Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை வெல்லுமா? நாளை டெல்லி டெஸ்ட்!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (16:32 IST)
இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நாளை டெல்லி, பிரோஷா கோட்லா மைதானத்தில் துவங்குகிறது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மொஹாலி டெஸ்டின் குதூகல நினைவுகளுடன் இந்தியா களமிறங்குகிறது.

அனில் கும்ளே உறுதியாக விளையாடுவாரா என்பது நாளை போட்டி துவங்கும் முன்னர்தான் தெரியும். அப்படி அவர் விளையாடினால் மொஹாலியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கிய அமித் மிஷ்ரா இடம்பெறமாட்டார் என்று அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஹர்பஜன் லேசாக காயமடைந்துள்ளதாக தெரிவித்த பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன், அணிச் சேர்க்கை குறித்து தற்போது எதுவும் கூறுவதற்கில்லை என்று கூறியுள்ளார். ஆனால் கும்ளே விளையாடினால் அமித் மிஷ்ரா இடம்பெறமாட்டார் என்பது மட்டும் இப்போதைக்கு தெரிகிறது.

டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் இந்தியா கடைசி 7 டெஸ்ட் போட்டிகளை தொடர்ச்சியாக வென்றுள்ளது. ஆஸ்ட்ரேலியா இந்த மைதானத்தில் 1959ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. 1996ஆம் ஆண்டு தோல்வி தழுவினர்.

அனில் கும்ளேயை பொறுத்தவரை இந்த மைதானம் அதிர்ஷ்டம் நிரம்பிய மைதானமாகும். 6 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பேட்ஸ்மென்களைப் பொறுத்தவரை கங்கூலி, திராவிட், லக்ஷ்மண், சச்சின், தோனி ஆகியோர் இங்கு ரன்குவிப்பு செய்துள்ளனர். சச்சின் தவிர மேலே குறிப்பிட்ட அனைவரும் டெல்லியில் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளனர். சச்சினும் இங்கு 7 டெஸ்ட் போட்டிகளில் 44 ரன்கள் சராசரியுடன் 528 ரன்கள் குவித்துள்ளார். சேவாக் தன் சொந்த மண்ணில் 2-வது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார்.

ஆஸ்ட்ரேலிய அணிக்கு இந்த டெஸ்ட் ஏகப்பட்ட பிரச்சனைகளை கொடுக்கும் என்றாலும், பூவா தலையா வென்று விட்டால் முதல் இன்னிங்சில் ரன்களை அதிகம் குவித்து இந்தியாவை சற்றே மிரட்டலாம். ஆனால் இந்திய பேட்ஸ்மென்கள் இப்போது நன்றாக விளையாடி வருவதால் அதுவும் சாத்தியமாகாமல் போகலாம். ஆனால் தோல்வியிலிருந்து தப்பிக்கும் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை ஆஸி. எட்டினால் அதுவே அவர்களுக்கு போதுமானது.

மாறாக இந்தியா பூவ ா- தலையா வென்றால் ஆஸ்ட்ரேலிய அணி மீண்டும் திணறி தோல்வி தழுவ நேரிடலாம். இதனால் இந்திய அணிக்கு பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தங்கள் பக்கம் கொண்டு வர அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

காலையில் பனி மூட்டம் இருக்குமானால் ஆட்டம் தாமதமாக துவங்கும். ஆனால் மாலையில் விரைவில் இருட்டத் தொடங்கினால் ஒரு நாளில் 90 ஓவர்கள் வீசுவது கடினமான செயலாகிவிடும். இது இந்த ஆட்டத்தின் முடிவில் ஒரு குறிப்பிடத் தகுந்த பங்கு வகிக்கும் என்று கருத இடமுண்டு.

ஆஸ்ட்ரேலிய அணியில் ஸ்டூவர்ட் கிளார்க் முழு உடற்தகுதி பெற்று விளையாடுகிறார். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் கிரேக் ஒயிட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கிரெஜா என்ற ஆஃப் ஸ்பின்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி. அணி : ஹைடன், கேடிச், பாண்டிங், மைக்கேல் கிளார்க், மைக் ஹஸ்ஸி, பிராட் ஹேடின், ஷேன் வாட்சன், மிட்செல் ஜான்சன், ஸ்டூவர்ட் கிளார்க், ப்ரட் லீ, கிரெஜா.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்ட்ரேலிய அணி எதனையும் எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மீண்டும் ஒரு விறுவிறுப்பான டெஸ்ட் போட்டியை எதிர்பார்க்கலாம்.

புள்ளி விவரங்கள்:

இந்தியா இந்த மைதானத்தில் விளையாடிய 29 டெஸ்ட் போட்டிகளில் 10-இல் வென்று 6-இல் தோற்றுள்ளது. 13 போட்டிகள் டிரா ஆகியுள்ளது. ஆஸ்ட்ரேலியா இங்கு இது வரை விளையாடியுள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் 1-ல் வென்று, 2-இல் தோற்றுள்ளது. 2 டெஸ்ட் டிரா ஆகியுள்ளது.

1993- ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா இங்கு விளையாடியுள்ள 7 டெஸ்ட் போட்டிகளில் அனைத்தையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கடைசியாக இங்கு 1987-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தோல்வி தழுவியது. 276 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிய மேற்கிந்திய அணி 111/4 என்று சரிய இருந்த வேளையில் மாஸ்டர் பேட்ஸ்மென் விவ் ரிச்சர்ட்ஸ் களமிறங்கி 111 பந்துகளில் 109 ரன்களை விளாசி வெற்றி பெற வைத்தார். இந்த மைதானத்தில் வெற்றி பெற்ற அதிகபட்ச 4-வது இன்னிங்ஸ் ரன் எண்ணிக்கை இதுவே.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் பந்திலேயே விக்கெட்.. பேட் கம்மின்ஸ் பந்தில் கருண் நாயர் அவுட்.

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

Show comments