Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லாளன் எல்லோரும் இணைந்து உருவாக்கிய படைப்பு - ஒளிப்பதிவாளர் சந்தோஷ்

எல்லாளன் எல்லோரும் இணைந்து உருவாக்கிய படைப்பு - ஒளிப்பதிவாளர் சந்தோஷ்
, செவ்வாய், 9 பிப்ரவரி 2010 (18:23 IST)
ஈழப் போராளிகள் 2007 ஆம் ஆண்டு நடத்திய எல்லாளன் நடவடிக்கையில் அனுராதபுரம் வான்தளம் தகர்க்கப்பட்டது. ராணுவத்தின் 27 வான்கலன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. உலகப் போராளிகள் ச‌ரித்திரத்தில் இதுவொரு தீரமிக்க நடவடிக்கையாக அமைந்தது. 21 கரும்புலிகள் தங்களது உயிரை ஈந்து எல்லாளன் நடவடிக்கையை வெற்றிபெற வைத்தனர். தமிழீழத்துக்கான ஈழப் போராளிகளின் போராட்ட வரலாற்றில் தீரத்தின், தியாகத்தின் அணையாப் பிரகாசம், எல்லாளன் நடவடிக்கை.

WD
இந்த நடவடிக்கையை போர் மிகுந்த சூழலில் திரைப்படமாக எடுத்துள்ளனர் போராளிகள். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் புலம்பெயர் மற்றும் தாய் தமிழர்களின் உள்ளங்களில் விடுதலைக்கான கனவை புதிய எழுச்சியுடன் மீட்டுக் கொண்டிருக்கிறது இத்திரைப்படம். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் ஈழத்தின் திரைப்பட உருவாக்கப் பி‌ரிவுடன் இணைந்து படத்தின் அனைத்துப் பணிகளிலும் பங்களிப்பு செலுத்தியவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ். திரைப்படத்தை கேமராவிலும், ஈழத்தின் இறுதி தினங்களை நினைவுகளிலும் ஒருசேர பதிவுசெய்து வந்திருக்கும் அவரை தமிழ் வெப்துனியாவுக்காக சந்தித்தோம்.

நீங்கள் எல்லாளன் படப்பிடிப்புக்காக ஈழம் சென்றது 2008 ஜனவ‌ரியில். போர் நடந்து கொண்டிருந்த ஆபத்து மிகுந்த காலத்தில் அங்கு செல்ல எப்படி துணிந்தீர்கள்?

எல்லாளன் படத்துக்கு முன்னாடி இலங்கையில் ஒரு ஆவணப் படத்துக்கும், ஒரு குறும் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். லண்டன் நண்பர் ஒருவருக்கு விளம்பரப் படம் இயக்கும் போது, எல்லாளன் படம் பற்றி தெ‌ரிய வந்தது. நான் பணிபு‌ரிந்த ஆவணப் படமும் ச‌ரி, குறும் படமும் ச‌ரி, சிங்கள ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த தமிழர் பகுதிகளில் எடுத்தது. தமிழீழப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு வந்தபோது அந்த ஒரு காரணத்துக்காகவே உடனே ஒப்புக் கொண்டேன்.

போர் நடந்து கொண்டிருக்கிற சூழலில் திரைப்படம் எடுக்க ஈழப் போராளிகள் விரும்பியது ஏன்?

ஈழத் தமிழர்கள் இயல்பாகவே கலையார்வம் அதிகம் உள்ளவங்க. அவங்க தலைமைக்கும் அந்த ஆர்வம் இருந்ததால் தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி எல்லா மொழி திரைப்படங்களும் மக்களுக்கு கிடைக்கக்கூடிய சூழல் அங்கிருந்தது. யுத்தம் சம்பந்தப்பட்ட படம்னு மட்டுமில்லாம வெளிநாட்டு கிளாசிக்குகளையும் தமிழில் மொழிமாற்றம் செய்து மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்திருக்காங்க. இதுக்காக மொழியாக்கப் பி‌ரிவுன்னே ஒண்ணு இயங்கி வந்திருக்கு. நம்மூ‌ரில் செய்ற மாதி‌ி கலோக்கியல் தமிழில் கொச்சைப்படுத்தாமல் அப்படியே அர்த்தம் மாறாமல் அழகிய தமிழில் மொழியாக்கம் செய்திருக்காங்க. ஆபாசக் காட்சிகள் போன்ற தேவையில்லாததை தணிக்கை செய்வதற்கென்றே தமிழீழ தணிக்கைக் குழு ஒன்றும் செயல்பட்டிருக்கு.

இதுதவிர போராளிகளே குறும் படங்களை உருவாக்கியிருக்காங்க. இயக்குனர் மகேந்திரன் சார் ஈழத்திற்குச் சென்று இப்படிதான் ஒரு படத்தை உருவாக்கணும்னு அவங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கார். அவரது பயிற்சிக்குப் பிறகு திரைப்படங்கள் மீதான போராளிகளின் பார்வையில் ஒரு மாறுதல் உருவாகியிருக்கு.

யுத்தம் நடந்துகிட்டிருக்கும் போது ஏன் படம் எடுத்தாங்கன்னு கேட்டீங்க... நமக்குதான் யுத்தம் அசாதாரணமான விஷயம். அவங்களுக்கு சராச‌ரி வாழ்க்கையில் யுத்தமும் ஒன்று.

ஓயாத அலைகள் உள்பட பல நடவடிக்கைகளை போராளிகள் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். அதில் குறிப்பாக எல்லாளன் நடவடிக்கையை திரைப்படமாக எடுக்க என்ன காரணம்?

புலிகள் ஆனையிறவை மீட்டது ஈழப் போராட்டத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. அதுக்குப் பிறகு பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினாலும், எல்லாளன் நடவடிக்கையை அவங்க முக்கியமானதாக கருதினாங்க. இதை பு‌ரிஞ்சுக்கணும்னா எல்லாளன் நடவடிக்கைக்கு தூண்டுதலா அமைஞ்ச விஷயத்தை தெ‌ரிஞ்சுக்கணும்.

எதி‌ரிகளின் வான் தாக்குதலால் தமிழர்களுக்கு பெ‌ரிய இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் 2007ல் செஞ்சோலையில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் கொடூரமானது. இதில் அறுபதுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கொல்லப்படுறாங்க. இந்த குழந்தைகள் எல்லோருமே பெற்றோர்களை பறிகொடுத்தவங்க. இந்த கொடூர நிகழ்வுக்குப் பிறகுதான் எதி‌ரியோட வான்தளத்தை தகர்க்கணும்கிற முடிவு எடுக்கப்படுது. அதன் செயல் வடிவம்தான் எல்லாளன் நடவடிக்கை.

செஞ்சோலைப் படுகொலையும் படத்தில் இடம் பெற்றுள்ளது இல்லையா?

எல்லாளன் நடவடிக்கையின் தூண்டுகோலே செஞ்சோலை படுகொலைதான். 2007 நவம்பர் மாதம் தமிழ் தேசிய தலைவ‌ரின் மாவீரர் தின உரை புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது கிஃபிர் விமான தாக்குதலில் வானொலி நிலையம் தகர்க்கப்படுது. அதன் ஊழியர்கள் கொல்லப்படுகிறார்கள். அந்த இடிபாடுகளில் செஞ்சோலை படுகொலைக் காட்சிகளை எடுத்தோம். அதில் நடித்த குழந்தைகள் எல்லோரும் செஞ்சோலை தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள். வழக்கமான சினிமா மேக்கப் துணையுடன் எடுத்த அந்தக் காட்சியில் அந்த தாக்குதலில் ஊனமுற்ற குழந்தைகளையும் பயன்படுத்தியதால் அது செஞ்சோலை தாக்குதலை அப்படியே பதிவு செய்தது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் எல்லாளன் திரைப்படத்தில் வரலாற்றை மறுஉருவாக்கம் செய்திருக்கிறோமே தவிர அது டாக்குமெண்ட்‌ரியல்ல.

படத்துக்கான உங்கள் தயா‌ரிப்பைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

2008 ஜனவ‌ரி நான் அங்கு போகிறேன். பிப்ரவ‌‌ரி 10ஆம் தேதி படப்பிடிப்பு. படப்பிடிப்புக்கு முன்னால் ஒரு விஷயத்தில் நான் உறுதியா இருந்தேன். படத்தில் போராளிகளை மட்டுமே நடிக்க வைப்பது. இதை அவங்களும் ஏத்துகிட்டாங்க. ஈழத்தில் இருந்த நிதர்சனம் மற்றும் திரைப்பட உருவாக்கப் பி‌ரிவோடு இணைஞ்சுதான் படத்துக்கான வேலைகளை செய்தேன். இந்த பி‌ரிவில் போராளிகள், பொதுமக்கள், போ‌ரில் காயமடைந்தவர்கள்னு பலதரப்பட்டவர்கள் இருந்தாங்க. முதல் வேலையா எல்லாளன் நடவடிக்கையில் ஈடுபட்ட 21 கரும்புலிகளின் புகைப்படங்களை வைத்து அவங்க நிறம், உயரம், தோற்றம் இதெல்லாம் ஒத்துவருகிற போராளிகளை நடிப்பதற்காக தேர்வு செய்தோம். அந்த 21 போராளிகளின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள்னு நிறைய பேரை சந்தித்து அவங்களைப் பற்றிய விவரங்களை சேக‌ரிச்சோம். இந்த விவரங்களையும், அவங்க டை‌ரி குறிப்பையும் வச்சுதான் படத்தில் அவர்களைப் பற்றிய பகுதிகளை உருவாக்கினோம்.

அதாவது படத்தில் கற்பனையான புனைவுகள் எதுவும் இல்லை என்கிறீர்களா?

webdunia
WD
அதுதான் உண்மை. 21 கரும்புலிகள் எடுத்துக்கிட்ட பயிற்சியும் அப்படியே படத்தில் வருது. ‘கடுமையான பயிற்சி இலகுவான சண்டை.’ இதுதான் அவங்களோட கொள்கை. நடவடிக்கைக்கு முன்பு ஆயுதப் பயிற்சி, உளவியல் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு பயிற்சி, தற்காப்புப் பயற்சின்னு நிறைய பயிற்சிகள் கொடுக்கப்படுது. அதை அப்படியே போராளிகளை வைத்து படமாக்கினோம். பயிற்சி காட்சிகளிலும் உண்மையான ஆயுதங்களைதான் பயன்படுத்தினோம். நாங்க சினிமாவில் பண்ற மாதி‌ி டம்மி யூஸ் பண்ணலாமான்னு கேட்டேன். நாங்க சினிமாக்காரங்க இல்லை, அப்புறம் டம்மிங்கிறதே எங்ககிட்ட கிடையாதுன்னு மறுத்திட்டாங்க. படத்தில் வர்ற எல்லா ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் நூறு சதவீதம் நிஜமானவை.

பயிற்சியும், போராளிகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் ச‌ரி. தாக்குதல் சம்பவத்தை எப்படி புனைவு இல்லாமல் எடுக்க முடிந்தது?

அனுராதபுரம் தாக்குதலுக்கு முன்னாடி அதிகாலை சுமார் 3.45 மணிக்கு நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்ற லெப். கேர்னல் இளங்கே தாக்குதலை எப்படி நடத்தணும்னு மற்ற 20 பேர்கிட்ட பேசுறார். இதிலிருந்து அதிகாலை 5.40 வரை அவர் தாக்குதல் நடவடிக்கையை தலைமையகத்துடன் சேட்டிலைட் போனில் சொல்லிக் கொண்டேயிருக்கிறார். தாக்குதல் அவரது பேச்சில் அப்படியே பதிவாகியிருக்கு. படத்தில் இந்த தாக்குதல் 25 நிமிஷம் வருது. இந்த 25 நிமிஷம் நீங்க கேட்கிற ஒவ்வொரு வார்த்தையும் இளங்கோ பேச்சில் அப்படியே பதிவானது. சொல்லப் போனால் மத்த காட்சிகளைவிட தாக்குதல் காட்சிதான் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருக்கு.

நடிகர்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

அந்தப் படப்பிடிப்பிலேயே தொழில்முறை சினிமாக்காரன் நான் மட்டும்தான். நடித்தவர்கள் எல்லோருமே போராளிகள். கேமரா முன்னால் நின்றதுகூட கிடையாது. இது கொஞ்சம் சிரமமாகதான் இருந்திச்சி. ஒருமுறைக்கு இரண்டுமுறை சொன்னால், என்னை விட்டுடுங்க, நான் சண்டைப் போடுறதுக்கே போயிடுறேன்னு கிளம்பிடுவாங்க. ஒரேயொரு ஹெச்டி கேமரா, ஆணிவேர் படத்துக்காக வாங்கின பழுதடைஞ்ச ட்ராக் அண்ட் ட்ராலி, கிரேன் இவ்வளவுதான் மொத்த படப்பிடிப்பு கருவிகள். கிரேனில் ஹெட் கிடையாது. திருப்பணும்னா கயிறுகட்டிதான் திருப்பணும்.

லைட்கள்...?

எதுவும் கிடையாது. டியூப் லைட், அப்புறம் கல்யாண வீட்டில் வீடியோ எடுக்க யூஸ் பண்ணும் லைட். இந்த இரண்டையும் வச்சுதான் சமாளிச்சோம்.

போர் சூழலில் நடந்த படப்பிடிப்பு என்பதால் அதுசார்ந்த நெருக்கடிகள் இருந்திருக்குமே?

webdunia
WD
பிப்ரவ‌ரி 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. ச‌ரியா 7வது நாள் அனையிறவு பழைங்கிற இடத்தில் படப்பிடிப்பு நடந்துகிட்டிருக்கும் போது ஆட்லெறி தாக்குதலில் படப்பிடிப்பில் இருந்த நாலு பேர் கொல்லப்படுறாங்க. அதில் ஒருத்தர் எல்லாளன் நடவடிக்கையை முன்னின்று நடத்திய லெப்.கேர்னல் இளங்கோவின் கதாபத்திரத்தில் நடித்த மேஜர் புகழ்மாறன். இன்னொருவர் நிதர்சனத்தின் இரண்டாம்கட்ட பொறுப்பாளர் லெப்.கேர்னல் தவா. மற்ற இரண்டு பேரும் கேமரா உதவியாளர்கள்.

இந்தியாவில் சகல சௌகpயங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளத்தில் பணிபு‌ரிந்த உங்களுக்கு இது

அதிர்ச்சியாக இருந்திருக்குமே? எப்படி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துனீர்கள்?

உளவியல் ‌ரீதியா ரொம்பவே பாதிக்கப்பட்டேன். சௌக‌ரியமான இடத்தில் இருந்துவிட்டு இந்த மாதி‌ி சூழலுக்கு அடாப்ட் ஆக முடியலை. படப்பிடிப்பு Front Defence Lineக்கு 500 மீட்டருக்கு இந்தப் பக்கம் நடந்துகிட்டிருக்கும். குண்டுகள் நம்மை தாண்டிப் போய் வெடிக்கும். தலைக்கு மேல விமானங்களும் குண்டுகளை பொழியும். பயம்னா என்னன்னு அப்போதுதான் உணர்ந்தேன். சிகரெட் பிடிக்கும் போது கைகள் ஆடிட்டிருக்கும், கால்கள் நடுங்கும். குண்டு வெடிச்சதும் ஓடிப்போய் பங்கருக்குள் ஒளிஞ்சிடுவோம். புகை அடங்கினதும் இறந்தவங்களை தூக்கிப் போட்டுட்டு படப்பிடிப்பு நடத்தலாம்னுவாங்க. யுத்தம் அவங்க வாழ்க்கையில் ஒரு பகுதியில்ல, யுத்தம்தான் வாழ்க்கையேங்கிறதை உணர்ந்துகிட்டேன்.

இந்த உளவியல் பாதிப்பிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்?

ஒருமுறை படப்பிடிப்பு தளத்துக்கு கொஞ்சம் தள்ளி Kfir விமானம் குண்டு வீசியது. போராளி நண்பர் அதை பார்த்து வரலாம்னு அழைச்சிட்டுப் போனார். அது டிலேன்னு சொல்லப்படுற பூமியை துளைத்துச் சென்று வெடிக்கும் குண்டு. பங்கர்களில் இருக்கிறவர்களை குறி வைத்து போடப்படும் குண்டு அது. நாங்கள் குண்டு போட்ட இடத்தை நெருங்கும் போது ஒரே புகைமூட்டம். மயானம் போலிருந்தது அந்த இடம். குண்டு விழுந்த இடத்தில் 20 அடி விட்டத்தில் 30 அடி ஆழத்தில் பெ‌ரிய பள்ளம். எங்கும் பிணங்கள். காயம்பட்டவர்களையும் இறந்தவர்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தையுடன் சைக்கிளில் அந்த இடத்தை பார்க்க வந்தார். மரணத்தையும், நம்பிக்கையான எதிர்காலத்தையும் அன்றைக்கு ஒருசேரப் பார்த்தேன். அதுக்குப் பிறகு ஓரளவு சகஜநிலைக்கு திரும்பினேன்னு சொல்லலாம்.

எல்லாளன் திரைப்படத்தின் சிறப்பம்சமாக எதை கருதுகிறீர்கள்?

webdunia
WD
உலக சினிமா வரலாற்றில் எந்தப் போராளிக்குழுவும் தனது சமகால போர் நடவடிக்கையை திரைப்படமா உருவாக்கியதில்லை. 100 சதவீதம் போராளிகளால் உருவாக்கப்பட்ட திரைப்படம்ங்ற பெருமையும் எல்லாளனுக்கு மட்டுமே உண்டு. போர் நடந்து கொண்டிருக்கும் போது யுத்த தளத்தில் உருவான திரைப்படம்ங்கிற சிறப்பும் இந்தப் படத்துக்கு உண்டு. அதேமாதி‌ி ஃபுல் மெட்டல் ஜாக்கெட், ‌ஜி.ஐ.ஜேபோன்ற படங்களில் ராணுவப் பயிற்சியை காட்டினாலும் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்காக ஒரு போராளிக் குழு எந்த மாதி‌ி பயிற்சி எடுத்துக்கிறாங்கன்னு சொன்ன முதல் படம் இதுதான்.

படப்பிடிப்பு முடியும்போது படத்தில் பணிபு‌ரிந்த 40 சதவீதம் பேர் உயிருடன் இல்லைங்கிறதும், படம் வெளியாகும் போது 95 சதவீதம் பேர் உயிருடன் இல்லை என்பதும் எல்லாளன் எப்படிப்பட்ட நெருக்கடியில் உருவாக்கப்பட்டதுங்கிறதை சொல்லும். இந்தப் படத்தில் என்னுடைய பங்கு ரொம்பவும் குறைவு. தமிழீழ மக்களும், ஈழத்தமிழ் போராளிகளும் இணைந்து உருவாக்கிய படைப்பு இது. முக்கியமா நிதர்சனம் மற்றும் திரைப்பட உருவாக்கப் பி‌ரிவின் பொறுப்பாளர் சேரலாதனின் பங்களிப்பு ரொம்பவே அதிகம். அவர் இல்லைன்னா இந்தப் படைப்பு முழுமை பெற்றிருக்குமாங்கிறதே சந்தேகம்தான். எல்லோரும் இணைந்து உருவாக்கிய படைப்புங்கிறதுனாலதான் இயக்கம் தமிழன் என்று போட்டிருக்கிறோம்.

தமிழீழம், ஈழத் தமிழர்கள் என்றதும் உங்கள் நினைவில் துலங்கும் விஷயம் எது?

சந்தேகமில்லாமல் அவங்களோட விருந்தோம்பல். தமிழ்நாட்டு தமிழர்களிடம் கூட இதை பார்க்க முடியாது. ஆணிவேர் படத்தை எடுத்தது போர் நிறுத்த காலத்தில். அதனால் அவங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால், எல்லாளன் யுத்தம் உச்சத்தில் இருந்தபோது எடுத்தது. தங்குறதுக்குகூட ச‌ரியான இடம் கிடையாது. ஒவ்வொரு நாளும் யாராவது ஒருத்தர் வீட்டில் தங்குவோம். அப்போது அவங்க காட்டுன உபச‌ரிப்பை மறக்க முடியாது. இந்தியாவிலிருந்து அவங்களைப் பற்றி படமெடுக்க வந்திருக்கேங்கிறதுக்காக காட்டுற உபச‌ரிப்பு இல்லை அது. யார் வந்தாலும் அப்படிதான் உபச‌ரிக்கிறாங்க. தமிழீழத்தில் வாழணும்னு என்னை ஆசைப்பட வை‌த்தது அவங்களோட விருந்தோம்பல்தான்.

ோ‌ரின் ஆரம்பக்கட்டத்தில் தமிழீழம் சென்ற நீங்கள் ஏறக்குறைய எட்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்து போ‌ரின் உச்சக்கட்டத்தில் தமிழீழம் எதி‌ரிகளின் கையில் வீழும் நிலையில் வெளியேறியிருக்கிறீர்கள். இந்த இருவித ஈழமும் உங்களுக்குள் ஏற்படுத்திய மனப்பதிவு என்ன?

தமிழீழத்தில் ஒரு முழுமையான அரசாங்கம் செயல்பாட்டில் இருந்தது. காவல், கல்வி, உணவு, நீதி, நிதி, சாலை, வங்கின்னு எல்லாமும் அங்கே இருந்தது. எதிர்காலத்தை மனதில் வைத்து சாலைக்கு இரண்டு பக்கமும் பல மீட்டர்கள் இடம் ஒதுக்கியிருந்தார்கள். மெட்ரோ ரயில் திட்டம் வந்தால் அதுக்கும் இடம் தயாராகயிருந்தது. எந்தப் பக்கம் விமான நிலையம் இருந்தால் சிறப்பாக இருக்கும்னு அதையும் திட்டமிட்டிருந்தார்கள். அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் தனி நாடு என்ற உலக நாடுகளின் அங்கீகாரம் மட்டும்தான்.

நான் கிளம்பும்போது எல்லாம் தலைகீழாயிருந்தது. மாங்குளத்தில் ஒரு குடும்பம் இருந்தது. மகனை தமிழீழத்துக்காக போ‌ரில் பறிகொடுத்தவர்கள். வருகிறவர்களை உபச‌ரித்து சோறு போடுவதுதான் அவங்களோட வேலை. யுத்தம் கடுமையான போது மாங்குளத்தில் இருந்தவர்களெல்லாம் கிளிநொச்சியை தாண்டி இடம் பெயர்ந்து சென்றார்கள். அந்தக் குடும்பத்தையும் பார்த்தேன். வீடு, நிலம் எல்லாவற்றையும் விட்டு கூண்டில் அடைத்த கோழிகளுடன் அகதிகளாக.

சொந்த நாட்டில் அகதிகளாவது மரணத்தைவிட வலியானது. தமிழீழத்தில் பிச்சைக்காரர்களே கிடையாது. இன்று ஒவ்வொரு தமிழனும் ஒருவேளை சோற்றுக்கு பிச்சைக்காரனைப் போல் கையேந்தி நிற்கிறான். ஒன்று சொல்கிறேன்... இந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கும் ச‌ரி மற்றவர்களுக்கும் ச‌ரி, இந்த வலி தெ‌ரியாது. அனுபவித்தால் மட்டுமே அதன் ரணம் தெ‌ரியவரும்.

Share this Story:

Follow Webdunia tamil