சேவாக், சச்சின் டெண்டுல்கர், ஜாகீர் கான், சுரேஷ் ரெய்னா இல்லாத தோனி தலைமை இந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணியை இன்று கிங்ஸ்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
webdunia photo
WD
2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விகள் இன்னமும் தன் மனதில் அழியாமல் இருந்து வருகிறது என்று கேப்டன் தோனி கூறியுள்ளார். எனவே அந்த மோசமான நினைவுகளை அழிப்பதில் அதிக முனைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2007 உலகக் கோப்பைக்கு முன்பு திராவிட் தலைமையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அங்கு நடைபெற்ற 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-4 என்று படுதோல்வி தழுவியது.
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் 20 ஒரு நாள் போட்டிகளை விளையாடி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 15 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. மேற்கிந்திய அணிக்கு எதிரான் ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய வெற்றிகளும் சிறப்பாக இல்லை.
இரு நாடுகளும் 90 போட்டிகளில் விளையாடியுள்ளன இதில் இந்தியா 35 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 55 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது.
2002 ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த கேப்டன் கங்கூலியின் தலமையின் கீழ் சென்ற இந்திய அணி கார்ல் ஹூப்பர் தலைமை மேற்கிந்திய அணியை ஒரு நாள் தொடரில் 2-1 என்று வெற்றி பெற்றதுதான் இந்திய அணி மேற்கிந்திய மண்ணில் பெற்றுள்ள ஒரே தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகியோர் இல்லாமலே அஜந்தா மென்டிஸ் எனும் அச்சுறுத்தலை வெற்றிகரமாக முறியடித்து இலங்கையில் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய அனுபவம் தோனியின் பின்புலத்தில் உள்ளது. எனவே இந்த அணியை மோசமாக எடைபோட்டால் மேற்கிந்திய அணி 4 போட்டிகளையும் தோற்பது உறுதியாகிவிடும்.
ஆனால் இந்திய அணி சற்றே சுரத்தில்லாமல் உள்ளது, மேற்கிந்திய அணியில் சற்று உற்சாகம் கூடியுள்ளது. ஆனால் இருபதுக்கு 20 வெற்றியை வைத்து ஒரு நாள் போட்டியில் எடைபோடுவது ஆபத்தான விஷயம். ஏனெனில் நியூஸீலாந்து பயணத்தில் 2 இருபதுக்கு20 போட்டியிலும் இந்தியா தோற்றது. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் 3-1 என்று நியூசீ.யை அபாரமாக வென்றுள்ளது இந்திய அணி.
webdunia photo
FILE
2003 உலகக் கோப்பை போட்டிகளில் கலக்கிய ஆஷிஷ் நெஹ்ரா மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இனிமேல் அவர் டெஸ்ட் போட்டிகளில் தேற்வாவது கடினம், எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய ஒரு நாள் மற்றும் 20-20 அணியில் ஒரு நிரந்தர இடத்திற்காக அவர் முனைவார். இவரது பந்து வீச்சு எடுபட்டால் இந்திய அணி வெற்றி சுலபமாகும்.
அதேபோல் பேட்டிங்கில் கம்பீர், தோனி, யுவ்ராஜ், யூசுஃப் பத்தான், ஜடேஜா, ஹர்பஜன், ஓரளவிற்கு பத்ரிநாத் ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. பந்து வீச்சில் ஆர்.பி.சிங், நெஹ்ரா, ஹர்பஜன், பிராக்யன் ஓஜா ஆகியோரை மேற்கிந்திய அணி மோசமாக எடை போட முடியாது.
மேற்கிந்திய அணி லென்டில் சிம்மன்ஸை எடுக்காதது இந்திய அணிக்கு நல்லதாக அமைந்துள்ளது. ஆனால் டிவைன் பிராவோவின் சகோதரர் டேரன் பிராவோ என்பவரை புதிதாக சேர்த்திருக்கிறது மேற்கிந்திய தேர்வுக்குழு. இவரும் அவரைப்போலவே திறமையுடையவராக இருந்தால் இந்தியாவிற்கு தலைவலி அதிகரிக்கும்.
ஃபிடல் எட்வர்ட்ஸ் அணியில் இல்லாததும் இந்தியாவிற்கு சாதகமான விஷயம். மேற்கிந்திய அணியின் சீரற்ற தன்மை, நம்பிக்கை வைக்கமுடியாத, கணிக்க முடியாத தன்மைகளை இந்தியா நன்றாக பயன்படுத்தினால் அந்த மண்ணில் இந்தியாவின் மோசமான நினைவுகளை வெற்றிகளின் மூலம் துடைத்தெறியலாம்.
ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.00 மணியளவில் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.