் நான் தனி நாயகனாக நடித்திருக்கிறேன். மணிபாரதி இயக்கியுள்ளார்.  என் பத்தாவது படம் 'இறையான்'. பத்ரகாளியம்மன் பிலிம் பேக்டரி சார்பில் தமிழ்க்கம்பன் தயாரிக்கிறார். இவர்  இலங்கைத் தமிழர் .இயக்குபவர் சரவணன் பெரியசாமி. அடுத்து யாசின் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்கிறேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டது.இப்போது தான் எனக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது.  நடந்தவை போகட்டும். இனி எல்லாம் நலமே நடக்கும்.

மனைவி வரும் நேரம் எப்படி உள்ளது? 
 
நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. மனைவி வரும் நேரம்  நம்பிக்கை கூடி வருகிறது. அவர் பெயர் அபிநயா, அவர் ஒரு டாக்டர். என் நண்பனின் வீட்டு நிகழ்ச்சியில் சந்தித்தோம். புரிந்து கொண்டோம். 
அபிநயா குடும்பமே டாக்டர் குடும்பம். சினிமாக்காரனா என முதலில் தயங்கினார்கள். பின்னர் புரிந்து கொண்டு சம்மதம் சொன்னார்கள்.ஜூன் 4ல் திருமணம் என்று  நிச்சயமாகியுள்ளது.
webdunia
பத்து படங்களுக்குப் பிறகும் உங்களை வெளியில் தெரியவில்லையே ஏன்?
 
இத்தனை படத்தில் நடித்தும் என் பெயரை கூகுளில் போட்டால் என் படம் வருவதில்லை. பத்து படங்களும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம்தான்.தோல்விகள் இழப்புகளில் நான் பின்வாங்குவது இல்லை. எல்லாவற்றையும் ஒரு பாடமாகவே எடுத்துக் கொள்கிறேன். 'முயற்சிகள்  தவறினாலும் முயற்சிக்கத் தவறக்கூடாது. முயற்சி விதைகளை விதைப்போம். ஒரு நாளில்முளைத்து மரமாகும்.' இது என் நம்பிக்கை .          
                                        
இத்தனை படங்கள் தோல்விகள் வெளிச்சமில்லாதது குறித்து வருத்தம் உண்டா?
 
அவற்றை எல்லாம் சினிமா கற்க சில தோல்விகள், கேள்விகள் தேவைப்பட்டன என்று பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்கிறேன். முயற்சி செய்ய உழைப்பு வழங்க நான் தயார். காலியான மூளையுடன் படப்பிடிப்பு சென்று இயக்குநரின் கையில் புழங்கும் களிமண்ணாக இருக்க நான் தயாராக இருக்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil