Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25வது ஆண்டு சவுக்கடி படுகொலை

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2015 (12:51 IST)
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 25 வது ஆண்டை அந்த ஊர் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நினைவு கூர்ந்தனர்.
ஆண்டுகள் பல கடந்தும் இதுவரையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றார்கள்.
 
1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
 
துப்பாக்கியால் சுட்டும், கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர் இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழுவினர் சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
 
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சிங்களத்திலும் தமிழிலும் பேசிக்கொண்டார்கள். அவ்வேளை நிலவிய சூழ்நிலையில் அவர்களை அருகாமையில் சென்று அடையாளம் காண முடியவில்லை என்கின்றார் மீனவரான ஜி. மரியசீலன்.
 
சம்பவத்தில் தனது பெற்றோர், மனைவி மற்றும் சகோதரிகள் உட்பட 7 பேரை இழந்துள்ள இவர் அவ்வேளை கடற்றொழிலுக்கு சென்றதன் காரணமாக வீட்டில் தான் இருக்கவில்லை என்கின்றார்.
 
சவுக்கடி கிராமம் ஏறாவுர் முஸ்லிம் பிரதேசத்திற்கு அண்மித்த கிராமம் என்பதால் இந்த படுகொலைச் சம்பவத்துடன் முஸ்லிம்களும் தொடர்புபட்டிருப்பதாக தமிழர் தரப்பில் சந்தேகங்கள் உள்ளன.
 
1990ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் இன ரீதியான மோதல்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே இந்தச் சந்தேகம் இருந்தாலும் பொறுப்பானவர்கள் யார்? என்பதை தங்களால் உறுதிபடக் கூற முடியாது எனவும் மரியசீலன் குறிப்பிடுகின்றார்.
 
சம்பவம் இடம்பெற்று வருடங்கள் பல கடந்து விடடாலும் இதுவரை தங்களுக்கு கிடைக்காத நீதி நல்லாட்சி என கூறப்படும் தற்போதைய ஆட்சியிலாவது கிடைக்க வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments