Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: படங்களுடன் முழுவிவரம்!

வீரமணி பன்னீர்செல்வம்
திங்கள், 14 ஜூலை 2014 (13:26 IST)
பிரேசில், ரியோ-டி-ஜெனிரோ நகரத்தில் உள்ள மரக்காணா மைதானத்தில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஜெர்மனி - அர்ஜெண்டீனா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கூடுதல் நேரத்தில் ஜெர்மனி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கோல் அடித்து உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஆட்டம் தொடங்கிய நிமிடத்திலிருந்து இரு அணியின் ஆட்டங்களும் மிகவும் ஆக்ரோசமாக இருந்தது. இரு அணிகளுமே கால்பந்துக்கே உரிய நுணுக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் தங்களுடைய நாட்டின் கவுரவத்தை காக்கப் போராடுகிறோம் என்ற உணர்ச்சி நிலையில் விளையாடியது போலவே தோன்றியது.
 
ஒட்டுமொத்த ஆட்டத்திலும் 63 சதவீதம் பந்து ஜெர்மனி வீரர்களின் வசமே இருந்தது. அர்ஜெண்டீனா வீரர்களால் 37 சதவீதமே பந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. இதில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். என்னதான் ஜெர்மனி பந்தை ஆக்கிரமித்திருந்தாலும், அர்ஜெண்டீனா வீரர்களின் அபாரமான தடுப்பாட்டத் திறமையால்தான் ஜெர்மனி இறுதிவரை கோல் அடிக்க திணறியது. இந்த இடத்தில்தான் பிரேசில் வீரர்கள் கோட்டைவிட்டார்கள் என்பது அர்ஜெண்டீனாவின் தடுப்பாட்டத்தை கவனித்த அனைவர் மனதிலும் தோன்றியிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஜெர்மனி வீரர்களிடம் கவனித்த மற்றொரு மெச்சத்தகுந்த அம்சம் அவர்கள் ஒரு அணியாக நின்று விளையாடினர். யாருக்கும் சுயமாக தான் யார் என்று காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. காரணம் அவர்கள் பாஸ் செய்து ஆடிய விதம். ஜெர்மனியின் ஒவ்வொரு பாஸும் அவ்வளவு அழகாக, மிக ஒற்றுமையாக இருந்தது.
 
ஜெர்மனி வீரர்கள் 10 முறையும், அர்ஜெண்டீனா வீரர்கள் 9 முறை கோல் முயற்சி செய்தனர். ஜெர்மனி வீரர்கள் 5 முறையும், அர்ஜெண்டீனா வீரர்கள் 3 முறையும் கார்னர் கிக் வாய்ப்புகளை பயன்படுத்தினர். ஜெர்மனி வீரர்கள் 20 முறையும், அர்ஜெண்டீனா வீரர்கள் 13 முறையும் ஃபவுல் செய்தனர். ஜெர்மனி வீரர்கள் 3 முறையும், அர்ஜெண்டீனா வீரர்கள் 2 முறையும் ஆஃப் சைடு வாங்கினர். இதில் அர்ஜெண்டீனாவுக்கு ஒரு கோல் வாய்ப்பே பறிபோனது.

ஆட்டம் தொடங்கிய 20ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் தடுப்பாட்டக்காரர் தங்களது கோலி பந்தை ஹெட்ஸ் செய்து அனுப்ப முயற்சிக்க, அவருக்குப் பின்னால் அர்ஜெண்டீனாவின் நட்சத்திர ஆட்டக்காரர் கொன்சாலோ ஹிகுவைன் உள்ளே புகுந்து அந்த பந்து இரண்டு பவுன்ஸ் ஆனவுடன் தனது வலது காலை சுழட்டி அடிக்க, பந்து கோல் கம்பத்தின் இடது புறம் பல மீட்டர் தூரம் தள்ளிப்போனது.
அதேபோல் ஆட்டத்தினுடைய 30ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டீனாவின் மையப்பகுதி ஆட்டக்காரர் லாவெஸ்ஸி கொடுத்த அற்புதமான பாஸ்-ஐ ஹிகுவைன் அற்புதமான கோலாக மாற்றினார். அங்கு ஒரு சிறு பிழை நடந்துவிட்டது. அது அர்ஜெண்டீனாவின் தலையெழுத்தையே மாற்றிய பிழையாகிப் போனது காலக்கொடுமை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
லாவெஸ்ஸி தூக்கி அடித்த பந்து டி பொசிஸன் என்று சொல்லப்படும் கட்டத்துக்குள் வருவதற்குள் அர்ஜெண்டீனா அவென்ஸ் ஹிகுவைன் தனது ஒரு காலை, ஒரே ஒரு அடி உள்ளே வைத்துவிட்டார். அது ஆஃப் சைடு எனப்படும் ஃபவுல் வகையைச் சார்ந்தது. எனவே அந்த அற்புதமான கோல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
 

உலக அர்ஜெண்டீனா ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பும், நம்பிக்கையுமான லியோனல் மெஸ்ஸியிடம் எப்போதெல்லாம் பந்து வருகிறதோ, அப்போதெல்லாம் குறைந்தது 5 ஜெர்மனி வீரர்கள் அவரை சுற்றி வளைத்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாம்பு போல் வளைந்து நெளிந்து பந்தை உந்திச் செல்லும் திறமை வாய்ந்த மெஸ்ஸியால் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு ஜெர்மனி வீரர்கள் நெருக்கடி கொடுத்தார்கள். அதற்கு காரணமும் இருக்கின்றது. கொஞ்சம் மெஸ்ஸியை லேசாகவிட்டால் மைதானத்துக்குள் பல மாயாஜாலங்கள் நடந்துவிடும் என்று ஜெர்மனிக்கு நன்றாகத் தெரியும்.
ஜெர்மனி டிஃபென்ஸின் கவனத்தை மெஸ்ஸியின் பக்கம் திருப்பி அர்ஜெண்டீனாவின் பிற அஃவென்ஸ் வீரர்கள் சில கோல்களை அடித்திருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
ஆட்டத்தின் முதல் பாதியின் 45ஆவது நிமிடத்தின் முடிவில் +2 என்று இரண்டு நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. அப்போது ஜெர்மனிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு அமைந்தது. அர்ஜெண்டீனா கோல் கம்பத்திலிருந்து இடது புறம் கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஜெர்மனியின் நட்ச்சத்திர வீரர் க்ரோஸ் அடித்தபந்து அற்புதமாக கோல் கம்பத்திலிருந்து 6 யார்டு தொலைவில் சுழண்டு வந்தது. அதை ஜெர்மனி வீரர் பெனடிக்ட் ஹவடெஸ் கோலை நோக்கி ஹெட்ஸ் செய்தார். அது கம்பத்தில் பட்டு ரீபவுண்ட் ஆனவுடன் மீண்டும் அடித்த பந்தை அர்ஜெண்டீனா கோலி ரொமெரோ கோட்டின் மீது விழுந்து பிடித்துவிட்டார்.

அது கோலா இல்லையா என்ற ஆராய்ச்சிக்குள் செல்வதற்குள் ஒரு விசில் பறக்கிறது நடுவரிடமிருந்து. அது ஜெர்மனியின் தாமஸ் முல்லர் ஏற்கனவே ஆஃப் சைடு என்பதற்காக. அர்ஜெண்டீனா தப்பிப் பிழைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் க்ரோஸ் அடித்தது அப்படி ஒரு பர்ஃபெக்ட் ஷாட்.
 
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 47ஆவது நிமிடம், மெஸ்ஸிக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

அர்ஜெண்டீனாவின் மையப்பகுதி வீரர் பிக்லியாவிடமிருந்து ஒரு அற்புதமான பாஸ், இடதுபுறம் ஃபார்வேடில் நின்று கொண்டிருந்து மெஸ்ஸியிடம் வருகிறது. ஒட்டுமொத்த ஜெர்மனி டிஃபென்சும் ஹிகுவைனைச் சுற்றிக் கொண்டிருந்தபோது மெஸ்ஸிக்கு வந்த பந்து, அர்ஜெண்டீனா என்ற ஒரு நாடு மட்டுமல்ல. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த மெஸ்ஸி ரசிகர்களும் "கோல்" என்ற ஒலியெழுப்பி "மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி" என்ற கூச்சலிடத் தயாராக இருந்த நேரத்தில் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

மெஸ்ஸி அடித்த பந்து, கம்பத்தை விட்டு சில யார்டுகள் விலகிச் சென்றதால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
அதன்பின்பு ஆட்டம் இன்னும் ஆக்ரோசமாகிறது. ஏகப்பட்ட ஃபவுல்கள், உக்கிரமான தாக்குதல்கள், ஒரு கட்டத்தில் ஜெர்மனி வீரர் செவெய்ன்ஸ்டீகர் முகம் கிழிந்து ரத்தம் வழிந்தது. இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க இது விளையாட்டா? இல்லை, போர்களமா? என்று சந்தேகிக்கத் தோன்றியது.
முழுநேர முடிவிலும் ஒரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. மீண்டும் 30 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

எக்ஸ்ட்ரா டைம் தொடங்கிய 60 நொடிகளில் பந்து அர்ஜெண்டீனா கோல் கம்பத்தின் பக்கம் எடுத்துவரப்பட்டு ஜெர்மனி வீரர் சுர்லேவால் கோல் நோக்கி கச்சிதமாக செலுத்தப்படுகிறது. ஆனால் அதை அர்ஜெண்டீனா கோல் கீப்பர் ரொமெரோ அற்புதமாக தடுத்தார்.
அதேபோல், எக்ஸ்ட்ரா டைமின் 7ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டீனா வீரர் பலேசியோ கோலின் மிக அருகில் கொண்டுவந்த பந்தை ஜெர்மனியின் கோல் கீப்பர் மனுவெல் நெவார் அருமையாக சேவ் செய்தார்.
எக்ஸ்ட்ரா டைமின் 23 ஆவது நிமிடம்: எப்படி விவரிப்பது அந்த நிமிடத்தை. ஜெர்மனியின் அநாயாசமான ஆட்டம் வெளிப்பட்ட நிமிடம் அது.

பந்து மையப்பகுதியிலிருந்து ஜெர்மனியின் இடதுபுறம் இருந்த சுர்லேவிடம் வருகிறது. ஒரு அற்புதமான வேகத்தின் அர்ஜெண்டீனாவின் சில டிஃபென்ஸ்களைத் தாண்டி இடது ஓரத்திலிருந்து க்ளியராக மையப்பகுதிக்கு ஒரு தரமான பாஸ் வருகிறது. உள்ளே நுழைந்த ஜெர்மனியின் கோட்சே பந்தை தனது நெஞ்சில் வாங்கி முன்னோக்கி எழுப்பித் தள்ளுகிறார். கிழே விழச் சென்ற அந்த பந்தை, விழுவதற்கு சில அடிகளுக்கு முன் தனது இடது காலை சுழட்டி, கோல் கம்பத்தின் இடது ஓரத்தில் அடிக்கிறார். அந்த பந்து எந்த பிழையும் இல்லாமல், திசை மாறாமல், நோக்கம் வழுவாமல் உலக்கோப்பையைத் தட்டிச் சென்றது.


அதன்பிறகு ஆட்டத்தின் கடைசி 7 நிமிடம், திணறல், திண்டாட்டம் அர்ஜெண்டீனாவுக்கு. முன்பை விட கூடுதல் கவனத்துடன் ஜெர்மனி. கடைசி இரண்டு நிமிடம் இருக்கும்போது பார்வேட் ரைட்டில் வந்த மெஸ்ஸியிடம் பந்து பாஸ் செய்யப்படுகிறது. மெஸ்ஸி கூடுதல் வேகத்துடன் கோலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். ஜெர்மனியின் டிபென்ஸ் வீரர்கள் மெஸ்ஸியை தடுக்கும் முயற்சி அவரை கீழே தள்ளி விட்டு ஃபவுல் செய்கிறார்கள்.

மெஸ்ஸிக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு கோல் கம்பத்திலிருது 30 யார்டு தொலைவிலிருந்து ஃப்ரீ கிக் அடிக்கும் வாய்ப்பு. மெஸ்ஸி ஃப்ரீ கிக்கிலும் மன்னன் என்பது உலகம் அறிந்த ஒன்று. ஏதாவது நடக்கும் என்ற துடிப்புடன் ரசிகர்கள். ஆனால் மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலே திசை மாறி பறந்து சென்றுவிட்டது. அத்துடன் அர்ஜெண்டீனாவின் உலகக்கோப்பை கனவும் பறந்து சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் எக்ஸ்ட்ரா டைமும் முடிவுக்கு வந்தது. ஜெர்மனி வீரர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். அர்ஜெண்டீனா வீரர்களும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கினர்.
பிரேசிலை சாகடித்த ஜெர்மனியை தனது அண்டை நாடான அர்ஜெண்டீனா தோற்கடிக்க வேண்டும் என்று பிரேசில் ரசிகர்களும் விரும்பினர். பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மரும் அதை வலியுறுத்தியிருந்தார். ஆனால் ஜெர்மனியின் தன்னலமில்லாத கூட்டு முயற்சி, கவனம் சிதறாத ஆட்டம் ஆகியவற்றின் மூலம் 2014 ஆம் ஆண்டின் கால்பந்து உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

Show comments