சம்பள விஷயத்திலும் பிற நடிகைகள் போல் கறார் காட்டுவதில்லை. பட்டைய கௌப்பணும் பாண்டியா படத்தில் மனிஷாவை ஒப்பந்தம் செய்ததே சம்பளத்தை படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப குறைத்துக் கொண்டதால்தான். நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களில் நடித்தவர் முதல்முறையாக வெரைட்டியான ரொமான்டிக் காமெடியில் நடித்துள்ளார். பிரஸ்மீட்டில, பாடல்கள் வெளியீட்டு விழாவில் அந்த மகிழ்ச்சியை மனிஷாவிடம் காண முடிந்தது.
பட்டைய கௌப்பணும் பாண்டியாவில் எப்படி வாய்ப்பு கிடைத்தது? இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பது விதார்த். அவர்கூட ஜன்னல் ஓரம் படத்தில் நடிச்சேன். அவர்தான் என்னைப் பற்றி டைரக்டர் எஸ்.பி.ராஜ்குமார் சார்கிட்ட சொல்லியிருக்கார். எஸ்.பி.ராஜ்குமார் சார் கதை சொன்னதும் உடனே ஒத்துக் கிட்டேன். ரொம்ப நல்ல கதை.
இயக்குனரைப் பற்றி...? எஸ்.பி.ராஜ்குமார் சாரைப் பார்த்தால் அவருக்குள்ள இருக்கிற காமெடி சென்ஸ், நல்ல காமெடி சீன்களை உருவாக்குகிற திறமை தெரியாது. காரணம் அவர் ரொம்ப அமைதியானவர். முக்கியமாக அவருக்கு பொறுமை ரொம்ப அதிகம்.
இவ்வளவு பொறுமைசாலியான இயக்குனர்கூட இதுவரை நான் வொர்க் பண்ணுனதில்லை. எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். எனக்கு இந்த வாய்ப்பை தந்ததுக்கு முதல்ல அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
ஹீரோ விதார்த்...? விதார்த் திறமையான நடிகர். எந்த கேரக்டரையும் பண்ணக் கூடியவர்.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை தனது நடிப்பால் மெருகேற்றுகிற திறமை அவர்கிட்ட இருக்கு.நான் அவர்கிட்டயிருந்து நிறைய கத்துகிட்டேன். நல்ல ஒத்துழைப்பு தருகிற நடிகர்.
இது எந்த மாதிரியான படம்? இதுவொரு ரொமான்டிக் காமெடி படம். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர் மாதிரியான படங்களுக்குப் பிறகு இப்படியொரு ரொமான்டிக் காமெடிப் படத்தில் நடிச்சது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. படத்தில் நடிச்சது எனக்கே ப்ரெஷ்ஷா இருக்கு.
படத்தின் இசை...? மியூஸிக் அருள்தேவ். லவ்லி டச்சிங் மியூஸிக். சாங்ஸ் பென்டாஸ்டிக்கா இருக்கு. கேட்டீங்கன்னா உங்களுக்கு பிடிக்கும். இதை நான் சொல்லலை. இன்டஸ்ட்ரியில அப்படிதான் பேசிக்கிறாங்க. ரொம்ப அருமையான லொகேஷன்ல பாடல்களை படமாக்கியிருக்கோம். சாங்ஸ் படத்துக்கு பெரிய ப்ளஸ்ஸா இருக்கும்.
உடன் நடித்தவர்கள்...? சீனியர் காமெடியன்ஸ் சூரி, இளவரசு போன்றவர்களும் படத்தில் இருக்காங்க. இவங்களோட ஒரு ரொமான்டிக் காமெடிப் படம் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம்.
படம் பற்றிய உங்கள் கருத்து...? படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. படத்தைப் பற்றி நான் அதிகம் சொல்லப் போவதில்லை. இதுவொரு பைசா வசூல் மூவி. உங்க குடும்பத்தோடு என்ஜாய் பண்ணக்கூடிய படம். முழுக்க முழுக்க காமெடியில் எஸ்.பி.ராஜ்குமார் சார் கலக்கியிருக்காங்க.