உலக கிரிக்கெட் வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வீரர் தனிச்சிறப்பான ஆட்டத் திறனுடன் தோன்றுவர்.
நாம் அறிந்த வரையில் டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ், ஆல்வின் காளிச்சரண், விவியன் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர், ஜி.ஆர்.விஸ்வநாத், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் தங்களது தனிப்பட்ட, வேறு எந்த வீரரும் அவர்களை நகல் செய்ய முடியாத, ஒரு திறமையை வெளிப்படுத்தி அற்புத வீரர்கள் என்று பெயர் பெற்றவர்கள்.
webdunia photo
FILE
ஆனால் இந்த வீரர்கள் கையாண்ட முறைகள் அனைத்தையுமே கையாண்டு எந்த ஒரு விதிகளுக்கும் அடங்காமல் படுபயங்கரமாக எதிரணியினரை கதிகலங்க அடித்து வருகிறார் சேவாக். தற்போது விரேந்திர சேவாக் ஆடி வரும் ஆட்டம் கிரிக்கெட்டின் மரபான உத்திகள் அனைத்தையும் உடைத்தெறிவதாய் அமைந்து வருகிறது.
1999 ஆம் ஆண்டு சேவாக் அஜய் ஜடேஜாவின் தலைமையின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடினார். அதில் அவர் அக்தர் பந்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அணியை விட்டு நீக்கப்பட்டு மீண்டும் கங்கூலி தலமையின் கீழ் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார்.
முதன் முதலில் அவர் ஆடிய ஆட்டம் பெங்களூரில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில். அந்த ஆட்டத்தில் சச்சின் ஏற்கனவே துவக்கத்தில் களமிறங்கி சதம் எடுத்துவிட்டுச் சென்றார். ஆனால் பின்னால் களமிறங்கிய சேவாகை அப்போது யாருக்கும் அதிகம் தெரியாது. வர்ணனையாளராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து மட்டும் சேவாகை "இன்னொரு டைனமைட் வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது" என்று வர்ணித்தார். சேவாகும் அதனை நிரூபிக்கும் விதமாக அன்று 35 பந்துகளில் அரை சதம் எடுத்தார்! அந்த ஆஸ்ட்ரேலிய அணியில் கிளென் மெக்ரா, கில்லஸ்பி போன்ற தலை சிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia photo
FILE
அப்போது அவர் தன்னை சச்சின் டெண்டுல்கரின் விசிறி என்று கூறியதோடு, ஆட்டத்திலும் அவரது அதிரடி முறையையே பின்பற்றுகிறேன் என்றார். இன்று சச்சின் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள, துவக்கத்திலேயே எதிரணியினரின் பந்துகளை துவம்சம் செய்யும் சிம்ம சொப்பன துவக்க ஆட்டக்காரராக சேவாக் தொடர்ந்து நீடிக்கிறார். இனிமேலும் அப்படித்தான் ஆடப் போகிறார்.
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நியூஸீலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்ட போது 250 ரன்களுக்கும் அதிகமான இலக்கை குறைந்த ஓவர்களில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில், சேவாக் முதன் முதலாக ஒரு நாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். அன்று அவர் 69 பந்துகளில் 100 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். அன்றுதான் இந்தியாவின் புதிய அதிரடி மன்னன் அன்று பிறந்ததாக அனைவரும் சேவாகை கொண்டாடத் துவங்கினர்.
அவரது முதல் டெஸ்ட் போட்டி மறக்க முடியாத ஒன்று. 2001 ஆம் ஆண்டில் இந்திய அணி நல்ல வீரர்களைப் பெற்றிருந்தும் டெஸ்ட் போட்டிகளில் அயல் நாடுகளில் திணறி வந்த காலக் கட்டம். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக புளூம்ஃபௌன்டெய்ன் மைதானத்தில் அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார்.
இந்தியா 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த வேளையில். தனது நாயகர் சச்சினுடன் இணைந்த சேவாக் அன்று வெளிப்படுத்திய ஆட்டம் தென் ஆப்பிரிக்க அணியினரை அதிசயிக்க வைத்தது.
இவரும் சச்சினும் இணைந்து சுமார் 47 ஓவர்களில் 220 ரன்களை 5வது விக்கெட்டுக்காக சேர்த்தனர். சச்சின் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து விட்ட நிலையில், சேவாக் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி 105 ரன்களைக் குவித்தார்.
அப்போது வேகப்பந்து வீச்சாளர்களை அவர் எந்தவித அச்சமும் இல்லாமல், மரியாதை இல்லாமலும் என்று கூட சொல்லலாம், அடித்து நொறுக்கினார்.
webdunia photo
FILE
இதனால் அவர் அடுத்ததாக வந்த இங்கிலாந்து தொடரில் கங்கூலியால் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். கங்கூலி எடுத்த அந்த வரலாறு காணாத முக்கியமான முடிவுதான் இன்று நாம் பார்க்கும் சேவாக்கை நமக்கு கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கியவர் அணித் தலைவர் கங்கூலி.
ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்று துவண்டிருந்த இந்திய அணியை ஒரு சதம் மற்றும் 80 ரன்களால் சேவாக் உற்சாகமூட்டினார். அதன் பிறகுதான் கங்கூலி அந்த தொடரில் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தார். அந்த நாள் முதல் இந்திய கிரிக்கெட்டின் போக்கு மாறியது என்றால் அது மிகையாகாது.
அதன் பிறகு 2003 உலகக் கோப்பைக்கு முன்னால் ஒரு மோசமான நியூஸீலாந்து தொடரை இந்தியா எதிர்கொண்டது. அதில் ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 5 போட்டிகளில் தோற்றது. இரண்டில் வெற்றி பெற்றது. அப்போது நியூஸீலாந்து அணி இந்தியாவிற்கு அமைத்த ஆட்டக்களம் மிகவும் கர்ண கொடூரமானது. பந்துகள் தாறுமாறாக எழும்பியதோடு சில பந்துகள் மிகவும் தாழ்வாகவும் சென்றது. அத்தகைய ஆட்டக்களத்தில் சேவாக் மட்டுமே சிறப்பாக விளையாடி அந்த தொடரில் இரண்டு சதங்களை எடுத்தார். இந்த இரண்டு சதங்களும் அவரது தைரியத்தையும், அதிரடி மனப்போக்கையும் உலக அணிகளுக்கு எடுத்துக் காட்டியது.
அதன் பிறகு உலக கோப்பை போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. அதில் சேவாக் பல அதிரடி துவக்கங்களை கொடுத்து இந்திய அணி இறுதிக்குள் நுழைய முக்கியமான பங்களிப்புகளை செய்தார். பாகிஸ்தானிற்கு எதிராக அவர் சச்சினுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நினைவை விட்டு அகலாதது. 271 ரன்கள் இலக்கை எதிர்த்து வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், ரசாக் பந்து வீச்சிற்கு எதிராக முதல் 11 ஓவர்களில் இந்தியா 110 ரன்களை எடுத்து அதிரடி துவக்கம் கண்டது. சேவாக் மீண்டும் ஒரு அபாயகரமான வீரர் என்ற தகுதியை எட்டினார்.
இறுதிப் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவை நாம் 300-320 ரன்களுக்கு கட்டுப்படுத்தியிருந்தால் சேவாக் ஆடிய ஆட்டத்திற்கு நம்மை கோப்பையை வெல்லச் செய்திருப்பார். 39 ஓவர்களில் 234 ரன்களை இந்தியா எடுத்தது. சேவாக் அதிரடி 82 ரன்களை எடுத்தார். முதன் முதலில் கிளென் மெக்ராவின் பந்தை கட் செய்து கவர் பாயிண்ட் திசையில் சிக்சருக்கு விரட்டினார் சேவாக்.
2004 ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை பெற்றார். அப்போதுதான் கங்கூலி தலைமை இந்திய அணி ஆஸ்ட்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது அவரும் ஆகாஷ் சோப்ராவும் கொடுத்த துவக்கம் ஆஸ்ட்ரேலிய அணியினருக்கு அதிர்ச்சியளித்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற அடிலெய்ட் டெஸ்டில் எடுத்த 72 மற்றும் 47 ரன்களுடன் மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய அணியின் கடுமையான ஆவேசங்களுக்கு இடையே பாக்சிங் டே டெஸ்டில் முதல் நாள் துவக்கத்தில் களமிறங்கினார்.
webdunia photo
FILE
அன்று அவர் எடுத்த 195 ரன்கள் கிரிக்கெட் பண்டிதர்கள் முதல் உலகின் சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் வரை வாயப்பிளக்கச் செய்தது. ஆஸ்ட்ரேலிய மண்ணில் ஸ்டீவ் வாஹ் தலைமையில் ஒரே நாளில் 325 ரன்களுக்கும் மேல் இந்திய அணி குவித்தது. மேற்கிந்திய அணியின் அதிரடி வீரர் ராய் ஃபிரெட்ரிக்ஸ் ஆடிய முதல் நாள் அதிரடி இன்னிங்சிற்கு பிறகு சேவாக் ஆடியதுதான் மிகச்சிறந்த முதல் நாள் அதிரடி என்று ஆஸி. ஊடகங்களும் ரிச்சி பெனோ, பில் லாரி, இயன் சாப்பல் உள்ளிட்ட கிரிக்கெட் வர்ணனையாளர்களும் புகழ்ந்து தள்ளினர்.
சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவ்ர்ட் மெகில்லிடம் அன்றைய தினம் முடிந்து நிருபர்கள் கேட்டபோது, நான் தவறாக வீசினேன், சரியாக வீசினேன் என்பதெல்லாம் அல்ல, சேவாக் என்னை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதுதான் வேடிக்கை என்றார். அன்று அவரை மட்டுமல்ல மற்ற எந்த வீச்சாளர்களையுமே அவர் ஒரு பொருட்டாக மதிக்காமல் மைதானம் முழுக்க சிதற அடித்தார்.
அந்த தொடரை சமன் செய்து பலத்த மரியாதையுடன் பாகிஸ்தானிற்கு வந்த கங்கூலி தலைமை இந்திய அணி மீண்டும் சேவாகின் திறமையைக் கண்டு வாயடைத்து நின்றது. முல்டான் டெஸ்ட் போட்டியில் முதல் நாளே 228 ரன்களை அராஜக, ஆக்ரோஷ அதிரடியினால் எடுத்த சேவாக், மறு நாள் சக்லைன் முஷ்டாக் பந்தை எந்த வித தயக்கமும் இல்லாமல் சிக்சருக்கு விரட்டி எடுத்து 300 ரன்களை எடுத்து முச்சதம் கண்ட முதல் இந்திய நாயகனானார். அந்த டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றது.
அந்த தொடர் முடிந்த போது அந்த 2004ஆம் ஆண்டில் சேவாக் 12 டெஸ்ட் போட்டிகளில் 1141 ரன்களை 63.38 என்ற சராசரியுடன் எடுத்து உலக வேகப்பந்து வீச்சாளர்களை கடுமையான அச்சுறுத்தல்களுக் குள்ளாக்கினார். ஆனால் அவரது ஒரு நாள் ஆட்டம் இந்த காலக்கட்டத்தில் சற்றே பின்னடவை கண்டது. அந்த ஆண்டு 27 ஒரு நாள் போட்டிகளில் அவர் வெறும் 671 ரன்களை மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2005 ஆம் ஆண்டும் சேவாக் 8 டெஸ்ட் போட்டிகளில் 785 ரன்களை 60.38 என்ற சராசரியுடன் பெற்றிருந்தார். இதில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒரு அபாரமான வெற்றி 154 ரன்களையும், பாகிஸ்தானிற்கு எதிராக கொல்கத்தாவில் வெற்றி 201 ரன்களையும் விளாசி அசத்தியிருந்தார்.
ஜான் ரைட் தனது 4 ஆண்டுகால சிறப்பான இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக, இந்தியா அடுத்த பயிற்சியாளருக்கு வலை வீசி வந்தது.
webdunia photo
FILE
அப்போதுதான் கிரேக் சாப்பல் என்ற சனிப்பெயர்ச்சி இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டது. 2007 உலகக் கோப்பைக்குள் இந்திய அணியை தலைகீழாக மாற்றி விடுகிறேன் பார் என்று உலகை புரட்டிப் போடும் புதிய கிரிக்கெட் தத்துவத்துடன் கிரேக் சாப்பல் பொறுப்பில் அமர்ந்தார்.
அதன் பிறகு நடந்த குழப்பங்கள் ஏராளம். இதில் பலி கடாவானவர் இந்தியாவின் சிறந்த அணித் தலைவர் கங்கூலி, அதன் பிறகு சேவாக், இர்ஃபான் பத்தான், யுவ்ராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஏன் சச்சின் டெண்டுல்கரும் அவரது விஷமமான உத்திகளினால் தங்களது மனோபலத்தை இழக்க நேரிட்டது. அதன் உச்ச கட்ட விளைவு உலகக் கோப்பை 2007இல் ஏற்பட்ட இழிவான முதல் சுற்று வெளியேற்றம்.
சாப்பல் பயிற்சி காலக்கட்டத்தில்தான் பாகிஸ்தானில் சேவாக் 254 ரன்களை அதிரடி முறையில் குவித்து திராவிடுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக இரண்டாவது மிகப்பெரிய துவக்க ரன் எண்ணிக்கையான 407 ரன்களை பெற்றார். ஆனால் இதனையும் மறந்தனர் இந்திய தேர்வுக்குழுவினர்.
ஆனால் அவர் விட்டுச் சென்ற எச்ச சொச்ச கருத்துக்கள் அவர் சென்ற பிறகும் நம்மை விட்டபாடில்லை. ஒரு நாள் போட்டிகளில் சரியாக விளையாடாத சேவாகை டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் இந்திய அணி தூக்கியது. இங்கிலாந்து தொடரில் திராவிட் தலைமையில் ஜாஃப்ஃரும், தினேஷ் கார்த்திக்கும் துவக்க வீரர்களாக களமிறக்கப்பட்டனர். அந்தத் தொடரில் ஜாகீர் கானின் அபாரமான பந்து வீச்சினால் நாம் தொடரை வென்றோம். அதன் பிறகு ஒரு நாள் போட்டிகளில் தோல்வி. திராவிட் விலகி தோனி இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தலைவராக அறிவிக்கப்படுகிறார்.
webdunia photo
FILE
அவர் மீண்டும் சேவாகை அழைக்கிறார். அப்போது துவங்கிய சேவாக் தனது அதிரடி திறமைகளை நிரூபித்தாலும், ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் சேவாக் இல்லை.
அந்த நிலைமை அப்படியே தொடர. அடுத்ததாக கும்ளே தலைமை ஆஸ்ட்ரேலியப் பயணத்தின் போது டெஸ்ட் போட்டிகளில் சேவாக் ஒதுக்கப்பட்டார். ஜாஃபரையும் திராவிடையும் துவக்கத்தில் களமிறக்கி ஒன்றும் நடக்கவில்லை. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு பெர்த் டெஸ்டில் மீண்டும் சேவாக் உள்ளே நுழைகிறார்.
பெர்த்தில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கொடுத்த சிறப்பான துவக்கம் மட்டுமல்லாது, பந்து வீச்சிலும் கில்கிறிஸ்ட், சைமன்ட்ஸ், விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் மிகப்பெரும் பங்காற்றினார். சேவாக் உள்ளே நுழைந்தவுடன் அதுவரை திக்குமுக்காடிக் கொண்டிருந்த திராவிட் பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களை எடுத்தார்.
அதன் பிறகு அடிலெய்ட் டெஸ்டில் முதல் இன்னிக்ஸில் அதிரடி 63 ரன்களை எடுத்த சேவாக் இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை தோல்வியிலில்ருந்து காத்தார். தனது அதிரடி இயல்பை கட்டுப்படுத்தி கொண்டு இரண்டு மணி நேர ஆட்டத்தில் பவுண்டரிகள் எதையும் அடிக்காமல் விக்கெட்டை பாதுகாத்தார் சேவாக்.
webdunia photo
FILE
அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி இங்கு வந்தது. சென்னையில் சேவாக் அன்று ஆடிய ஆட்டத்தை உலக கிரிக்கெட்டில் வேறு எந்த முதல் தர வீரரும் ஆடியிருக்க முடியாது என்று அடித்துக் கூறலாம். உலகின் அதிவேக முச்சதத்தை விளாசினார் சேவாக். நிடினி, ஸ்டெய்ன், காலிஸ் உள்ளிட்ட அபார பந்து வீச்சாளர்களின் பந்துகள் மைதானத்தின் நாலா பக்கமும் சிதறின. 304 பந்துகளில் 42 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் சகிதம் 319 ரன்களில் கடைசியாக ஆட்டமிழந்தார். சுமார் 200 ரன்களை பவுண்டரிகளாகவே அடித்த ஒரு பேட்ஸ்மெனை இனிமேல் உலகம் காணாது.
அதன் பிறகு இலங்கை சென்ற இந்திய அணி அஜந்தா மென்டிஸ் என்ற புரியாத புதிர் வீச்சாளரிடமும் முரளிதரனிடமும் திக்கித் திணறியபோது இரண்டாவ்து டெஸ்டில் அவர் துவக்கத்தில் களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 201 ரன்களை எடுத்தது, கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த சதங்களுல் முதனமை பெறும் என்றால் அது மிகையாகாது. இதிலும் 22 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் அடித்து மொத்தம் 231 பந்துகளையே அவர் சந்தித்தார். ஒரு முனையில் பேட்ஸ்மென்கள் திக்கி திணறியதையும் மறு முனையில் இவர் எல்லா பந்துகளயும் அடித்து நொறுக்கியதும் வியப்பை அளித்தது. ஒரே ஆட்டக் களத்தில் எப்படி இரு வேறு வகையான ஆட்டங்கள் சாத்தியம்? சாத்தியம் என்றார் சேவாக். இரண்டாவது இன்னிங்சிலும் அதிரடி அரை சதம் எட்டினார் சேவாக் இந்தியா அந்த டெஸ்டை வெற்றி பெற்றது.
அந்த 201, 50 ரன்களுக்குப் பிறகு சேவாக் எடுத்த ரன் விவரங்கள் இன்னிங்ஸ் வாரியாக இதோ: 21, 34, 45, 6, 35, 90, 1, 16, 66, 92, 9, 83.
ஒரு நாள் போட்டிகளில் கடைசி 10 இன்னிங்ஸ்களில் சேவாக்: 78, 119, 49, 42, 60, 85, 1, 68, 69, 91.
கடைசியாக அவர் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய 83 ரன்களை பிறருடன் ஒப்பிடுவது கடினம். 387 ரன்கள் இலக்கை இந்தியா எந்த காலத்தில் துரத்தியுள்ளது? கடந்த 25 ஆண்டுகளில் இல்லை என்று கூறிவிடலாம். அவரது இடத்தில் ஜாஃபரோ, தினேஷ் கார்த்திக்கோ இருந்திருந்தால் குறைந்தது நாம் டிரா செய்திருப்போம். இவர் களமிறங்கி நடுவர் "பிளே" என்று கூறியவுடன் ஆரம்பித்த அதிரடி 83 ரன்கள் வரை ஓயவில்லை. டெஸ்ட் போட்டியில் 50 ரன்களை 5 ஆவது ஓவரில் எட்டியது இதுவே முதல் முறை என்றும் நாம் கருத இடமுண்டு.
சென்னை டெஸ்ட் போட்டியை சேவாகின் அந்த மேதைமையான துவக்கம் இல்லையெனில் நாம் வென்றிருக்க முடியாது என்று உறுதிபடக் கூறலாம். இனிமேல் இந்திய அணிக்கு சேவாக் இருக்கும் வரையில் 4வது இன்னிங்ஸில் இலக்கு நிர்ணயிக்க முயலும் கிரிக்கெட் அணிகள் சேவாக் எடுக்கப்போகும் 100 ரன்களை கணக்கில் கூடுதலாக சேர்த்து இலக்கை நிர்ணயிக்கவேண்டும். அதாவது 300 ரன்கள் இந்தியாவிற்கு போதும். ஆனால் சேவாக் இருந்தால் 400 ரன்கள் வேண்டும்... எதிரணிக்கு.
இயன் சாப்பல் ஒரு முறை, "இன்னமும் சிறிது காலத்திற்கு சேவாகும், கம்பீரும் இது போன்ற அதிரடி முறையைக் கையாண்டு உலகப் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் போகிறார்கள், இது இந்திய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தரும்" என்றார்.
இது போன்று பந்து வீச்சாளரின் பெயர், அவரது சாதனை, அவர் எவ்வளவு வேகம் வீசுகிறார், சுழற்பந்து வீச்சாளாயிருந்தால் அவர் எவ்வளவு தூரம் பந்துகளை திருப்புவார் என்று கிரிக்கெட்டின் அடிப்படைகளை உடைத்தெறிந்து பந்து விழும் இடம் அடி என்று உள் மனது கூறினால் அடிப்பது இதுவே சேவாகின் எளிமையான ஆனால் பயங்கரமான உத்தி.
2008 ஆம் ஆண்டில் இன்னமும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ள நிலையில் அவர் 13 டெஸ்ட் போட்டிகளில் 60.20 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இந்த ஆண்டில் 18 போட்டிகளில் 893 ரன்களை 50 ரன்களுக்கு சற்று குறைவான சாராசரியுடன் எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் சிறந்த வீரர் விருதும், ஐ.சி.சி. சிறந்த பேட்ஸ்மென் விருதும் சேவாகிற்கு வழங்கப்படுவதே நியாயம். அவர் பெறப்போவதும் நிச்சயம்.