Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். கண்டெடுத்த முத்துக்கள்!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (16:54 IST)
2007 உலகக் கோப்பையில் இளம் வங்கதேச அணி நட்சத்திரங்கள் மிகவும் மூத்த இந்திய அணியை தோற்கடித்ததால் முத‌ல் சுற்றிலேயே வெளியேறி தொங்கிய முகத்துடன் இந்தியா வந்து இறங்கியதும், அணியின் மூத்த வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

இந்த விமர்சனங்களுக்கு ஒவ்வொரு மூத்த வீரரும், இவர்களை ஆதரிக்கும் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட வர்ணனையாளர் கூட்டமும் தங்களுக்கேயுரிய பாணியில் பதிலளித்தனர்.

webdunia photoWD
ஆனால் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பெரும்பாலான இவர்களின் கருத்துக்கள், நாட்டில் அவ்வளவு இளம் திறமைகள் இல்லை என்பதாகவே இருந்தது. சச்சின் வெளிப்படையாகவே ‘தான் பார்த்த வரையில் இளம் வீரர்கள் எவரும் உயர்மட்ட கிரிக்கெட்டை ஆடும் திறமை கொண்டிருக்கவில்ல ை ’ என்று கூறியிருந்தார்.

அதன் பிறகுதான் இன்றைய ஐ.பி.எல். இருபதுக்கு20 கிரிக்கெட்டிற்கு வித்திட்ட ஐ.சி.எல். கிரிக்கெட்டை கபில்தேவ் அறிவிப்பு செய்தார். அதிலும் அம்பாட்டி ராயுடு, முன்னாள் வீரர் ரோஜர் பின்னியின் வாரிசு உள்ளிட்ட பல இளம் வீரர்களின் திறமையான ஆட்டத்தை நாம் காண முடிந்தது.

இப்போது ஐ.பி.எல். இருபதுக்கு20 போட்டிகளை பார்க்கும்போது சச்சின், திராவிட், கங்கூலி, லக்ஷ்மண், யுவ்ராஜ், ஜாகீர், அகார்கர் அடங்கிய இந்திய அணிக்கு மற்றுமொரு மாற்று அணியையும், இந்த மாற்று அணிக்கு இளம் துணை வீரர்கள் கொண்ட அணியையும் பட்டியலிட முடியும் என்பது தெளிவாகியுள்ளது.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் ஸ்வப்னில் அஸ்னோட்கர், எவருக்கும் அஞ்சாத யூசுஃப் பத்தான், முடிவு ஓவர்களில் வெளுத்துக் கட்டும் நீரஜ் படேல், ஆர். ஜடேஜா போன்ற வீரர்களை இனிமேலும் ஒதுக்கிவிட முடியாது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெருக்கடி தருணங்களிலும் பதட்டமடையாமல் வீசிய மன்ப்ரீத் கோனி, அதிகம் அறியப்படாத, ஆனால் திறமையை நிரூபித்த பழனி அமர்நாத், பத்ரிநாத் ஆகியோர் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அனைத்திற்கும் மேலாக கிரிக்கெட் அவ்வளவுதான்.. முடிந்து விட்டது என்று நினைத்திருந்த லட்சுமிபதி பாலாஜி மீண்டும் பந்து வீசி ஹாட்ரிக் எடுத்தது என்று ஐ.பி.எல் நிறைய கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சித்தார்த் திரிவேதி என்ற வேகப்பந்து வீச்சாளருக்கு வயது 25தான் ஆகிறது. 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது 24 வயது இருந்திருக்கும். இவர் ஐ,பி.எல் போட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கருக்கு வீசிய ஒரு ஓவர் மறக்க முடியாதது. சச்சினை கட்டிப்போட்ட இவர், பிறகு அதே ஓவரில் அவர் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

சாலுன்கே என்ற லெக் ஸ்பின்னரின் திறமை ஷேன் வார்ன் என்ற கேப்டன் மூலமே நமக்கு தெரிய வந்துள்ளது.

டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் சேவாக்கும், காம்பீரும் கொடுக்கும் அதிரடி துவக்கம் கெடாமல் பராமரித்து பிறகு வெளுத்து வாங்கிய ஷிகார் தவான், மிதுன் மனாஸ், பந்து வீச்சில் இந்த அணியில் அமித் மிஷ்ரா, சென்னை அணி உரிமைதாரர் ஏலம் எடுக்கத் தவறிய யோ மகேஷ் ஆகிய நீண்ட பட்டியல் கொண்ட இளம் திறமைகள் உண்மையில் ஐ.பி.எல். கண்டெடுத்த முத்துக்கள் என்றால் மிகையாகாது.

இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சங்வான், வலது கை வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங், ஆல் ரவுண்ட் திறன் படைத்த பியூஷ் சாவ்லா.

கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடிய வேகப்பந்து வீச்சாளர் டிண்டா, அழிந்துவரும் இடது கை சுழற்பந்து வீச்சிற்கு நம்பிக்கை அளிக்கும் இக்பால் அப்துல்லா, இளம் விக்கெட் கீப்பர் விருத்தி ராம் சாஹா. சேதேஷ்வர் புஜாரா, பந்து வீச்சாளர் ரணதீப் போஸ். இப்படி இளம் திறமைகளை கூறிகொண்டே போகலாம்.

இளம் வீரர்கள், ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, மேத்யூ ஹெய்டன், ஆடம் கில்கிறிஸ்ட், ஜாக் காலிஸ், அக்தர், முரளிதரன் போன்ற சிறந்த வீரர்களிடமிருந்து விலைமதிப்பில்லாத அறிவுரைகளை பெறுகின்றனர். இது உள்ளூர் கிரிக்கெட்டில் நடக்காத ஒன்று. இந்த விதத்திலும் ஐ.பி.எல். பயனுள்ளதே.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், திராவிட், லக்ஷ்மண் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவ வீரர்களை காட்டிலும் உள்நாட்டு வெளிநாட்டு புதுமுகங்கள் வெளுத்தி கட்டியுள்ளார்கள். ஆஸ்ட்ரேலிய வீரர்களான ஷான் மார்ஷ், போமர்பாஷ் ஆகியோரை மறக்க முடியாது.

கங்கூலி மட்டுமே வயதான மூத்த வீரர்களில் அதிரடியை காண்பித்து ரன்களை எடுத்தார். இளம் மூத்த வீரர்களான சேவாக், கம்பீர் ஆகியோரை இனிமேலும் ஒரு நாள் அணியில் தேர்வு செய்யாமல் இருந்தால் அதற்கு கிரிக்கெட் அல்லாத பிற காரணங்களுக்காகவே இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

இப்போது வெளிப்பட்ட திறமைகள் திடீரென வானத்திலிருந்து குதித்துவிட்டதா என்ன? ஒரு ஆண்டிற்கு முன் 2007 உலக கோப்பை போட்டிகளின் போது இந்த திறமைகள் என்ன காட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்ததா? இல்லை. மூத்த வீரர்கள் எவரும் இளம் திறமைக்கு ஒரு துளி இடம் கூட விடக்கூடாது என்ற பிடிவாதப் போக்கை கடைபிடித்தனர் என்பதால்தான் அவர்கள் அணிக்குள் வர முடியவில்லை.

இதனை மூடி மறைத்து நாட்டில் திறமைகள் போதுமான அளவிற்கு இல்லை என்று சச்சின், திராவிட், கங்கூலி, வெங்சர்க்கார், வடேகர் என எல்லோரும் கையை நம் முன் விரித்து நம்மை ஏமாற்ற நினைத்தனர்.

webdunia photoFILE
இனிமேலும் அணித் தேர்வுப் பித்தலாட்டங்கள் செய்துவிட்டு தேர்வுக் குழுவும் வாரியமும் தப்பிவிட முடியாது, இன்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஐ.பி.எல். பரவியதன் காரணமாக சச்சின், திராவிட், கங்கூலி, யுவ்ராஜ் என்ற பெயர்களின் புழக்கங்கள் போய் அஸ்னோட்கர், ரோஹித் ஷர்மா, ஜடேஜா, ஷிகார் தவான், அகில், நீரஜ் படேல், யூசுஃப் பத்தான், கோ‌னி போன்ற பெயர்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

ஒருபுறம் இளம் வீரர்கள் பாய்ச்சலான கிரிக்கெட்டை விளையாட யுவ்ராஜ் போன்ற மூத்த வீரர்களின் ஆட்டம் மங்கிப்போயுள்ளது. ஃபீல்டிங்கில் கூட யுவ்ராஜ் சோபிக்கவில்லை. அவரது உடல் அமைப்பும் ஒரு விளையாட்டு வீரர் என்ற தோற்றத்திலிருந்து விலகி‌க் கொண்டிருக்கிறது.

அவருக்கு பதிலாக ஐ.பி.எல். இளம் திறமை ஒருவரை தேர்வு செய்யலாம். சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான், அபிஷேக் நாயர், ஜடேஜா ஆகியோருக்கு சுழற்சி முறையில் வாய்ப்புகள் தரலாம், பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மாவுடன் பந்து வீச டிண்டா, திரிவேதி, மன்ப்ரீத் கோனி என்று நிறைய பந்து வீச்சளர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யலாம்.

ஒரு விதத்தில் வங்கதேச பயணத்திற்கும், ஆசியக் கோப்பை போட்டிகளுக்கும் சச்சின் டெண்டுல்கர் விளையாட முடியாமல் போனது நல்லதுதான். ஆனால் ஒரு மூத்த வீரருக்கு பதில் இன்னொரு மூத்த வீரர்தான் என்ற ரீதியில் தேர்வுக் குழு யோசிக்குமானால் விரயம்தான். இனிமேலும் தயங்காமல் புதுமுகங்களை இறக்கித்தான் ஆகவேண்டும்.

இல்லையெனில் ஊடகங்கள் மட்டுமல்லாது தற்போது ஐ.பி.எல். ஏற்படுத்திய தாக்கத்தால் பொது மக்களின் கேள்விகளுக்கும் கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

எனவே ஐ.பி.எல். கிரிக்கெட்டினால் பின்னணியில் இருக்கும் இளம் திறமைகள் முன்னிலை பெற்றுள்ளன என்ற நல்ல காரியம் நடந்துள்ளது.

இந்த காரணத்திற்காகவே, ஐ.சி.எல். உடன் விரோதப் போக்கை கடைபிடிக்காமல், அதில் விளையாடி வரும் திறமையான உள்ளூர் விரர்களையும் அரவணைக்க வேண்டும் என்பது நம் கோரிக்கை.

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

ஷமிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்… அதில் இருந்தது என்ன?- காவல்துறையில் புகார்!

ரிஷப் பண்ட் உடனடியாக இதை செய்யவேண்டும்… சேவாக் அட்வைஸ்!

Show comments