Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.சி.சி. பதவியில் சிவராமகிருஷ்ணன்! ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்? ஓர் அலசல்!

Webdunia
திங்கள், 13 மே 2013 (18:30 IST)
FILE
ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியில் முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் வீரர்கள் பிரதிநிதியாக டிம் மே-யை பின்னுக்குத் தள்ளி வாக்கெட்டுப்பில் வெற்றிபெற்றது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சைகளைக்கிளப்பியுள்ளது.

டிம் மே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் இந்த எஃப்.ஐ.சி.ஏ.என்கிற வீரர்கள் யூனியனில் இந்திய வீரர்கள் ஒருவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என்பதை விட பிசிசிஐ மீது அதிக சந்தேகங்களையே கிளப்புகிறது.

வாக்கெடுப்பு ஏற்கனவே நடந்து முடிந்து டிம் மே 9- 1 என்ற வாக்குகள் கணக்கில் வெற்றிபெற்றார். இந்த நிலையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தியதில் எல்.சிவராமகிருஷ்ணன் வெற்றிபெற்றார். ஏன் மீண்டும் வாக்கெடுப்பு? இதுதான் மையப்பிரச்சனை.

ஐ.சி.சி. என்ன கூறுகிறது என்றால் குழப்பத்தை தவிர்க்கவே என்கிறது. என்ன குழப்பம்? சில அணிகளில் ஒருநாள், T20, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு வேறு வேறு கேப்டன்கள் உள்ளனர். வாக்கெடுப்பு 'டை' ஆனால் யாரை வக்குப்போடவைப்படு என்ற குழப்பத்தினால் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தினோம் என்றார்கள். ஆனால் மீண்டும் 'டை' ஆகவேயில்லை. சிவராம கிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

அது எப்படி டிம் மே-யிற்கு வாக்களித்தவரகள் அவரை வெளியேற்ற வாக்களித்திருப்பார்கள்? இதுதான் மையப்பிரச்சனை இங்குதான் பிசிசிஐ.-யின் அதிகார கோர அரசியல் விளையாடியிருக்கும் என்று டிம் மே-யும் வீரர்கள் யூனியன் பிரதிநிதிகளும் சந்தேகம் கொண்டு ஐசிசி-யையும், பிசிசிஐ-யும் கிழித்து எடுக்கிறார்கள்.

இதற்கெல்லாம் எந்த ஒரு நியாயமான பதில்களையும் இருதரப்புமே அளிக்கவில்லை. நியாயமாகத்தான் மறுவாக்கெடுப்பு நடந்தது என்றும் இந்திய பணத்தை நம்பியிருக்கும் இலங்கை, பாகிஸ்தான் வாரியங்கள் மற்றும் ஏழை நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் ஆசியர் வந்தால் இப்படித்தான் கூறுவார்கள் என்றும், ஆஸ்ட்ரேலியர்கள்தான் இருக்கவேண்டுமா என்றும் பேசி பிரச்சனையை திசை திருப்புகின்றனர்.

பிரச்சனை சிவராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டது பற்றியே அல்ல. மாறாக மறு வாக்கெடுப்பு ஏன்? அதில் பிசிசிஐ மற்ற நாட்டு வாரியங்களை மிரட்டி அதன் கேப்டன்களை சிவராமகிருஷ்ணனுக்குச் சாதகமாக வாக்களிக்க வைத்ததா? என்றே மற்றவர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் சிவராமகிருஷ்ணனுக்கு அவ்வாறான ஒரு பொறுப்பை வகிக்க எந்த ஒரு தகுதியும் இல்லை என்பதும் உண்மைதான். இதுவரை எந்த ஒரு விவகாரம் பற்றியும் எந்த ஒரு உருப்படியான கருத்தையும் அவர் வெளியிட்டுவிடவில்லை. மேலும் பிசிசிஐ-யிலும் எந்த வித பொறுப்பிலும் இருந்ததில்லை. அவரைப் போய் திடீரென வீரர்கள் பிரதிநிதியாக வெற்றிபெறச் செய்தால் அது எந்த விதத்தில் நியாயம் என்றும் ஒரு புறம் கேள்விகளும் எதிர்ப்புகளும் எழும்பி வருகின்றன.

இந்த இடத்தில்தான் இந்தியா தனது பண பலத்தைப் பயன்படுத்தி ஐசிசி. நிர்வாகத்தையே மிரட்டி வருவதாக குற்றசாட்டுகள் கிளம்பியுள்ளன. இது இப்போது எழுந்ததல்ல நீண்ட காலமாகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் ஆங்காங்கே எழும்பிய வண்ணம் உள்ளன.

ஐசிசி.நிர்வாகத்தை சீரமைக்க உல்ஃப் கமிட்டி என்று ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளை அனைவரும் ஏற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் மட்டும் ஏற்கவில்லை. காரணம் அது முதலில் பிசிசிஐ தலைவராக இருந்துகொண்டே ஐசிசி இயக்குனராகவும் இருக்கும் அவரது இரட்டைப் பதவியை விமர்சனம் செய்தது. தனித்தனியான சுதந்திர குழுக்களை ஒவ்வொரு விவகாரத்திற்கும் அமைக்கவேண்டும் என்றெல்லாம் அது நிறைய பரிந்துரைகளை செய்தது. ஆனால் அந்தப் பரிந்துரைகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடும் என்று அஞ்சி இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த உல்ஃப் அறிக்கையை நிராகரித்தது.

FILE
ஏன் பிசிசிஐ-யைக் கண்டு இத்தனை அச்சம், தயக்கம் என்பதே அங்கு எழும் ஒரு கேள்வி.

உதாரணத்திற்கு இந்தியா ஒரு நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்ல் அந்தந்த வாரியங்களுக்கு கிடைக்கும் விளம்பர, தொலைக்காட்சி ஒளிபரப்பு வருவாய் என்பது பயங்கரமானது. அதனை எந்த நாடுகளும் இழக்க விரும்பவில்லை.

ஹர்பஜன் சிங் - ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் விவாகரத்தின் போது இந்தியா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொள்வோம் என்று கூறியதாக பேச்சு எழுந்தது. அவ்வாறு நடந்திருந்தால் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் 60மில்லியன் டாலர்கள் வருவாயை இழக்க நேரிட்டிருக்கும்.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியாவுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று இந்தியா முடிவெடுத்தால் அவ்வளவுதான் அந்த வாரியங்கள்! என்று இந்தியா நினைக்கிறது. ஆனால் இதில் தென் ஆப்பிரிக்கா தவிர ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து மிகவும் பண பலம் உள்ளதுதான், சொந்த காலில் நிற்கக்கூடியவைதான்! இருப்பினும் இந்தியாவை ஐசிசி.ஆதிக்கத்தில் எதிர்க்க தயக்கம் காட்டுகின்றனர்.

இதற்கிடையே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிருபர் நீல் மாந்ராப் கூறியுள்ளது அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் கிரேம் ஸ்மித்திடம் 3 முறை மறு வாக்களிப்பு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது என்கிறார் மாந்ராப். அவரும் 3 முறையும் சிவராமகிருஷ்ணனுக்கு வாக்களிக்காமல் டிம் மே-யிற்குத்தான் வாக்களித்துள்ளார்.

ஒரு கேப்டன் கூறியதாக மேந்ராப் கூறியுள்ளது மேலும் பிசிசிஐ மீது சந்தேகத்தையே வலுக்கச் செய்துள்ளது. வாக்களித்தவுடன் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டதாம், வாக்கெடுப்பு ரகசியமானது. யாருக்கு வாக்களித்தீர்கள் என்றால் என்ன அர்த்தம்? என்கிறார் அவர். அதாவது ஒன்று அவர் வாக்கை மாற்றி போடவேண்டும், இல்லையேல் அணியில் தொடர்ந்து விளையாடுவதே பிரச்சனையாகிவிடும் என்று அவர் உணர்ந்ததாக மாந்ராப் கூறியுள்ளார். டிம் மே உலக வீரர்களின் பெரும்பகுதியை பிரதிநிதித்துவம் செய்கிறார். ஆனால் இந்தியாவுக்கு டிம் மே-யை ஏனோ பிடிக்கவில்லை போல் தெரிகிறது.

இவ்வளவு பிரச்சனைகளை எழுப்பும் ஐசிசி. கிரிக்கெட் கமிட்டி ஒரு வெத்துவெட்டு கமிட்டிதான். அந்த கமிட்டியினால் இன்று வரை நடுவர் மேல்முறையீட்டுத் திட்டத்திற்கு இந்தியாவை சம்மதிக்க வைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

யாராவது ஒருவர் பலமாக எழுந்து நின்று பிசிசிஐ-யின் அதிகாரத்தையும் அதன் கோணங்கி அரசியலையும் கேள்வி கேட்கவேண்டும்?

ஐசிசி.யின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஹாரூன் லோர்கட் ஒரு முறை கூறியது இந்த இடத்தில் சாலப்பொருந்தும்:

" நான் ஆதிக்கம் செலுத்துகிறேன், நான் எனக்கு கிடைக்கவேண்டியதை எப்படியோ பெற்று விடுகிறேன் என்றால் அதற்குக் காரணம் என்னை ஒருவரும் கேள்வி கேட்பதில்லை. ஆகவே என்னை குற்றம் சொல்லாதீர்கள், பலவீனமானவர்கள் தங்களையே குறை கூறிக்கொள்வதுதான் நியாயம்" என்றார்.

ஹரூன் லோர்கட் எப்போது இதை கூறினார் தெரியுமா? இந்தியா கடந்த முறை ஆஸ்ட்ரேலியா சென்று 4- 0 என்று உதை வாங்கியபோது பெர்த் டெஸ்ட் போட்டியின் போது கூறினார் என்று ஆஸ்ட்ரேலிய ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.

பிசிசிஐ.-யினால் உலக கிரிக்கெட் நாடுகளிடையே உள்ள சகோதரத்துவத்தில் விரிசல் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

யாராவது ஒருவர் இதற்கு எதிராக எழுச்சியுறவேண்டும். கேள்விகள் பிறக்கவேண்டும். இந்த மறுவாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்ததாக கூறுபவர்கள் அதற்கான ஆதாரங்களை ஊடகங்கள் மூலம் வெளியே கொண்டு வந்து தகிடுதத்தங்களை வெளியே கொண்டு வர முன்வரவேண்டும். இல்லையேல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி போல் ஐசிசி.யில் பிசிசிஐ ஆதிக்கம் தொடரவே செய்யும்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments