Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2010 உலகக் கோப்பை: வெல்லப்போகும் அணி எது?

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2010 (11:38 IST)
உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த 19வது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் இன்று மாலை தென் ஆப்ரிக்கத் தலைநகர் ஜோஹனஸ்பர்க்கில் துவங்குகிறது.

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் முதல் ஆப்ரிக்க நாடு என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா பெறுகிறது. கால்பந்தாட்டத்தில் தலைசிறந்த அணிகளில் ஒன்றல்ல தென் ஆப்ரிக்க அணி என்றாலும், கால்பந்தாட்ட்த்தில் ஆப்ரிக்க கண்ட நாடுகளின் அணிகள் இன்று பலம் வாய்ந்த தென் அமெரிக்க, ஐரோப்பிய அணிகளுக்கு ஒரு சவாலாக எழுந்துள்ள நிலையில், உலகக் கோப்பையை தென் ஆப்ரிக்காவில் நடத்துவது ஆப்ரிக்க கால்பந்தாட்டத்திற்கு அளிக்கப்படும் அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

உலகக் கோப்பைப் போட்டிகளைப் பொறுத்தவரை தென் ஆப்ரிக்க அணியின் ஒரே வெற்றி, 2002 உலகக் கோப்பைப் போட்டியில் சுலேவீனியா அணியை 1-0 என்ற கோல்கணக்கில் அது வென்றதேயாகும். அதன் பிறகு குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை. உலக கால்பந்தாட்டத் தர வரிசையில் அந்த நாடு 83வது இடத்தில்தான் உள்ளது. ஆனால் சொந்த மண்ணில் எந்த ஒரு அணியும் சிறப்பாக ஆடும், அதுவே அந்நாட்டில் கால்பந்தாட்டம் செழிப்பதற்கும் உதவும். எனவே இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் வட அமெரிக்காவின் பலம் வாய்ந்த அணியான மெக்சிகோவுடன் மோதுவது அதன் திறனிற்கு பெரும் சவாலாகவும், திறனை மேம்படுத்திக்கொள்ளும் நல்ல வாய்ப்பாகவும் அமையும்.

உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தைப் பொறுத்தவரை எப்போதும் எழும்பும் முதன்மையான கேள்வ ி: கோப்பையை வெல்லப் போகும் அணி எதுவென்பதே. இதுவரை நடந்த முடிந்துள்ள 18 உலகக் கோப்பை போட்டிகளில் தென் அமெரிக்க அணியான பிரேசில் 1958, 62, 70, 94, 2002 ஆண்டுகளில் 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. இந்த முறையும் அந்த அணிக்கு வெல்லும் வாய்ப்புள்ளதாகவே, பொதுவாக பிரேசில் அணி விரும்பிகள் கூறுகின்றார்கள். காகா, ரொபினோ போன்ற இளம் வீரர்களுடன், 19094 உலகக் கோப்பை வென்ற அணியின் தலைவராக இருந்த துங்கா பயிற்சியாளராகக் கொண்டு களமிறங்குகிறது.

1930,34 ஆம் ஆண்டுகளிலும், அதன் பிறகு 1982ஆம் ஆண்டிலும் 3 முறை உலகக் கோப்பையை வென்ற இத்தாலி, 4வது முறையாக கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி, 30,34ஆம் ஆண்டுகளில் நிகழ்த்தியதை இன்றும் சாதிக்குமா? சாத்தியம் உள்ளதென்கின்றனர் ஐரோப்பிய காலபந்தாட்ட அவதானிகள்.

1978 இலும், 1986லும் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா 3வது முறையாக மீண்டும் வெல்லுமா? என்று கேள்விக்கு, சொல்ல முடியாது என்றே கூறுகிறார்கள். லயனல் மெஸ்ஸி, ஏஜ்சல் டி மரியா போன்ற அபார ஆட்டக்காரர்களைக் கொண்டிருந்தாலும், உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அர்ஜெண்டினா அணி திணறியதை எவரும மறக்கவில்லை. ஆயினும், அந்த நாட்டு அணி முன்பு இரண்டு முறை கோப்பையை வென்றபோது எந்த வீரர் அதன் மூல பலமாக இருந்தாரோ அவரே, டீகோ மரடோனா என்ற அந்த அற்புத ஆட்டக்காரர், இப்போது அந்த அணியின் பயிற்சியாளராக உள்ளது சிந்திக்க வைக்கிறது.

3 முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மணி இப்போதும் ஒரு பலம் வாய்ந்த அணியாக களமிறங்குகிறது. அபாரத் திறன் கொண்ட நடுக்கள ஆட்டக்காரர் மெசில் ஓஜில் போன்ற இளம் வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றுள்ளதால் எந்த அணியையும் சாய்த்துவிடும் திறன் கொண்டதாக உள்ளது.

இதுவரை நடந்த பல உலகக் கோப்பைப் போட்டிகளில் சிறப்பாக ஆடி, கால் இறுதியிலோ அல்லது அரையிறுதியிலோ தோற்று துயரத்துடன் வெளியேறிய அணி ஸ்பெயின். தற்போது ஐரோப்பிய கால்பந்தாட்டச் சாம்பியனாக உள்ளது. ஜேசுஸ் நவஸ் போன்ற திறமையான முன்கள ஆட்டக்காரர்களைக் கொண்ட அந்த அணி கவனத்தில் கொள்ள வேண்டிய அணியாகத் திகழ்கிறது.

பலம் வாய்ந்த அணியாக எப்போதும் களமிறங்கும் இங்கிலாந்து, இம்முறை இத்தாலிப் பயிற்சியாளருடன், அதே நேரத்தில் அதன் பலமான நடுக்கள ஆட்டக்காரர் டேவிட் பெக்காம் இல்லாமல், களமிறங்குகிறது. ஆனால், போட்டி என்ற வந்தபின் எந்த அணியுடனும் உயிரைக் கொடுத்து ஆடுவதில் தேர்ந்த அணி இங்கிலாந்தாகும். 1966இல் ஒரே ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்திற்கு இரண்டாவது முறை வெல்லும் கனவு கானல் நீராகவே காணாமல் போகிறது. வாய்னி ரூனியின் கால் திறன் கனவை நனவாக்குமா?

ஆப்ரிக்காவின் சவால்!

நன்றாக ஆடுவார்கள், ஆனால் கால்யிறுதியோடு சரி, என்றுதான் ஆப்ரிக்க அணிகள் பேசப்பட்டு வந்துள்ளன. ஆனால் இந்த முறை அந்தக் கதை மாறும் என்று பலமான எதிர்பார்ப்பு உள்ளது. காரணம், ஆப்ரிக்க சாம்பியனான ஐவரி கோஸ்ட், தொடர்ந்து 6வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள கேமரூன், ஆப்ரிக்காவின் பலமான அணிகளான கானா மற்றும் நைஜீரியா. இவைகள் உலகின் தலை சிறந்த எந்த அணியையும் சோதித்து பார்த்துவிடக் கூடிய அபார அணிகளாகும். தங்கள் மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை அவர்களுக்கு. உலகக் கோப்பையை வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதே தவிர, ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு அதிர்ச்சி தோல்வியை சில அணிகளுக்கு இவர்கள் வழங்கப்போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

மெக்சிகோவைத் தவிர, வட அமெரிக்க கண்டத்திலிருந்து தகுதி பெற்ற அமெரிக்க அணியை மிகவும் எதிர்பார்க்கிறார்கள். சி பிரிவில் இங்கிலாந்து, சுலோவீனியா, அல்ஜீரியா அணிகளுடன் இடம் பெற்றுள்ள அமெரிக்க அணியை கால் இறுதிக் குதிரை என்றே கூறுகிறார்கள். ஜோசி ஆல்டிடோர் போன்ற ஆப்ரிக்க மரபு வழிச் சிங்கங்களின் திறன் அந்த அணியை பலமானதாக்கியுள்ளது. ஆயினும் கால்பந்தாட்டச் சக்திகளை வீழ்த்தும் அதன் திறன்? பொறுத்திருந்து பார்ப்போம்.

கால்பந்தாட்ட இறைவன் வாழும் தென் அமெரிக்கக் கண்டத்தில் பிரேசில், அர்ஜெண்டினா அணிகளைத் தவிர, உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற மேலும் மூன்று அணிகள் உருகுவே, சிலி, பராகுவே. இவற்றில் பராகுவே அணிக்கு பலமான வாய்ப்பு உள்ளதென எழுதியுள்ளார் பெலே! பராகுவே அணியின் ஆட்டத்திறனை விட அடித்திறனே பல உலகக் கோப்பை போட்டிகளில் அதன் ‘பலமா க’ வெளிப்பட்டுள்ளது. இந்த முறையாவது ஆட்டத்திறன் வெளிப்படுகிறதா என்று பார்ப்போம். சிலி அணியின் அலெக்சிஸ் சான்செஸ் ஒரு ஆச்சரியாகப் பேசப்படுகிறார். 21 வயதான இந்த இளம் முன்கள ஆட்டக்காரர் சிலியின் திறனுக்கு ஒரு அத்தாட்சியாக இருப்பார் என்று அந்நாட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.

உருகுவே முதல் உலகக் கோப்பையை வென்ற அணி. ஆனால் அதன் பிறகு அதன் ஆட்டத்திறன் பெரிதாக இதுவரை வெளிப்படவில்லை. இம்முறை மிகச்சிறப்பாக ஆடித் தகுதி பெற்றுள்ள இந்த அணி, இன்று இரவு நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் பிரான்சுடன் மோதுகிறது.

ஆசிய அணிகளில் ஜப்பான், தென் கொரியா, வட கொரியா ஆகியன உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. திறமையான சில வீரர்களைக் கொண்டிருந்தாலும், தங்களுக்கென தனித்த ஒரு ஆட்டத்திறனை பெற்றிராதவை ஆசிய அணிகள். அதுவே அவர்களை அதிக பட்சம் கால் இறுதிக்கு மேல் அழைத்துச் செல்வதில்லை. இந்த முறை எதுவரை இவர்களின் பயணிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

இந்த உலகக் கோப்பை போட்டி இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளைப் போல் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அதிகம் அளிப்பதாகவும், எதிர்பாராத திருப்பங்களை வழங்குவதாகவும் இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. துவங்கட்டும் கால்பந்தாட்டத் திருவிழா.

ஒரு முறை தென் அமெரிக்க அணி வென்றால், அடுத்த முறை ஐரோப்பிய அணி வெல்லும் என்று கூறுவதுண்டு. அப்படித்தான் நடந்தும் வந்துள்ளது. அப்படிப்பார்த்தால் இம்முறை தென் அமெரிக்க அணி வெல்ல வேண்டும். எது அந்த தென் அமெரிக்க அணி? பொறுத்திருந்து பார்ப்போம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. கொண்டாடிய சென்னை ரசிகர்கள்..!

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!

Show comments