Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சம்பள உயர்வுகோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

சம்பள உயர்வுகோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
, ஞாயிறு, 7 ஜூன் 2015 (17:06 IST)
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரி மலையகத்தில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.



குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று பகல் இந்த ஆர்பாட்டங்கள் நடந்துள்ளன.
 
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் தங்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரியுள்ளனர்.
 
தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு அடிப்படை சம்பளம் 450 ரூபா அடங்கலாக 620 ரூபா வழங்கப்படுகின்றது.
 
இந்த அடிப்படை சம்பளம் 800 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கம்பனிகளிடம் கோருகின்றனர்.
 
சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் ஏற்கனவே நடந்துள்ள பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
 
தேயிலை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் கம்பனிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் போன்ற காரணங்களை முதலாளிமார் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
 
ஆனால், தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு கோரிக்கையானது நியாயமானது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
 
தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் தொழிலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil