Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லில்லி, தாம்சனைக் கிழித்த மேற்கிந்திய அதிரடி வீரர் ராய் பிரெடெரிக்ஸ்

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2010 (16:04 IST)
webdunia photo
FILE
மேற்கிந்திய அணியின் பயங்கர அதிரடி வீரர்களில் ராய் பிரெடெரிக்ஸ் குறிப்பிடத்தகுந்தவர். துவக்க வீரர், இடது கை பேட்ஸ்மென். இவர் 1975ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்ட்ரேலிய அதிவேகப்பந்து வீச்சாளர்களான டெனிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன் ஆகியோரது பந்து வீச்சை உலகின் அதிவேக ஆட்டக்களமான பெர்த்தில் வெளுத்துக் கட்டியது கிரிக்கெட் உலகில் இன்றும் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸாக பேசப்பட்டு வருகிறது.

ராய் பிரெடெரிக்ஸ் இவர் 1968ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில்தான் மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக கேரி சோபர்ஸ் தலைமையில் தன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸிலேயே 76 ரன்கள் எடுத்தார் ராய் பிரெடெரிக்ஸ். அப்போதும் ஆஸ்ட்ரேலியாவில் மெக்கன்சி என்ற அச்சமூட்டும் வேகப்பந்து வீச்சாளர் வீசிவந்தார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மெக்கன்சி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் பிரெடெரிக்ஸ் 47 ரன்கள் எடுத்தது அவருக்கு நல்ல துவக்கமாக அமைந்தது.

அப்போது முதல் பிரெடெரிக்ஸ் என்ற பெயர் கிரிக்கெட் வட்டாரங்களில் அச்சுறுத்தலின் மறு பெயராக இருந்து வந்தது.

அதன் பிறகு சரியாக 7 ஆண்டுகள் கழித்து பெர்த் மைதானத்தில் இன்றைய தினத்தில் அவர் இந்த இன்னிங்ஸை விளையாடினார்.

முதல் நாள் ஆஸ்ட்ரேலியா 317/7 என்று இருந்து 2ஆம் நாளில் 329 ரன்களுக்கு சுருண்டது. இயன் சாப்பல் அதிகபட்சமாக 156 ரன்கள் எடுத்தார்.

அன்றைய தினம் உணவு இடைவேளைக்கு முன் மேற்கிந்திய அணி களமிறங்கியது. ஓவருக்கு அப்போது ஆஸ்ட்ரேலியாவில் மட்டும் 8 பந்துகள் வீசும் முறை நடைமுறையில் இருந்தது.

8 பந்துகள் ஓவர்முறையில் 14 ஓவர்கள் உணவு இடைவேளைக்கு முன் வீசப்பட்டது. பிரெடெரிக்ஸ், ஜூலியன் களமிறங்கினர்.

ஆனால் லில்லி, தாம்சன் என்று பெரிதாக அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில் ராய் பிரெடெரிக்ஸ், ஆஸ்ட்ரேலிய கேப்டன் இயன் சாப்பலுக்கு அச்சுறுத்தலை அளிக்கத் துவங்கினார்.

தலைக்கவசமெல்லாம் இல்லை. எதிரில் வீசுபவர்களோ டெனிஸ் லில்லி, தாம்சன், கேரி கில்மர், மாக்ஸ் வாக்கர். இதில் மாக்ஸ் வாக்கர் மட்டுமே குறைந்த வேகம்.

முதல் பந்து முதல் பிரெடெரிக்ஸ் பவுண்டரிகளை விளாசத் துவங்கினார். பவுன்சர்கள் எல்லாம் அருமையான ஹுக், புல் ஷாட்களாக எல்லைக்கோட்டைத் தாண்டிக் கொண்டிருந்தது. பிரெடெரிக்ஸ் 33 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.

அதன் பிறகு அனாயாச மட்டைச் சுழற்றல் தொடர்ந்தது. 71 பந்துகளில் சதம் எடுத்தார் பிரெடெரிக்ஸ். அதன் பிறகு 145 பந்துகளில் 27 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 169 ரன்கல் எடுத்து லில்லி பந்தில்தான் ஆட்டமிழந்தார். ஆனால் அதற்குள் ஸ்கோர் 30 ஓவர்களில் 258 ரன்களை எட்டியது.

டெனிஸ் லில்லி 20 ஓவர்கள் வீசி 123 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஜெஃப் தாம்சன் 17 ஓவர்களில் 128 ரன்கள் கொடுத்தார். உலகின் இரண்டு மிகப்பெரிய வீச்சாளர்களான டெனிஸ் லில்லி, தாம்சன் அன்று அடி என்றால் என்ன என்று பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள்.

ஆனால் ஆஸ்ட்ரேலியாவுக்கு அதிர்ஷ்டம் என்னவெனில் விவியன் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை சொற்ப ரன்களுக்கு வீழ்த்திவிட்டனர். கிளைவ் லாய்ட் 186 பந்துகளில் 22 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என்று 149 ரன்களை விளாசினார்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய அணி 350 ரன்களை விளாசியது. லாய்ட் மறுநாள் வந்துதான் பிரெடெரிக்ஸ் அடியை மீண்டும் பின்பற்றி வெளுத்துக் கட்டினார். 95 ஓவர்களில் மேற்கிந்திய அணி 585 ரன்களை விளாசியது.

தொடர்ந்து 255 ரன்கள் பின் தங்கியிருந்த ஆஸ்ட்ரேலியா மறுநாள் களமிறங்கியபோது ரிக் மெக்காஸ்கர், ஆலன் டர்னர், இயன் சாப்பல், இயன் ரெட்பாத் ஆகியோர் விக்கெட்டுகளை ஆண்டி ராபர்ட்ஸ் வீழ்த்த 45/4 என்று ஆனது ஆஸ்ட்ரேலியா ஆனால் அதன் பிறகு கிரெக் சாப்பல், ரோட்னி மார்ஷ் இணைந்து மேலும் சேதமில்லாமல் அன்று 104/4 என்று முடித்தனர்.

ஆனால் மறுநாள் காலை கிரெக் சாப்பலை வீழ்த்தினார் ராபர்ட்ஸ்.ஆஸ்ட்ரேலியா 40 ஒவர்களில் 169 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. தொடர் 1-1 என்று டிரா ஆனாலும் அதன் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட மேற்கிந்திய அணியினால் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் டெஸ்ட் தொடரை 1-5 என்று தோற்றது.

இந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ராய் பிரெடெரிக்ஸை ஆஸ்ட்ரேலியா ஒருவாறாக கட்டுப்படுத்தத் தொடங்கி வெற்றி கண்டது அதன் பிறகு ஒரேயொரு அரைசதம் மட்டுமே அவரால் அடிக்க முடிந்தது.

ஆனால் இதே தொடரில்தான் விவ் ரிச்சர்ட்ஸ் முதன் முதலாக துவக்க வீரராகக் களமிறங்கினார். அதில் 103 பந்துகளில் 98 ரன்களை விளாசினார்.

இன்றைய தினம் பெர்த் மைதானத்தில் டெனிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன் பந்து வீச்சிற்கு நடந்த அடிதடித் திருவிழா எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரையும் நிலைகுலையச்செய்யும் ஒன்று.

ஆனால் டெனிஸ் லில்லியும், தாம்சனும் சாதாரணப்பட்டவர்கள் அல்லவே, அதனால் அவர்கள் அந்த துர்கனவிலிருந்து மீண்டு வந்து மேற்கிந்திய அணியை முறியடித்தனர். டெஸ்ட் வாழ்வில் ராய் பிரெடெரிக்ஸின் அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகவும் இந்த அதிசய இன்னிங்ஸ் திகழ்ந்தது. 59 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பிரெடெரிக்ஸ் 4,334 ரன்களை 42.49 என்ற சராசரியில் எடுத்துள்ளார் இதில் 8 சதங்களும் 26 அரைசதங்களும் அடங்கும். சராசரியை வைத்து திறமையை எடைபோட முடியாது.

இன்றைய கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல், விரேந்திர சேவாக் ஆகியோர் ராய் பிரெடெரிக்ஸ் ரக கிரிக்கெட் வீரர்கள்தான் என்பதில் ஐயமில்லை.

அதன் பிறகு 29 ஆண்டுகள் கழித்து மெல்போர்ன் மைதானத்தில் முதல்நாள் ஆட்டத்தில் விரேந்திர சேவாக் அது போன்ற ஒரு அதிர்ச்சி அதிரடியை நிகழ்த்திக் காட்டினார். சேவாக் 233 பந்துகளில் 25 பவுண்டரி 5 சிக்சர்கள் சகிதம் 233 பந்துகளில் 195 ரன்களை விளாசினார். சதத்தை 144 பந்துகளில் எட்டிய சேவாக் அதன் பிறகு மட்டையடி அடித்து 89 பந்துக்ளில் 95 ரன்களை விளாசி ஸ்டீவ் வாஹ் அணிக்கு அதிர்ச்சியளித்தார். இந்த இன்னிங்சை ராய் பிரெடெரிக்ஸ் இன்னின்ஸுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார் கிரிக்கெட் எழுத்தாளர் பீட்டர் ரீபக்.

மீண்டும் பெர்த் மைதானத்தில் கடந்த ஆண்டு கிறிஸ் கெய்ல் 82 பந்துகளில் அதிரடி சதம் எடுத்த இன்னிங்ஸ் ஆகியவை ராய் பிரெடெரிக்ஸ் இன்னிங்ஸுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

Show comments