Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011 உலகக் கோப்பை: சவாலான இலங்கை அணி!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2011 (11:41 IST)
webdunia photo
FILE
உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடு வென்றதில்லை என்ற நிலையை 1996ஆம் ஆண்டு மாற்றி சாம்பியன்களான இலங்கை அணி கடந்த உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற கர்வத்துடன் இந்த உலகக் கோப்பை போட்டிகளில் களமிறங்குகிறது.

கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ள அணி என்று இலங்கை கருதப்படுகிறது. ஆனால் இந்த முறை அதிரடி வீரர் ஜெயசூரியா இல்லை. ஆனால் உலகக் சாதனையாளர் முரளிதரன் உள்ளார். அனுபவமிக்க சிறந்த கேப்டன் சங்கக்காரா உள்ளார். இவரது பேட்டிங் அந்த அணிக்கு பெரிய பலம். ஜெயவர்தனேயுடன், அதிரடி வீரர் தில்ஷானின் ஆட்டமும் கைகொடுத்து பெரிய ரன் எண்ணிக்கையை எட்டினால் பிற்பாடு பந்து வீச்சில் மலிங்கா, முரளிதரன் ஆகியோர் வெற்றியை உறுதி செய்து விடுவார்கள் என்ற பலம் இந்த அணிக்கு உள்ளது.

முந்தைய உலகக் கோப்பைகள்:

1992 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் "அண்டர் டாக்ஸ்" என்று அழைக்கப்படும் பலவீனமான அணியாக இருந்த இலங்கை அணி 1994- 95ஆம் ஆண்டுகளில் அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் ஆஸ்ட்ரேலியாவுக்குச் சென்று ஒரு புதிய அணியாகத் திரும்பியது.

ரணதுங்கா அந்தத்தொடரில்தான் கலுவிதரானா, ஜெயசூரியா என்ற புதிய அதிரடித் துவக்கத்தை அறிமுகம் செய்தார். இதில் இலங்க ை கிளென் மெக்ரா, ஷேன் வார்ன் போன்றவர்களுக்கே அதிர்ச்சியூட்டியது. முதன் முதலில் துவக்கத்தில் களமிறக்கப்பட்ட கலுவிதரான அந்தத் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கர்ட்லி ஆம்புரோஸ் வீசிய பந்தை 'இனிமேல் வீசுவாயா' என்ற ரகத்தில் ஒரு ஹுக் ஷாட்டை ஆட அது ஃபைன் லெக் திசையில் சிக்சருக்குச் சென்றது. 85 ரன்களை கலு விளாச மேற்கிந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வி தழுவியது. பிறகு ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 117 ரன்களை எடுத்து இலக்கைத் துரத்தி வெற்றிபெற உதவினார் கலுவிதரானா.

அந்த கர்வத்துடன் 1996ஆம் ஆண்டு களமிறங்கிய ரணதுங்கா தலைமை இலங்கை அணி கோப்பையை வெல்லும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் முதல் சுற்றுப்போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா, மேற்கிந்திய அணிகள் இலங்கையில் சென்று விளையாடவில்லை. இதனால் புள்ளிகள் சுலபமாக இலங்கைக்குச் சென்றது. அதன் பிறகு டெல்லியில் இந்தியாவைப் பந்தாடியது. காலிறுதியில் இங்கிலாந்துக்கு மரண அடி. அரையிறுதியில் இந்தியாவுக்கு உதை என்று இறுதிப் போட்டியில் அரவிந்த டிசில்வாவின் அபாரமான சதத்துடன் சாம்பியன் பட்டம் வென்றது.

1999 மற்றும் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கை சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை என்றாலும் தென் ஆப்பிரிக்கா செய்த தவறினால் இலங்கை அரையிறுதிக்குள் நுழைந்தது. அதில் ஆஸ்ட்ரேலியாவுடன் தோல்வி தழுவி வெளியேறியது.

2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் இலங்கை கோப்பையை வெல்லும் அணியாகக் கருதப்படவில்லை. ஆனால் பிரிவு Bஇ-யில் இந்தியா, வங்கதேசம், பெர்முடா அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

அதில் முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட அணி தென் ஆப்பிரிக்காவாகும். முதலில் பேட் செய்த இலஙை அணி 209 ரன்களையே எடுக்க முடிந்தது. 44-வது ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா 200/5 என்று இருந்தது. அப்போதுதான் தென் ஆப்பிரிக்காவுக்கு வழக்கமாக நடக்கும் பதட்டம் நிகழ்ந்தது.

webdunia photo
FILE
45- வது ஓவரை மலிங்கா வீச போலாக்கையும் ஆண்ட்ரூ ஹாலையும் அடுத்தடுத்து வீழ்த்தினார் அவர். 206/7 என்ற நிலையில் அடுத்த ஓவரில் வாஸ் ஒரு ரன்னையே விட்டுக் கொடுத்தார். மீண்டும் மலிங்கா வீச வந்தார். முதல் பந்திலேயே 86 ரன்கள் எடுத்த ஜாக் காலிஸை வீழ்த்தி மலிங்கா ஹேட்ரிக் சாதனி புரிந்தார். இதோடு நிற்கவில்லை அடுத்த பந்தே நிடினியும் பவுல்டு ஆனார். மீதமுள்ள 4 பந்துகளில் இரண்டு பந்துகள் ச்டம்பை உரசிக் கொண்டு சென்றது. ஒரு பந்தில் ஜெயசூரியா ஃபீல்டிங்கைக் கோட்டை விட லாங்கிவெல்ட் 1 ரன் எடுத்தார். 208/9 என்ற நிலையில் அடுத்த ஓவரை எதிர்கொண்டது தென் ஆப்பிரிக்கா. 206/5 என்ற நிலையில் 208/9 என்று ஆன தென் ஆப்பிரிக்கா வாசின் அந்த அபாய ஓவரை ஒருவாறாக பீட்டன் என்ற முறையில் தப்பிப் பிழைத்தது.

மீண்டும் மலிங்கா வீச வர ஆட்டம் டென்ஷனின் உச்சக்கட்டத்திற்குச் சென்றது. அதுவும் பீட்டர்சன் முதல் பந்தை ஒரு சுழற்றுச் சுழற்ற அது மட்டையை வெகு நெருக்கமாகத் தாண்டிச் சென்றது. அடுத்த பந்து பீட்டர்சன் எட்ஜ் செய்ய, ஸ்லிப் வைக்க மறந்த கேப்டன் ஜெயவர்தனே, பந்து எல்லைக் கோட்டைக் கடந ்து தென் ஆப்பிரிக்கா மூச்சு விட்டது.

அடுத்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொண்ட இலங்கை முதலில் பேட் செய்து ஜெயசூரியாவின் அதிரடி 115 ரன்கள், ஜெயவர்தனேயின் 82 ரன்களால் 303 ரன்களைக் குவித்தது. மேற்கிந்திய அணி 190 ரன்களுக்குச் சுருண்டது. ஜெயசூரியா 3 விக்கெட்டுகள் ஆட்டநாயகன்.

அடுத்த ஆட்டம் இங்கிலாந்துடன், இலங்கை 235 ரன்களே எடுத்தது. இங்கிலாந்து முரளிதரன் பந்தில் 58 ரன்களில் பீட்டர்சனை இழந்தது. அதன் பிறகு தில்ஹாரோ பெர்னாண்டோ, ப ிளின ்டாஃப், காலிங்வுட் ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்த 34-வது ஓவர் முடிவில் 134/6 என்று ஆனது இங்கிலாந்து. ஆனால் அதன் பிறகு நிக்சன் என்பவரும் ரவி பொபாராவும் இணைந்து சவாலாக ஆடி ஸ்கோரை 220 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். பிறகு ஆட்டத்தின் கடைசி பந்து இங்கிலாந்து 233 ரன்கள் பொபாரா அடித்தால் வெற்றி ஆனால் அவரை ஃபெர்ணாண்டொ பவுல்டு செய்தார். இலங்கை அபார வெற்றி பெற்றது.

அடுத்த சூப்பர் 8 போட்டியில் இலங்கை, நியூஸீலாந்தை எளிதில் வீழ்த்தியது. அதன் பிறகு ஆஸ்ட்ரேலியாவுடன் தோற்று, அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதியில் நியூஸீலாந்தைச் சந்தித்த இலங்கை ஜெயவர்தனேயில் அதிரடி சதத்துடன் 289 ரன்களைக் குவிக்க நியூஸீலாந்து முரளிதரனிடம் சுருண்டு 208 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது.

இறுதியில் ஆஸ்ட்ரேலியாவை எதிர்கொண்டது இலங்கை, கில்கிறிஸ்ட் என்ற தனி நபர் மட்டையடி சுழற்றலுக்கு விடையற்று தோல்வி தழுவியது இலங்கை. 72 பந்துகளில் சதமெடுத்த கில்கிறிஸ்ட் மேலும் 32 பந்துகநின்று மேலும் 49 ரன்களை அடித்து நொறுக்கி வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார் 38 ஓவர்கள் போட்டியான இதில் ஆஸ்ட்ரேலியா 281 ரன்கள் குவித்தது. கிட்டத்தட்ட 2003 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு கிடைத்த அதே உதைதான் இலங்கையும் பெற்றது.

இலக்கைத் துரத்தி இலங்கை 36 ஓவர்களில் 215 ரன்களுக்குச் சுருண்டது. பாண்டிங் ஹேட்ரிக் உலகக் கோப்பைகளை வென்றார்.

2011 உலகக் கோப்பையில் வாய்ப்புகளும் சில புள்ளிவிவரங்களும்:

1975 முதல் 2007ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள இலங்கை 57 போட்டிகளில் 25-இல் வென்று 30-இல் தோற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தன் சொந்த மண்ணிலேயே அதிக போட்டிகளை விளையாடுவதால் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமக உள்ளது. அந்த ஆட்டக்களங்களில் அவர்கள் ராஜாதான்.

ஆனால் பொதுவாக ஒருநாள் கிரிக்கெட்டில் முன்னிலை அணிகளுக்கு எதிராக வெற்றிகளை விட தோல்விகளே அதிகம். மொத்தம் 690 ஒரு நாள் சர்வதேச பொட்டிகளில் 290-இல் வென்று 300-இல் தோல்வி தழுவியுள்ளது இலங்கை. 290வெற்றிகளில் 174 போட்டிகளை இலங்கையில் ஆடியுள்ள அந்த அணி 109 வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனவே இலங்கையில் அந்த அணியை வீழ்த்துவது கடினம்.

சமீபத்தில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரக ஆஸ்ட்ரேலிய மண்ணில் முதன் முதலாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்த இலங்கை அணி. 2010/11 ஆம் ஆண்டுகளில் 25 ஒருநாள் போட்டிகளில் 17 போட்டிகளில் வெற்றி பெற்று பலமாகத் திகழ்கிறது.

சங்கக்காரா தலைமையில் 2009ஆம் ஆண்டு முதல் 36 ஒருநாள் போட்டிகளில் 21 போட்டிகளில் வென்று 12 போட்டிகளில் மட்டுமே தோல்வி தழுவியுள்ளது.

சொந்த நாடு என்ற வகையில் பெரும் அபாயமான அணி இலங்கை அணிதான். இந்த அணியில் துவக்கத்தில் தில்ஷான் களமிறங்குவது ஒரு சேவாகின் பலத்தை அந்த அணிக்குக் கொடுத்துள்ளது. ஆனால் மற்ற முனையில் தரங்காவெல்லாம் நம்ப முடியாது.

ஆனால் மிடில் ஆர்டரில் சங்கக்காரா பலமாக உள்ளார். ஜெயவர்தனே சோபிக்காமல் போனால் மிடில் ஆர்டர் சற்றே பலவீனமாகப் போய்விடும், ஆனால் பின் களத்தில் அஞ்சேலோ மேத்யூஸ், கபுகேதரா, பெரெரா போன்ற ஆல்ரவுண்டர்கள் கைக் கொடுப்பார்கள். இதனால் அந்த அனி சமரவீராவை அல்லது சமர சில்வாவை நடுக்களத்தில் பயன்படுத்தும் வாய்ப்புக் குறைவு. சமரவீரா அல்லது சம்ர சில்வா என்று ஒருவரைத்தான் பயன்படுத்த முடியும்.

இலங்கை மிடில் ஆர்டரை வீழ்த்தினால் எதிரணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. பந்து வீச்சில் முத்தையா முரளிதரன் தனது கடைசி சர்வதேச போட்டிகள் இத்துடன் முடிவடைகின்றது என்று கூறியுள்ளார் எனவே இலங்கை அணி முரளிதரன் ஓய்வுக்கு ஒரு நல்ல பரிசை அளிக்க விரும்பும். இவர் தவிர, அஜந்தா மெண்டிஸ், மலிங்கா, பெரெரா, பெர்ணாண்டோ ஆகியோர் அவர்கள் மண்ணில் சிறப்பாக வீசக்கூடியவர்கள்.

காலிறுதியில் இந்த அணி ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதில் ஐயமில்லை. சங்கக்காராவும் இந்த உலகக் கோப்பையை வெல்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

எனவே இலங்கையை இந்த உலகக் கோப்பையில் அவர்கள் மண்ணில் வீழ்த்தும் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெறும் என்று கூட நாம் கூறிவிட முடியும்.

அந்த அளவுக்கு இந்த ஆட்டக்களங்களில் அது பலமான அணியாகும். எனவே இலங்கை இந்த முறை சாம்பியனாவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

காதலில் விழுந்த ஷிகார் தவான்… இன்ஸ்டாகிராமில் அறிவித்து மகிழ்ச்சி!

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

Show comments