பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், மொஹாலி விளையாட்டரங்கிலிருந்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் ஓடி வந்து எம்பிக் குதித்து பந்து வீசுவது போல் உள்ள மிகப்பெரிய புகைப்படத்தை அகற்றியுள்ள செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
திடீரென கபில் தேவின் புகைப்படம் அகற்றப்பட்டது பற்றி பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் செயலரிடம்
webdunia photo
FILE
கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்த புகைப்படத்திற்கு வேறு ஒரு "பொருத்தமான" இடம் பார்த்து வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் மிகப்பெரிய இந்த அரிய புகைப்படத்தை அகற்றுவதன் நோக்கம் குறித்து கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்தியன் கிரிக்கெட் லீகை துவக்கி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அவர் பகைத்துக்கொண்டததற்காக அவரது புகைப்படத்தை அகற்றி பி.சி.சி.ஐ. தனது பழி வாங்கும் செயலை தொடர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற போட்டி அமைப்பைத் துவக்கி அதற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே கபில் தேவ் உட்பட அதில் விளையாடும் பல வீரர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் பல கேவலமான வேலைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) செய்து வருகிறது.
ஐ.சி.எல். உடன் இணைந்த முன்னாள் வீரர்களின் ஓய்வூதியத் தொகையை நிறுத்தியதிலிருந்து துவங்கி, ஐ.சி.எல். அணிகளில் விளையாடும் உள் நாட்டு வெளி நாட்டு வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. மற்றும் வெளி நாட்டு வாரியங்கள் அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் வேறு எந்த அதிகார பூர்வ போட்டிகளிலும் பங்கேற்க முடியாமல் செய்து விட்டது பி.சி.சி.ஐ.
மேலும் ஐ.சி.எல்-லில் விளையாடும் இளம் இந்திய வீரர்கள் பணியாற்றும் அலுவலகங்களுக்கு கிரிக்கெட் தினத்தன்று அவர்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டாம் என்றும் பி.சி.சி.ஐ. கூறியுள்ளது. இதனை கபில்தேவ் வன்மையாக கண்டித்திருந்தார் என்பதும் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளே.
சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 போட்டிகளில், ஐ.பி.எல். இறுதிப் போட்டிகளில் விளையாடிய அணிகள் உட்பட ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் உள் நாட்டு இருபதுக்கு 20 போட்டியில் இறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் மோதவுள்ளன.
இப்போது அந்த உள் நாட்டு கிரிக்கெட் அணிகளில் ஐ.சி.எல். வீரர்கள் இருந்தால் அவர்கள் சாம்பியன்ஸ் லீகில் விளையாட தடை விதிக்கப்படும் என்று ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி கூறியுள்ளார்.
இப்படி வந்த செய்திகள் போக, மறைமுகமாக ஐ.சி.எல். கிரிக்கெட்டையும், அதில் விளையாடும் வீரர்களையும் கடுமையாக ஒடுக்குகிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
மொஹாலியில் நடைபெறும் எந்த சர்வதேச போட்டிகளுக்கும் கபில் தேவ் அழைக்கப்படுவதில்லை. மொஹாலி மட்டும்தானா அல்லது பிற மைதானங்களிலும் கபில் நுழைவதற்கு ஏதாவது மறைமுக தடை உத்தரவுகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இந்தப் பின்னணியில் பார்த்தோமானால் கபில்தேவ் புகைப்படம் அகற்றப்படுவதும் பி.சி.சி.ஐ-யின் மோசமான, சிறுபிள்ளைத்தனமான பழிவாங்கும் செயலாகத்தான் இருக்கவேண்டும்.
அதாவது, இந்திய கிரிக்கெட்டிற்கு ஒருவர் என்ன சேவை வேண்டுமானாலும் செய்திருக்கலாம் - டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரக இருக்கலாம், 1983 உலகக் கோப்பையை வென்றிருக்கலாம், இந்திய கிரிக்கெட்டிற்கு திருப்பு முனையாக இருந்திருக்கலாம், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கலாம் - ஆனால் பி.சி.சி.ஐ -யை பகைத்துக் கொண்டால் அவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவரது நினைவுச் சின்னங்கள் அகற்றப்படும். அவரை சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடக்கும்.
கபில்தேவை இந்திய கிர்க்கெட் வரலாற்றிலிருந்து அகற்றும் வீணான முயற்சியில் பி.சி.சி.ஐ. இறங்கியுள்ளது. அதாவது கபில் தேவ் இந்திய கிரிக்கெட்டிற்கு செய்த பங்களிப்பு, அவரது ஆட்டம், சாதனை இவை அனைத்தும் நாங்கள் அங்கீகரிக்கவில்லையெனில் ஒன்றுமே இல்லை. இதுதான் பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கை மூலம் தெரிவிப்பது.
முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவர்களது பங்களிப்பிற்காக அவர்கள் சம்பாதித்தது அல்ல, மாறாக பி.சி.சி.ஐ. அவர்களுக்கு அளிக்கும் உதவித் தொகை, எனவே அதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்த உத்தரவிடலாம். இதுதான் பி.சி.சி.ஐ. கட்டமைக்கும் அதிகார மையம்.
கபில் தேவை கிரிக்கெட் ரசிகர்களின் நினைவிலிருந்து அகற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஐ.சி.எல் வீரர்களை ஒடுக்கும் மலிவான செயல்களால் 22 வயதே ஆகும் ஹைதராபாத் அதிரடி வீரர் அம்பாட்டி ராயுடு போன்றவர்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெறாமல் செய்யக் கூடிய ஒரு அராஜகப் போக்கு கண்டிக்கத்தக்கது.
நம்மில் பலர் சிறு வயதில் செய்தித் தாளிலிருந்து கபில் தேவ் பந்து வீசுவது போல் உள்ள அந்தப் புகைப்படத்தை கத்தரித்து நம் வீட்டு சுவர்களில் ஒட்டி வைத்திருக்கும் பழக்கம் உடையவர்கள். அந்த புகைப்படத்தை அவரது சொந்த மண்ணிலிருந்தே அகற்ற பி.சி.சி.ஐ. துணிந்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முந்தைய சாதனையாளரை நம் நினைவிலிருந்து அகற்ற பி.சி.சி.ஐ. முயற்சி செய்வது அபாயகரமான செயல் என்றால், அதை விட அபாயம் அம்பாட்டி ராயுடு உள்ளிட்ட இளம் வீரர்கள் எதிர்கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற முடியாமல் செய்வதும்.
ஒரு புறம் கிரிக்கெட்டை தனியார் மயப்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டும் போக்குடன், சக கிரிக்கெட் அமைப்பை பகையாக கருதி ஒடுக்கும் எதேச்சதிகார அரசியலையும் பி.சி.சி.ஐ. ஒருங்கே செய்து வருகிறது என்பதும் உண்மை.