Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிளகு திருட வந்தவர்கள்தான் போர்ச்சுகீசியர்கள் - சந்தோஷ் சிவன்

மிளகு திருட வந்தவர்கள்தான் போர்ச்சுகீசியர்கள் - சந்தோஷ் சிவன்
, வியாழன், 17 மே 2012 (21:14 IST)
சந்தோஷ் சிவனின் உருமி இம்மாதம் வெளியாகிறது. 15ஆ‌ம் நூற்றாண்டு கதையான இப்படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை.

FILE
1. உங்களைப் பற்றி?

என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதை நான் தன்னடக்கமாகவும் பேசவில்லை,கர்வமாகவும் நினைக்கவில்லை. திருவனந்தபுரத்தில் பிறந்தேன். சினிமா மீது கொண்ட ஆசையில்கேமராமேனாகினேன். ஏறக்குறைய எல்லா மொழி சினிமாவிலும் பணியாற்றி விட்டேன்.

2. இயக்குனர் மணிரத்னம் படங்களில் மட்டும் பணியாற்றுவீர்களாமே?

இந்த குற்றச்சாட்டை பல பேர் என்னிடமே நேரடியாகவே கேட்டுவிட்டார்கள். அப்படி நான் மணிரத்னம் படங்களுக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றால், எப்படி நான் மற்ற மொழிகளுக்குள் சென்றிருக்க முடியும்? ‘ரோஜா’ படம் பண்ணுவதற்கு முன்பே மணிரத்னத்தை எனக்கு நன்றாக தெரியும். அப்போது நான் மலையாளத்தில் சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தேன். ‘ரோஜா’ கதை விவாதம் முடிந்தவுடன் ஷள்ட்டிங்குக்கு புறப்பட்டோம். மணி எனக்கு அந்தப் படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். “சின்ன சின்ன ஆசை...” பாடல் காட்சி எல்லாம் என்னையே எடுக்க சொன்னார். ‘ரோஜா’பெரியளவில் பேசப்பட்டது. அடுத்தடுத்து ‘தளபதி’, ‘இருவர்’, ‘உயிரே’, ‘ராவணன்’.... என்று எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘துப்பாக்கி’ படத்திற்கு நான்தான் ஒளிப்பதிவாளர். அதற்கு ஏ.ஆர். முருகதாஸ்தான் இயக்குனர். மற்ற இயக்குனர்களுடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

3. ‘உருமி’யை பற்றி சொல்லுங்கள்?

வரலாற்று சம்பவங்களை ஆராய்வதிலும், அதைப் பற்றி தெரிந்து கொள்வதிலும் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. நான் ‘கோவா’ போன்ற நகரங்களுக்கு லொக்கேஷன் பார்க்க செல்லும் போது, அங்குள்ள பழமையான கட்டிடங்களையும், சில பழமையான விஷயங்களையும் கண்டு ஆச்சரியப்படுவேன்.
webdunia
FILE

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரமும், நாகரீகமும் தலைகீழாக இப்போது மாறிவிட்டன. ஆனால் அந்த வரலாற்று சம்பவங்கள் பல செய்திகளை நமக்கு கட்டிடங்கள், கல்வெட்டுக்களின் வழியே சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ‘வாஸ்கோடகாமா’ இந்தியாவிற்குள் வந்த போதும்,அதற்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்லும் கதையை தேடியபோதும் கிடைத்ததுதான் ‘உருமி’.

4. ‘வாஸ்கோடகாமா’வின் வருகையை எப்படி படமாக சொல்ல முடியும்?

உண்மைதான். வாஸ்கோடகாமாவின் வருகையை ஒரு இரண்டு மணி நேர படத்திற்குள் அடக்கிவிட முடியாது. அதே சமயம் ‘வாஸ்கோடகாமா’வை கொல்ல நினைக்கும் ஒரு இந்திய சிறுவனின் கதை என்று ஒற்றை வரியிலும் சொல்லிவிட முடியாது.

அரபு நாடுகளில் எண்ணெயை அபகரிக்க, அங்கு எப்படி உள்ளே நுழைந்தார்களோ, அதேபோல் இந்தியாவில் மிளகு திருட வந்தவர்கள்தான் போர்ச்சுகீசியர்கள். அவர்களுக்கு மிளகு தேவைப்பட்டபோது,அது அபரிமிதமாக இந்தியாவில் இருப்பதை கண்டு உள்ளே நுழைந்தார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்திய வார்த்தை, வியாபாரம் செய்ய வந்திருக்கிறோம் என்பதுதான். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சேதுராயன் என்ற மன்னன்தான் போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக முதல் முதலாக குரல் கொடுத்து எதிர்த்து நின்றான். அப்புறம் வாஸ்கோடகாமாவை எதிர்த்ததும் சேதுராயனின் வாரிசுதான். இந்த ஒரு‘நாட்’டை வைத்து கொண்டுதான் ‘உருமி’யை உருவாக்கியுள்ளோம்.

5. இதுபோன்ற வரலாற்று பின்னணி படம் எடுப்பது ரிஸ்க்கு தானே?

கேமராமேனாக பணியாற்ற படங்கள் வந்து கொண்டிருக்கும் போது, அதில் ஒர்க் பண்ணிவிட்டு நல்ல சம்பளம் வாங்கி செட்டிலாகி விடுங்கள் என்று என்னிடம் சில பேர் சொல்லியிருக்கிறார்கள். எனக்கான ஒரு அடையாளம் வேண்டும் என்பதால்தான், கொஞ்சம் ரிஸ்க்கான சப்ஜெக்ட்டுகளை படமாக எடுத்து வருகிறேன்.

6. ‘உருமி’ படத்திற்கு நல்ல அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகளை நடிக்க வைத்திருக்கலாமே?

அனுபவம் வாய்ந்தவர்கள் நடிக்கும் போது ஒரு டைரக்டருக்கான வேலைப்பளு கொஞ்சம் குறையவாய்ப்பிருக்கிறது. அதே சமயம் சில இளைய நட்சத்திரங்களை வேலை வாங்கி நடிக்க வைப்பதிலும் டைரக்டரின் கையில்தான் உள்ளது. அந்த வகையில் ‘உருமி’யில் பிரபுதேவா, பிருத்விராஜ், ஆர்யா,ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன் என்று அனைவரும் அசத்தியிருப்பார்கள். உண்மையிலேயே என்னை மிரள வைத்தவர் ஜெனிலியாதான். இரண்டே வாரத்தில் குதிரை பயிற்சி எல்லாம் கற்றுக் கொண்டு வந்தார். ‘உருமி’யில் ஒவ்வொருவரும் ஆத்மார்த்தமாக பணியாற்றியுள்ளார்கள்.

7. ‘துப்பாக்கி?’ பற்றி சொல்லுங்களேன்

அதில் நான் கேமராமேன் மட்டும்தான். அது பற்றி கேட்க வேண்டுமானால் டைரக்டரிடம் கேளுங்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil