Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்க அணியின் பலமும் பலவீனங்களும்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2011 (13:44 IST)
webdunia photo
FILE
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் கிரேம் ஸ்மித் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் ஒன்று. பி-பிரிவில் இந்த அணிக்கு இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அண ிகளி டமிருந்து கடும் சவால்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.

முந்தைய உலக் கோப்பை போட்டிகள்!

1992 ஆம் ஆண்டு கெப்ளர் வெஸல்ஸ் தலைமையில் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதன்முதலாக பங்கேற்ற தென் ஆப்பிரிக்க அணி அனைத்து அணிகளுக்கும் கடும் நெருக்கடி கொடுத்து அரையிறுதி வரை வந்தது.

ஆனால் அரையிறுதியில் மிக மோசமான டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறையினால் 3 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்தால் இறுதியில் நுழையலாம் என்ற நிலையில் மழைக்குப் பிறகு 1 பந்து 22 ரன்கள் என்று அபத்தமாக இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு பரிதாபமாக தோல்வி தழுவியது தென் ஆப்பிரிக்கா.

இதில் வேடிக்கை என்னவென்றால் மழைக்குப் பிறகு ஆட்டம் துவங்கியபோது இந்த அபத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு ஒன்றரை மணிநேரம் வெயில் அடித்தது. அப்போது பிடித்த துரதிர்ஷ்டம் அந்த அணியை தொடர்ந்து அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் துரத்தியது.

1996 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்திய உலகக் கோப்பை போட்டிகளில் பலமிழந்த மேற்கிந்திய அணிக்கு எதிராக லாரா, ரோஜர் ஹார்ப்பர் ஆகியோரின் தனிப்பட்ட அபார ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்கா தோல்வி தழுவி வெளியேறியது. இப்போது அணித்தலைமை ஹேன்சி குரோனியே தலைமையில் இருந்தது.

பிறகு 1999ஆம் ஆண்டும் குரோனியே தலைமையில் விளையாடிய தென் அப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்ட்ரேலியா டை செய்தாலே இறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலையில் 213 ரன்கள் என்ற குறைந்த இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா டொனால்டின் முட்டாள்தனமான ரன் அவுட்டினால் டை செய்து வெளியேறியது.

webdunia photo
FILE
2003 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்திலும் மழை குறுக்கிட டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு எது என்பதை தவறாகப் புரிந்து கோண்ட தென் ஆப்பிரிக்கா ஸ்கோரை டை செய்து வெளியேறியது. உண்மையில் கடைசி பந்தில் பவுச்சர் சிக்சர் அடித்தார். ஆனால் இலக்கு என்று டக்வொர்த் லூயிஸில் கொடுக்கமாட்டார்கள். கணக்கீட்டின் படி கொடுக்கப்படும் ஸ்கோரைக் காட்டிலும் ஒரு ரன் கூட எடுத்தால் வெற்றி என்று புரிந்து கொள்ளவேண்டும், ஆனால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் அசட்டுத்தனமாக வெளியேறியது.

2007 ஆம் ஆண்டு நன்றாக வந்து கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா கடைசியில் முக்கியப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக அஷ்ரஃபுலின் அபார ஆட்டத்திற்கு தோல்வி தழுவி தகுதி பெறாமல் போனது.

இதுதான் தென் ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை வரலாறு. ஆனால் ஒட்டுமொத்தமாக தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் கிரிக்கெட்டில் மற்ற அணிகளைக் காட்டிலும் சிறப்பாகவே வெற்றிகளைக் குவித்துள்ளது. அதன் தோல்விகளை விட வெற்றிகளே அதிகம்.

2011 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியின் வாய்ப்புகள்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் 40 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா 25 போட்டிகளில் வெற்றி பெற்று 13-இல் தோல்வி தழுவி இரண்டு போட்டிகளில் டை செய்துள்ளது. இந்த இரண்டு டைகள்தான் இரண்டு உலகக் கோப்பைகளில் அதன் வாய்ப்பை பறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா பலமான அணியுடன் களமிறங்குகிறது. கிரேம் ஸ்மித் 165 ஒரு நாள் போட்டிகளில் 39 என்ற சுமாரான சராசரியுடன் 6097 ரன்களை எடுத்துள்ளார். 8 சதங்கள் 43 அரை சதங்கள். ஸ்ட்ரைக் ரேட் 82. அதிகபட்ச ஸ்கோர் 141.

இவர் திறமைக்கேற்ப விளையாடுவதில்லை என்ற விமர்சனம் இவர் மீது உண்டு. ஆனாலும் அபாயமான வீரர். சிறந்த கேப்டன், ஃபீல்டிங் உத்தி, பந்து வீச்சு மாற்றம் ஆகியவற்றில் திறமை படைத்தவர். இந்த உலகக் கோப்பையில் இவர் தனது திறமையைக் கூட்டினால் தென் ஆப்பிரிக்கா பயனடையும்.

இவருடன் துவக்கத்தில் களமிறங்கும் ஹஷிம் அம்லாவுக்கு இது முதல் உலகக் கோப்பை. ஆனால் கவனிக்கப்படவேண்டிய வீரர்களில் இவர் ஒருவர் என்றால் அது மிகையாகாது. இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அபாரத் திறமையுடன் தற்போது விளையாடி வருகிறார். இவரது ஃபார்ம், அல்லது ஃபார்ம் இன்மை தென் ஆப்பிரிக்காவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு இவர் அந்த அணியில் முக்கிய வீரர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.

webdunia photo
FILE
ஒருநாள் கிரிகிக்கெட்டில் மைக் ஹஸ்ஸியைக் காட்டிலும் அதிக சராசரியான 59.88 என்ற சராசரியுடன் இவர் களமிறங்குகிறார். அபாயகரமான வீரர். அதிகபட்சமாக 140 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 93% வைத்துள்ளார்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவின் வெற்றி தோல்விகளை தனி நபராகத் தீர்மானிக்கும் ஒரு வீரர் உண்டு என்றால் அது ஜாக் காலிஸைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

இவர் விளையாடும் கடைசி உலகக் கோப்பை இது. இந்திய மண்ணில் 2 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பயங்கரமான ரன் குவிப்பிலும் அதிரடி திறமைகளையும் காட்டியவர். இந்திய பிட்ச்களில் இவரது ஆட்டம் தென் ஆப்பிரிக்க அணிக்கு 200% பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம். எதிரணியினர் இவரது ஆட்டத்தை விவாதிக்காமல் களமிறங்க முடியாது. 307 ஒரு நாள் போட்டிகளில் 45.84 என்ற சராசரியுடன் 11,002 ரன்களைக் குவித்துள்ள ஜாக் காலிஸ் 17 சதங்களையும், 80 அரைசதங்களையும் எடுத்துள்ளார்.

முக்கியமாக பந்து வீச்சில் இவர் 259 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். ஓவர் ஒன்றுக்கு 4.8 ரன்களையே இவர் விட்டுக் கொடுத்துள்ளார். கேரி சோபர்சுக்குப் பிறகு ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் என்ற பெயர் எடுத்துள்ள இவருக்காகவாவது தென் ஆப்பிரிக்கா இந்த உலகக் கோப்பையை வெல்ல போராடும்.

இவர்கள் தவிர ஏ.பி.டீவிலியர்ஸ் ஒரு அபாய வீரர், பல்திறமைப் படைத்தவர். இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிரடி இன்னிங்ஸ்களை விளையாடி அனுபவம் பெற்றவர்.

அடுத்ததாக ஜான் பால் டுமினி. இவரும் சமீபமாக நமது ரெய்னா போல் பின்களத்தில் இறங்கி தனது புது வகை ஷாட்களினால் விரைவு ரன் குவிப்பு செய்பவர். ஆல்ரவுண்டர் இடத்தில் டூ பிளெஸிஸ் என்பவர் வந்துள்ளது இந்த அணிக்கு கூடுதல் பலம் ஏனெனில் இவர் அபாரமான ஒரு ஃபீல்டர்.

பந்து வீச்சில் இரண்டு மேட்ச் வின்னர்களைக் கொண்ட ஒரே அணி இதுவாகத்தான் இருக்கும், டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோர் சமீபமாக வீசி வரும் முறை உலகின் எந்த ஒரு பிட்சாக இருந்தாலும் எந்த ஒரு பேட்டிங் வரிசையாக இருந்தாலும் திணறலுக்குள்ளாவதைத் தவிர வேறு வழியில்லை.

இவர்கள் தவிர சொட்சோபி உள்ளார். இதில் பலவீனமான இணைப்பு வெய்ன் பார்னெல்தான். ஜோஹன் போத்தா சிக்கனமாக வீசக்கூடியவர். இவரது நடு ஓவர்கள் மிகவும் முக்கியமானது.

எனவே ஸ்மித், அம்லா, காலிஸ், டீவிலியர்ஸ், டுமினி, ஸ்டெய்ன், மோர்கெல், சொட்சோபி, போத்தா ஆகிய 9 மேட்ச் வின்னர்களைக் கொண்டுள்ளது இந்த அணி.

ஆனால் இந்த அணியின் மிகப்பெரிய பலவீனமென்னவெனில் மிகவும் நெருக்கடியான தருணங்களில் வெற்றி வாய்ப்பை பொதுவாக எதிரணிக்கு விட்டுக் கொடுக்கும் போக்கு உள்ளதே.

சமீபத்தில் கூட ஒரு போட்டியில் ஷாஹித் அஃப்ரீடியும், அப்துல் ரசாக்கும் வெற்றி பெற முடியாத இடத்திலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

அதேபோல் மிகவும் சமீபத்தில் யூசுப் பத்தான் அதிரடி சதம் எடுத்து வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தார். ஆனால் மற்ற நாட்களில் இதுபோன்ற நெருக்கடி போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா தோற்றுள்ளது.

இந்திய ஆட்டக்களங்களில் அதிரடித் துவக்கம் தேவை. இ தனால ் ஜாக் காலிஸையும், அம்லாவையும் துவக்கத்தில் களமிறக்கிப்பார்க்கலாம். அல்லது டுமினியைக் களமிறக்கி ஒரு சூழ்ச்சி செய்து பார்க்கலாம்.

சிறந்த பேட்டிங், பந்து வீச்சு வரிசை, ஆல்ரவுண்டர்கள் , ஃபீல்டிங் திற்மையுடன் தென் ஆப்ப்ரிக்க அணி களமிறங்குகிறது. இந்த அணிக்கு அபாயம் காலிறுதி ஆட்டம்தான், இலங்கையையோ, ஆஸ்ட்ரேலியாவையோ, பாகிஸ்தானையோ எதிர்கொள்ள நேரிட்டால் இந்த அணி சோடை போவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆனாலும் அணிச் சேர்க்கையை வைத்துப் பார்க்கும் போது அரையிறுதி வரை இந்த அணி முன்னேறும் என்று கூற வாய்ப்புண்டு.

தென் ஆப்பிரிக்க அணி:

கிரேம் ஸ்மித், அம்லா, ஜாக் காலிஸ், ஏ.பி. டிவிலியர்ஸ், ஜே.பி. டுமினி, இங்ரம், ஃபா டூ பிளெஸிஸ், ஜோஹன் போத்தா, ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், சொட்சோபி, வெய்ன் பார்னெல், அல்விரோ பீட்டர்சன், இம்ரான் தாஹிர், மோர்னி வான் விக்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

காதலில் விழுந்த ஷிகார் தவான்… இன்ஸ்டாகிராமில் அறிவித்து மகிழ்ச்சி!

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

Show comments