மதத்தில் இருந்து கற்பு, ஆடை என்று தன்னை தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கவைப்பதால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று சானியா மிர்சா அறிவித்திருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது என்றாலும் நடந்தவற்றை நன்கு அறிந்தவர்கள் அவர் முடிவு சரியானதே என்று நிச்சயம் கூறுவார்கள்.
முன்னாள் வீரர்கள் அவருக்கு அறிவுரை வழங்கத் துவங்கியுள்ளனர். லியாண்டர் பயஸ் கூட சானியா மிர்சா புகழினால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
விஜய் அமிர்தராஜ் "எங்களது காலத்தில் இந்தியாவில் விளையாடுவது என்பது ஒரு பெரிய விஷயம ் ” என்று கூறியுள்ளார்.
முன்னாள் டேவிஸ் கோப்பை இந்திய டென்னிஸ் அணித் தலைவர் அக்தர் அலி மட்டுமே சானியா மிர்சாவின் இந்த நடவடிக்கை குறித்து ஆதரவான பதிலை வெளியிட்டுள்ளார். "இந்தியாவில் விளையாட மாட்டேன் என்று ஒருவர் கூறுகிறார் என்றால் அது இந்திய விளையாட்டிற்கு ஒரு சோகமான நாள்தான். சிலர் அவரை வேண்டுமென்றே சர்ச்சைகளில் சிக்க வைக்கின்றனர். இவையெல்லாம் வெறும் அரசியல்" என்று கடுமையாக சாடியுள்ளார்.
நம் நாட்டின் விளையாட்டுத் துறையில் பலருக்கு தாக்கமாக இருந்து வரும் ஒரு வீராங்கனைக்கு நாம் பிரச்சனைகளையே பரிசாக அளிக்கிறோம் என்கிறார் அக்தர் அலி.
சானியா மிர்சா டென்னிஸ் ஆட்டத்திற்காக போட்டுக் கொள்ளும் உடை "ஆபாசமாக" இருக்கிறது என்று இஸ்லாமிய மதக்குருக்கள் சர்ச்சைகளை கிளப்புகின்றனர். தேசியக் கொடியை அவமிதித்து விட்டார் என்று ஒரு சிலர் வழக்கு தொடர்கின்றனர்.
இஸ்ரேல் வீராங்கனை ஷாஹர் பியருடன் இரட்டையர் இணையாக தொழில் - விளையாட்டு ரீதியாக இணைந்ததற்கு முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தனக்கு தகுந்த வெற்றி இணையை சானியா கைவிடவேண்டி வந்தது.
ஆஸ்ட்ரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் இருவரையும் சேர்ந்து டென்னிஸ் ஆட விடாமல் சில பிரிவினர் தடுத்தனர். சானியா டென்னிஸ் போட்டியில் அணியும் உடைகள் இஸ்லாத்திற்கு எதிரானது என்று அடிப்படைவாத இஸ்லாமியர்கள் போர்க்கொடி தூக்கினர். ஒரு சில மூடர்கள் கொலை மிரட்டலையும் விடுத்தனர்.
கொல்கத்தாவில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின் போது உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு சானியா மிர்சாவிற்கு மெய்க்காவலர்களை நியமித்தது.
விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் கிடைத்து வந்த வருவாய் இந்த சர்ச்சைகளினாலும் அதற்கு தூபம் போடும் ஊடகங்களாலும் நின்று போனது.
நம் சுதந்திரத் திருநாட்டில் பேச்சுரிமை பேச்சுரிமை என்ற ஒன்று இருக்கிறது. இதற்கு எந்த மத அமைப்புகளும் தடை போட முடியாது. அந்த பேச்சுரிமையை நம்பி சானியாவும் செக்ஸ் பற்றி ஒரு கருத்தை வெளியிட்டார். அதாவது பாதுகாப்பான செக்ஸின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உடனே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நகரங்களில் முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர், மிர்சாவை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுங்கள் போன்ற கோஷங்கள் வன்முறையாக எழும்பின.
இந்திய பெண்களை சானியா மிர்சா கெடுக்கிறார் என்ற அபத்தவாத கோஷங்கள் ஆங்காங்கே ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டன. உடனே நிலைமைகளை அமைதிப்படுத்த "திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதை நான் எதிர்க்கிறேன், இஸ்லாத்தில் இது ஒரு மிகப்பெரிய பாவம், கடவுள் ஒரு நாளும் இதை மன்னிக்கமாட்டார்" என்று சானியா கூறவேண்டி வந்தது.
webdunia photo
FILE
" மதச் சார்பற்ற" அரசியலமைப்புச் சட்டத்தில் புனிதமாக குறிப்பிடப்படும் பேச்சுரிமை கொண்ட நாட்டில்தான் இன்னமும் நாம் வாழ்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது.
ஹைதராபாதில் உள்ள மதகுரு ஒருவர் கற்பனைக்கிடமின்றி சகலத்தையும் சானியா காட்டுகிறார் என்று அவரது டென்னிஸ் உடை குறித்து கூறியுள்ளார்.
மதகுருவுக்கும் விளையாட்டுத் துறைக்கும் என்ன தொடர்பு? சரி இருந்து விட்டுப் போகட்டும். சானியா விளையாடும்போது ஆட்டத்தை பார்க்காமல் அந்த மதகுரு எதைப் பார்க்கிறார்?
ஒரு தனி நபராக என்ன உடை அணிவது என்பது மதங்களின் தலையீட்டிற்கு அப்பாற்பட்ட விஷயம்.
கிரிக்கெட்டில் வெள்ளைக்காரர்களின் குறியீடான பேண்ட் ஷர்ட்டை நாம் அணியக்கூடாது. நமது பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்துதான் ஆடவேண்டும் என்று சிவசேனாவோ, ஆர்.எஸ்.எஸ். இயக்கமோ கூறினால் அது எவ்வளவு தமாஷாக இருக்குமோ அவ்வளவு தமாஷ்தான் சானியா மிர்சா டென்னிஸ் ஆடும்போது காற்றுப் புகாத உடைகளை அணிய வேண்டும் என்று வலியுறுத்துவதும்.
2 அல்லது 3 மணி நேரம், சில வேளைகளில் அதற்கு மேலும் விளையாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது உடலுக்குள் காற்று செல்வது மருத்துவ ரீதியாக அவசியம் என்ற அரிச்சுவடி கூடவா நமக்கு தெரியாமல் உள்ளது. பிரச்சனை அதுவல்ல, பெண் என்றாலே ஒரு போகப்பொருள் என்று பார்க்கும் நமது (மத) பார்வையில் உள்ளது கோளாறு.
ஒரு பெண் முன்னேறி வந்து விட்டால் ஏற்படும் காய்ச்சல் நம்மை இவ்வாறெல்லாம் யோசிக்கத் தூண்டுகிறது.
தேசியக் கொடி அவமதிப்பு வழக்காம்! புகழ்பெற்ற ஒருவர் மீது ஏதாவது அவதூறு வழக்கு போட்டு மலிவான விளம்பரம் தேடும் ஒரு சில அயோக்கியர்களால் போடப்படுவதுதான் இப்படிப்பட்ட வழக்குகள்.
சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் நாட்டில் ஆங்காங்கே கொடியேற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கொடியேற்றிவிட்டு உரை என்ற பெயரில் அவிழ்த்து விடும் பொய்களால் நமது தேசியக் கொடி அவமதிக்கப்படுவதில்லையா?
இந்தியா மட்டுமல்லாது ஆசியா முழுவதற்குமே டென்னிஸ் உலகில் ஒரு உந்துதலாக இருந்து வரும் ஒரு இளம் டென்னிஸ் வீராங்கானையை நமது வக்ரமான உணர்வுகளுக்கு இரையாக்குவதால் ஒரு போதும் நாட்டிற்கும், சமூகத்திற்கும் நன்மை பயக்கபோவதில்லை.
ஒரு சினிமா நடிகைக்கு கொடுக்கும் நெருக்கடிகளை, நாட்டை சர்வதேச அரங்கில் பிரதி நிதித்துவம் செய்யும் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு கொடுக்கிறார்கள் என்றால் சாதாரண பெண்களின் நிலைமைகளைப் பற்றி யோசிக்கவே பயமாக உள்ளது.
இந்த போக்குகள் தொடரும் வரை இந்தியாவில் டென்னிஸ் ஆடமாட்டேன் என்ற வைராக்கியத்தை சானியா மிர்சா உறுதியாக கடைபிடிப்பது நல்லதுதான்.
நடிகைகளையே அப்படியெல்லாம் பார்க்காமல், அவளையும் ஒரு பெண்ணாக, சமூகத்தின் அங்கமாக பார்க்க வேண்டும் என்று கூறிவருகிற வேளையில், நமது நாட்டின் பெருமையை உயர்த்தும் ஒரு இளம் வீராங்கனையை வக்கிரக் கண் கொண்டு பார்த்த நாம், திருந்தும் வரை சானியா ஆடவேண்டாம் இந்தியாவில்.