ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 4ஆம் நாள் இறுதியில் அல்லது 5ம் நாள் துவக்கத்தில்தான் ஒரு டெஸ்ட் போட்டி டிரா ஆகும் என்று தெரியவரும். ஆனால் இந்தியாவில் கடந்த சில தொடர்களில் முதல் நாளே டெஸ்ட் போட்டி டிரா ஆகும் என்று கணித்து விட முடிகிறது.
இன்னமும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஓரளவிற்கு கூட்டம் வருவது இந்தியாவில்தான். ஆனால் சென்னையில் போடப்பட்ட ஆட்டக்களம் போல் தொடர்ந்து போடப்பட்டால் டெஸ்ட் கிரிக்கெட் இனி மெல்ல.. அல்ல அல்ல வேகமாகச் சாகும ்.
அகமதாபாத் டெஸ்ட்:
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நாளை அகமதாபாதில் 2ஆவது டெஸ்ட் தொடங்குகிறது. இந்த ஆட்டக்களத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள திராஜ் பார்சனா நடு நிலையான ஆட்டகளமாக இருக்கும் என்று கூறியுள்ளார். தற்போது களத்தில் லேசாக புற்கள் உள்ளது. நாளை டெஸ்ட் துவங்கும் முன் இருக்கும் புற்களையும் மழித்து விட்டால், செத்த ஆட்டக்களமாகவே இருக்கும்.
கடந்த முறை ஆஸ்ட்ரேலியா இங்கு வந்த போது பெங்களூரில் இது போன்ற ஆட்டக்களம் தயாரிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலிய அணி மிகப்பெரிய ரன் இலக்கை எடுத்து பின்பு பந்து வீச்சில் ஆஃப் கட்டர்களை வீசி, கள வியூகத்தை ரன் தடுப்பு வியூகமாக அமைத்து, வெறுப்பேற்றி, இந்திய வீரர்களை வீழ்த்தி வெற்றியும் பெற்று விட்டது.
webdunia photo
WD
முழுதும் மழிக்கப்பட்ட செத்த ஆட்டக்களங்களில் பூவா தலையா வெல்லவில்லையெனில் கடினம்தான். ஒரு டெஸ்ட் போட்டியை பூவா தலையாவா தீர்மானிக்கும்? ஆனால் அப்படியும் முடிவுகள் ஏற்படும் என்று கூறமுடியாது.
திராஜ் பார்சானா களம் பற்றி ஏதும் கூற தயங்கி வருகிறார். முதலில் பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும். பிறகு பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக இருக்கும் என்றே கூறியுள்ளார்.
webdunia photo
WD
அகமதாபாதில் சமீபமாக விளையாடப்பட்ட 4 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகள் டிரா ஆகியுள்ளது. இந்தியா இங்கு கடைசியாக டிசம்பர் 2005ல் இலங்கை அணிக்கு எதிராக விளையாடியது. கும்ளே, ஹர்பஜன் இருவரும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 259 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வியைத் தழுவியது.
அப்போது இரு தரப்பிலும் சுழற்பந்து வீச்சாளர்களை நம்பியிருந்ததால் எந்த அணியும் சுழற்பந்து ஆதரவு களத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. 1996 ஆம் ஆண்டு ஹேன்சி குரோனியே தலைமையிலான பலமான தென் ஆப்பிரிக்க அணியை சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி இதே மைதானத்தில் வீழ்த்தியது.
அப்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு வெறும் 170 ரன்களே ஆனால் 4ஆம் நாள் ஜவகல் ஸ்ரீநாத் வீசிய அபார பந்து வீச்சினால் 105 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டு தோல்வி தழுவியது. எனவே இந்த ஆட்டக்களம் வேகப்பந்து, சுழற்பந்து இரண்டுக்குமே சாதகமாகவும் அமையலாம்.
1996, 2005 வெற்றிகளுக்கிடையே அகமதாபாத் இரண்டு சோர்வான டிராக்களையே தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2003 முதல் டெஸ்ட் கிரிக்கெட் நிலவரம்
அகமதாபாத்தை மட்டும் நாம் குறை கூற முடியாது. 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு இந்தியாவில் விளையாடிய 21 டெஸ்ட் போட்டிகளில் 10 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.
ஆனால் ஆஸ்ட்ரேலியாவில் இதே காலத்தில் விளையாடப்பட்ட 33 டெஸ்ட்களில் 28 -ல் முடிவுகள் தெரிந்தன. இங்கிலாந்தில் நடைபெற்ற 35 டெஸ்ட்களில் 27-ல் முடிவுகள் தெரிந்தன.
அதாவது ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தில் 80 சதவீத டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தோல்வி முடிவுகள் தெரிந்து விடுகிறது. இந்தியாவில் 50 சதவீத டெஸ்ட் போட்டிகளில்தான் வெற்றி தோல்வி தெரிகிறது.
webdunia photo
WD
முன்பெல்லாம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான, மெதுவான, பந்துகள் தாழ்வாக செல்லும் களங்கள் அமைக்கப்பட்டன. தற்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகாமக அமைக்கப்படுவதில்லை. அகமதாபாதில் கும்ளேயும், ஹர்பஜனும் அசாதாரணமாக பந்து வீசினால் மட்டுமே முடிவுகள் தெரியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் முடிவுகள் கட்டாயம் ஏற்படும் சென்னை டெஸ்டில், செத்த ஆட்டக்களத்தால் வெறும் 25 விக்கெட்டுகளே விழுந்து 1498 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டுமென்றால் அகமதாபாதில் வென்றால்தான் உண்டு. அடுத்ததாக கான்பூர் மைதானம் செத்த ஆட்டக்களத்திற்கும், சோர்வான டிராக்களுக்கும் பேர் போனது.
வீரர்களை பலி வாங்கும் களங்கள்
செத்த ஆட்டக்களங்களால் பந்து வீச்சாளர்களின் தோள்பட்டை, கால் மூட்டுகள், கெண்டைச் சதை பகுதிகள், தொடைப் பகுதிகள், கணுக்கால் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே நெருக்கமான பயணத்திட்டங்கள் வீரர்களின் கடும் சோர்விற்கு காரணமாகின்றன. இது போதாதென்று களங்களையும் வீரர்களை பலி வாங்கும் செத்த ஆட்டக்களங்களாகவா தயாரிப்பது?
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள், நவீன கவர்ச்சிக் கன்னியான ஐ.பி.எல்., இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் இவற்றிற்காக ஆட்டக்களங்களை சாகடிப்பதும் நடைபெற்று வருகிறது.
webdunia photo
WD
ஆஸ்ட்ரேலியாவின் கோட்டையான பெர்த்தில் வெற்றி பெற்ற பிறகும் நல்ல ஆட்டக்களத்தை அமைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தயக்கம் காட்டுகிறது என்றால், ஐ.பி.எல். விளாசல் கிரிக்கெட்டிற்காக டெஸ்ட் போட்டிக் களத்தை சாகடிக்கிறது என்ற குற்றசாட்டையும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் மங்கலாகவே உள்ளது. கிரிக்கெட் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் புதிய பங்குச் சந்தை, இதில் நல்ல கிரிக்கெட்டை அளித்து வரும் டெஸ்ட் போட்டிகள் பலிகடா ஆவது தடுக்கப்படவேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறுவதெற்கெல்லாம் 'ஆமாம் சாமி' போடாமல் முன்னாள் வீரர்களை அழைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை உயர்த்த, நல்ல களங்களை அமைக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.