பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 444 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியின் முடிவில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி நாட்டிங்காம், டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கத்திலிருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி வீரர்கள் ரன் மழை பொழிந்தனர். அந்த அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 122 பந்துகளில் 171 ரன்களை குவித்தார். மேலும் ஜோ ரூட் 85 ரன்களும், ஜோஸ் பட்லர் 90 ரன்களும் எடுத்து அணிக்கு ரன்களை சேர்க்க துவங்கினர்.
50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தது. இதற்கு முன்னர் இலங்கை அணி, 2006ல் நெதர்லாந்துக்கு எதிராக 443 ரன்கள் எடுத்திருந்ததே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்களாககும்.
பின்னர் 445 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் ஷர்ஜீல் கான் மற்றும் முகமது அமீர் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.