Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை மத்திய வங்கித்தலைவர் பணிக்கு திரும்பியமைக்கு எதிர்ப்பு

இலங்கை மத்திய வங்கித்தலைவர் பணிக்கு திரும்பியமைக்கு எதிர்ப்பு
, செவ்வாய், 5 மே 2015 (08:03 IST)
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் விடுமுறையில் சென்றிருந்த இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுன் மகேந்திரன் மீண்டும் பணிக்கு திரும்பியிருப்பதை தேசிய சுதந்திர முன்னணி கண்டித்துள்ளது.
 
அர்ஜூன் மகேந்திரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க இதனை தெரிவித்திருக்கிறார்.
 
மத்திய வங்கியின் தலைவர் ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறிய பியசிறி விஜேநாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவொன்றினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை தம்மால் ஏற்க முடியாதென்று தெரிவித்தார்.
 
இந்த ஊழல் புகார்களை காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவிடமோ அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடமோ ஒப்படைத்து விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தவறியுள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்க தலைமயிலான அரசாங்கத்திடமிரிந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.
 
விரைவில் நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தாம் அமைக்கவுள்ள அரசாங்கத்தின் மூலம் இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை விரிவாக விசாரணைக்க தீர்மானித்துள்ளதாகவும் பியசிறி விஜேநாயக்க கூறினார்.
 
இதேவேளை இவரது இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக தெரிவித்தார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.
 
இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், விசாரணைக் குழு மத்திய வங்கியின் தலைவர் நிரபராதி என்று அறிவித்துள்ள காரணத்தினால் அவர் மீண்டும் தனது பணிக்கு திரும்பியிருப்பதாக கூறிய ரவி கருணாநாயக்க, இதில் எந்தவித தவறும் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறிய ரவி கருணாயக்க இவை அடிப்படையற்றவை என்றும் கூறினார்.
 
மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இரகசியமான முறையில் மேற்கொண்டுவந்த செயல்களை தமது அரசாங்கம் வெளிப்படையாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் வீணான குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் கூறினார்.
 
கடந்த ஆட்சிக் காலத்தில் அப்போதைய மத்திய வங்கியின் தலைவராக செயற்பட்ட அஜித் நிவாட் கப்ராளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைத்த போதிலும் அவை விசாரணை செய்யப்படவில்லை என்று கூறிய நிதி அமைச்சர் ரவி கருனாயாயக்க, எனவே தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் விமர்சித்தார்.
 
இலங்கை மத்திய வங்கியின் கருவூல பத்திரங்களை விற்பனை செய்தபோது தனது மருமகனுக்கு சொந்தமான நிறுவனமொன்றுக்கு கூடுதல் சலுகைகளை பெற்றுக்கொடுத்ததாக இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுன் மகேந்திரன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.
 
பிரதமரினால் நியமிக்கப் பட்ட குழு ஒன்று இந்த புகார்கள் குறித்து விசாரித்தது. சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கும் மத்திய வங்கியின் தலைவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த குழு தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil