உலகக் கோப்பை வென்ற இந்திய நாயகனும் உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான கபில்தேவிற்கு இன்று 50ஆவது பிறந்த நாள்.
50 ஆண்டுகளுக்கு முன்பு, 1959ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி கபில்தேவ் நிகாஞ்ச் பிறந்த போது ஒருவருக்கும் தெரியாது இவர் இந்தியாவின் கிரிக்கெட் கனவாகிய உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்றுத் தருவார் என்று.
உலக கிரிக்கெட்டில் குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில் எந்த மூலையில் இருக்கிறது என்று கூட தெரிந்திராத இந்திய அணிக்கு 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை என்ற கனவுக்கோப்பையை பெற்றுத் தந்து, அதன் பிறகான இந்திய கிரிக்கெட் மனோபாவத்தையே மாற்றினார் கபில்தேவ்.
இவரது பன்முகத்திறமையையும், அணியை முன்னின்று நடத்திய திறமையையும் அங்கீகரிக்கும் விதமாக இந்த நூற்றாண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற விஸ்டன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 8 ஆட்ட நாயகன் விருதுகளையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 தொடர் நாயகன் விருதுகளையும் இவர் தட்டிச் சென்றுள்ளார்.
webdunia photo
WD
1983 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயிற்கு எதிரான அந்த புகழ் பெற்ற உலகக் கோப்பை போட்டியில் 9/4 என்ற நிலையில் களமிறங்கி 5ஆவது விக்கெட்டாக ரோஜர் பின்னியை இழந்த பிறகு 17/5 என்ற நிலையிலிருந்து சற்றும் எதிர்பாராத 175 ரன்களை விளாசி கிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்கச் செய்தார் கபில். அந்த இன்னிங்ஸ் இல்லையென்றால் அந்த உலகக் கோப்பை நமக்கு கிடைத்திருப்பது சந்தேகம்தான்.
இன்று எவ்வளவோ பெரிய இன்னிங்ஸ்களை உலக கோப்பை கிரிக்கெட் கண்டபோதிலும் இதற்கு இணையாக எந்த ஒரு இன்னிங்ஸும் பேசப்படுவதில்லை என்றால் அந்த இன்னிங்ஸின் மகத்துவம் என்ன என்பதையே இது காட்டுகிறது. டான் பிராட்மேன் முதல் இன்றைய சந்தர்பால், கிரேம் ஸ்மித் வரை அனைத்து வீரர்களின் ஆட்டங்களையும் நாம் வீடியோவில் பார்க்க முடியும் போது கபில்தேவ் ஆடிய அந்த 175 ரன்கள் இன்னிங்ஸை மட்டும்
நாம் காணமுடியவில்லை. அன்று லண்டனில் வீடியோ நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்ததால் இந்த போட்டியில் வீடியோ பதிவு உலகில் யாரிடமும் இல்லை.
மாமேதையின் அந்த அதிரடி இன்னிங்ஸை பார்க்க முடியாமல் போனது உலக கிரிக்கெட் ரசிகர்களின் துரதிர்ஷ்டம்தான்.
webdunia photo
WD
இவரை பற்றி மேற்கிந்திய அதிரடி மன்னன் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியது கபில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாய் அமைந்தது. "அதாவது எப்போது மட்டையை சுழற்றிக் கொண்டு கபில் களமிறங்கினாலும், லாய்டும் நானும் என்ன நடக்கப்போகிறதோ என்ற திகிலுடனேயே இருந்திருக்கிறோம்" என்றார்.
ஸ்கென் வார்ண் தனது சிறந்த முதல் 50 வீரர்கள் பட்டியலில் கபில்தேவை குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட்டின் ஆரம்பக் காலத்தில் இவர் வேகப்பந்து வீச்சை பயிற்சி செய்யும்போது சில முன்னாள் வீரர்கள் இவரை "இந்தியாவிலிருந்து வேகப்பந்து வீச்சா?" என்று கேலி பேசி உதாசீனம் செய்தனர். அதனையும் உடைத்தெறிந்தார்.
webdunia photo
WD
இவரை ஆல்ரவுண்டர் என்று கவாஸ்கர் வர்ணித்த போது இங்கிலாந்து அணித் தலைவர் மைக் பிரியர்லீ சற்று கேலியாக போத்தமுடன் ஒப்பிடும் அளவிற்கு இவர் ஒன்றையும் சாதிக்கவில்லை என்றார். இதனையும் உடைத்தெரிந்தார் கபில்.
மேற்கிந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை 1982இல் விளையாடியபொழுது, 'டெஸ்டில் கிழித்தாகி விட்டது அடுத்து ஒரு நாள் போட்டி வேறா?' என்று மூத்த கிரிக்கெட் ரசிகர்கள் கேலி பேசினர். பெர்பைஸ் ஒரு நாள் போட்டியில் 282 ரன்களை 47 ஓவர்களில் இந்தியா குவித்தது. அதில் கபில் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் சகிதம் 72 ரன்களை விளாசினார். அன்று அணித்தலைவராக இருந்த கபில் 4ஆவது வீரராக முன் கூட்டியே களமிறங்கினார். பின்பு முதல் ஓவரில் கார்டன் கிரீனிட்ஜ் விக்கெட்டை வீழ்த்தி அந்த போட்டியை வெற்றி பெற வைத்தார் கபில்.
webdunia photo
WD
முதன் முறையாக, வெற்றி பெற முடியாத மேற்கிந்திய அணிக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியவர் கபில். அந்த போட்டி முடிந்தவுடன் கிளைவ் லாய்ட் தனது அணிக் கூட்டத்தில் உலகக் கோப்பைக்கு இன்னமும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில் இந்தியாவின் இந்த வெற்றியை நம்மை சிந்திக்க வைத்துள்ளது என்று கூறினார். மேலும் இது இனிமேல் நடக்க அனுமதிக்கக்கூடாது என்று கடிந்தும் கொண்டார்.
அதன் பிற்கு 1983 உலகக் கோப்பை வெற்றி இன்றைய வரலாறாகி விட்டது. அதன் பிறகே இந்தியாவின் கிராமப்புறங்களுக்கெல்லாம் கிரிக்கெட் பிரபலமடைந்தது.
இன்று இந்திய கிரிக்கெட் எட்டியுள்ள புதிய உயரத்த்திற்கு அடிக்கல் நாட்டியவர் கபில்தேவ். அவருக்கு இன்று 50வது பிறந்த நாள். இந்தியாவை உலக கிரிக்கெட் அரங்கில் தலை நிமிரச்செய்த இவரை நாமும் வாழ்த்துவோம்.