டேல் ஸ்டெய்னும் "டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்துவதில் நேரத்தை வீணடிப்பதில் பயனில்லை" என்று கூறி தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
3 வது டெஸ்ட் போட்டியில் 130/6 என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவை தோனி பிடியிலிருந்து நழுவவிட்டார் என்ற விமர்சனம் பலதரப்பிலிருந்தும் தொடுக்கப்படுகிறது. இது நியாயமற்ற ஒரு விமர்சனம்.
ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸும், டீவிலியர்ஸும் இரண்டரை மணிநேர ஆட்டத்தில் 225 ரன்களைக் குவிக்க முடிந்ததால்தான் 3ஆம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியில் இந்திய அணி மீண்டும் களமிறங்க வேண்டியிருந்தது. அந்த வேகத்தில் ரன் எண்ணிக்கை உயர்வதை கட்டுப்படுத்தி 125 ரன்களை இந்தியா கட்டுப்படுத்தியிருந்தால் அன்றைய தினம் முழுதும் தென் ஆப்பிரிக்கா பேட் செய்திருக்கும். கடைசி 2 நாட்கள் என்பதில் டிரா செய்ய ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஏனெனில் செஞ்சூரியன் பிட்ச் பேட்டிங் பிட்சாக மாறியிருந்தது.
அதே போல் 3-வது டெஸ்ட் போட்டியில் ஜாக் காலிஸ் நிற்கிறார் பவுச்சர் களமிறங்கி ஓரளவுக்கு பாசிடிவாக விளையாடத் துவங்கினார். இந்த நேரத்தில் தோனி விடாப்பிடியாக ஆக்ரோஷமாக நெருக்கமான ஃபீல்ட் செட் செய்து அது தோல்வியில் போய் முடிந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதனால்தான் தென் ஆப்பிரிக்க டிக்ளேரைத் தள்ளிப்போடும் பாதுகப்பு முறைக்கு வந்தார் தோனி. ஏனெனில் பிட்சில் ஸ்பின்னிற்கு ஒரு முனையில் மட்டும் லேசான ஆதரவு இருந்தது. அதுவும் பந்துகள் மெதுவாகவே திரும்பின. இதனால் தோனியைக் குற்றம் சொல்வதில் பயனில்லை.
தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் 270 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோதே டிக்ளேர் செய்து இந்திய அணியை 4ஆம் நாளே களமிறக்கியிருந்தால் ஒரு வெற்றி வாய்ப்பை பார்த்திருக்கலாம்.